You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான்-3: தரையிறங்கும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தை விக்ரம் லேண்டர் எப்படி சரி செய்தது?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிவிட்டது. மொத்த உலகின் கண்களும் இஸ்ரோ மீது பதிந்திருந்த நேரத்தில் இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறது.
ஆனால், தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த 30 விநாடிகளில் என்ன நடந்தது?
விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது என்ன நடந்தது?
இப்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது 800 மீட்டர் என்ற உயரத்தை எட்டும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதிர்பார்த்த அனைத்து அளவுகளுக்கு உள்ளே தான் இருந்துள்ளது என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்ததோடு, பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை என்று கூறும் அவர், ஆனால் 150 மீட்டர் உயரத்திற்குச் சென்றபோதுதான் அது தரையிறங்குவதாக இருந்த இடத்தின் தரைப்பகுதியில் இடர் இருப்பதை உணர்ந்துள்ளது என்று விளக்கினார்.
அதை உடனடியாக உணர்ந்த விக்ரம் லேண்டர், அந்த நேரத்தில் மாற்று இடத்தில் தரையிறங்குவதற்காக பக்கவாட்டில் நகர்ந்தது.
“இது சாதாரணமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இது மிகவும் கூர்மையான, நுட்பமான இடர்.
இறுதி வரை கச்சிதமாக வந்த விக்ரம் தரையிறங்கி கலன், தடம் பதிக்கப் போகும் நேரத்தில் அந்த இடத்தில் இடர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தத் தருணம் ஒரு படபடப்பை ஏற்படுத்திவிட்டது,” என்கிறார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய “18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.”
இந்த மாற்றங்கள் காரணமாக திட்டமிட்ட கால அளவில் 30 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டது. இந்த மாற்றத்தை பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கண்ட விஞ்ஞானிகளின் முகத்தில் படபடப்பு தென்பட்டது என்று கூறும் த.வி.வெங்கடேஸ்வரன், இறுதியில் அதைச் சரிசெய்து லேண்டர் தரையிறங்கியதும் நிம்மதியடைந்தனர் என்கிறார்.
பிறகு தரையிறங்கும் வேகத்தை எதிர்பார்த்த வகையில் சரிசெய்து கச்சிதமான வேகத்தில் தரையைத் தொட்டது. அதேபோல், “தரையிறங்குவதற்கான சென்சார் கருவிகள், வழிகாட்டும் கருவிகள், வேகத்தை அளக்கும் கருவிகள், சேதங்களைக் கண்டறியும் கருவிகள் என அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது,” என்று தெரிவித்தார்.
ரோவர் எப்போது வெளியே வரும்?
இவற்றைவிட இன்னும் விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, விண்கலத்தின் பாகங்களில் என்ன மாதிரியான தாக்கம் தரையிறங்கியதன் மூலம் ஏற்பட்டுள்ளது, அவற்றின் நிலை என்ன என்பன போன்ற தகவல்களைக் கண்டறிவதற்கு உதவும் தரவுகள் இனிமேல்தான் கிடைக்கும்.
தரையிறங்கும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டாலும், ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வரவேண்டும். இந்தச் செயல்முறை இன்று இரவு 8:15 மணிக்குத் தொடங்கும்.
அந்தச் செயல்முறை குறித்து விளக்கிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், “அந்தக் கதவு திறந்து இரண்டு மணிநேரம் கழித்து ஊர்திக்கலனில் இருக்கும் சூரிய மின் தகடுகளை மேலே நிமிர்த்துவார்கள்.
அதன்பிறகுதான் அந்த ஊர்திக்கலன் வெளியே வரும். சாய்வுக் கதவு திறந்தவுடன் ஊர்திக்கலன் வெளியே வந்துவிடாது. சாய்வுக்கதவின் சரிவு எந்த அளவுக்கு உள்ளது, அது பாதுகாப்பானதா என்பன போன்ற தகவல்களை ஆய்வு செய்து, உறுதி செய்த பிறகே சாய்வுக்கதவு வழியாகச் சரிந்து கீழே இறங்கும்,” என்று கூறினார்.
விக்ரம் லேண்டர் தரையிறங்கி சுமார் நான்கு மணிநேரங்கள் கழித்து இந்தச் செயல்முறை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊர்திக்கலன் வெளியே வந்து சுமார் ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் சார்ஜ் ஆன பிறகு, மொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எடுக்கும். தாய்க்கலன் எடுக்கும் ஊர்திக்கலனின் புகைப்படம் மற்றும் சேய்க்கலமான ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான ஊர்திக்கலனை எடுக்கும் புகைப்படம் இரண்டும்தான் இந்தத் திட்டத்தின் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்யும்.
ஆனால், இதுவரைக்கும் 95 சதவீத வெற்றிப்பாதையைக் கடந்துவிட்டதாகவும், இதில்தான் மிகவும் சவாலான கட்டமே இருந்தது என்றும் கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர்.எஸ்.பாண்டியன்.
ஆகவே, இதற்கு மேல் ரோவர் வெளியே வருவது மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் ஆகியவற்றில் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார் எஸ்.பாண்டியன்.
இஸ்ரோவுக்கு முக்கியமான மைல்கல்
இஸ்ரோவுக்கு இதுவொரு முக்கியமான மைல்கல் என்றே சொல்லலாம். ஏனெனில், நிலாவில் மென்மையாகத் தரையிறங்கித் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமில்லை, தென் துருவப்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் கூடவே செய்துள்ளது.
நிலாவின் மேற்பரப்பில் இருந்து 31.5 டிகிரி என்ற தொலைவில் நீள்வட்டப்பாதையில் வந்த விக்ரம் தரையிறங்கி கலன், அதற்குப் பிறகு வந்த அடுத்த 15 நிமிடங்களில் மிகக் கச்சிதமாக அதன் பணியைச் செய்து முடித்தது.
இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் அவர்களிடம் பேசுவது போன்ற ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. “சந்திரயான்-3: நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் இஸ்ரோ அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. அது திட்டமிடப்பட்ட போது இஸ்ரோவுக்கு இருந்த கனவு, அதன் சொந்த முயற்சியில் நிலவை முத்தமிட வேண்டும் என்பது. அந்தக் கனவு 15 ஆண்டுகள் கழித்து இன்று நனவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்