You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முண்டாசுப்பட்டி போல 1970களில் இறந்தவர்களை போட்டோ எடுத்த புகைப்பட கலைஞருக்கு நடந்த சம்பவம்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
திருமணத்திற்கு கேண்டிட் போட்டோ எடுப்பது தற்போது பிரபலமாக உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் இறந்தவர்களை புகைப்படம் எடுப்பது ட்ரெண்டாக இருந்தது.
இறந்த நபரை நாற்காலியில் உட்காரவைத்து உறவினர்கள் புடைசூழ படம் எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருந்தது. இதுபோன்ற இறந்தவர்கள் படத்தை எடுக்க தனி புகைப்பட கலைஞர்களும் இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
இறந்தவர்களை படம் எடுத்த புகைப்படக் கலைஞர்கள் நல்ல சம்பளம் பெற்றாலும், சமூகத்தில் அவர்களின் மதிப்பு என்பது திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை படம் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தது.
இறப்பு தொடர்பான பல நூறு படங்களை 1972 முதல் 1980களின் முற்பகுதி வரை எடுத்த புகைப்படக்காரர் காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ரவீந்திரன்(64) மற்றும் ஏற்காடு பகுதியைச்சேர்ந்த ரிச்சர்ட் கென்னடி ஆகியோரிடம் இறந்தவர்களை படம் எடுத்த அனுபவங்களை கேட்டோம்.
தனது இளமை காலம் முழுவதும் கருப்பு வெள்ளை பிலிமில் பல இறந்த முதியவர்களின் கடைசி படத்தை படம் எடுத்தவர் ரவீந்திரன்.
இறந்தவரின் கண்களை குத்தி எடுத்த படம்
12 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த ரவீந்திரன் தந்தை சீனிவாசன் நடத்திய வாசன் ஸ்டுடியோவில் சம்பளமில்லாத வேலையாளாக சேர்ந்தவர்.
''1972ல் நடந்த கதை இது. என் தந்தையின் ஸ்டூடியோவில் வேலைபார்த்த ஒரு நபர் வேலைக்கு வரவில்லை என்பதால் என்னை உதவியாளராக ஒரு போட்டோகிராபருடன் அனுப்பிவைத்தார். இறந்தவர்களை படம் எடுக்கும்போது, உதவியாளர் இருக்க வேண்டும்.
உதவியாளராக சென்ற என்னுடைய வேலை என்பது, இறந்த நபரை சரியாக உட்கார வைப்பது, தலை சாயாமல் தலையணை வைத்து நிறுத்திவைப்பது, இறந்தவரின் கண்களை குத்திவிட்டு, சில நொடிகள் மூடாமல் பார்த்துக்கொள்வது போன்றவை. இது முதல் அனுபவம்.
இதைத் தொடர்ந்து பல இறப்புகளை படம் எடுக்கும் நிகழ்வுகளுக்கு நான் உதவியாளராக சென்றேன். சில மாதங்களில் நானே படம் எடுக்க தொடங்கிவிட்டேன்,'' என தன் அனுபவ பக்கத்தை திருப்பினார் ரவீந்திரன்.
பல நேரங்களில், பாடையில் உடலை வைத்து, சுடுகாட்டிற்கு கொண்டு செல்வது வரை உறவினர்கள் படம் எடுக்கச் சொல்வார்கள் என்று குறிப்பிடுகிறார் ரவீந்திரன்.
''பலரும் அந்த காலத்தில் உயிருடன் இருக்கும்போது படம் எடுக்க மாட்டார்கள். ஆயுள் குறையும் என்ற மூடநம்பிக்கை அதிகமாக இருந்தது. பலர் வீடுகளில், இறந்தவர்களுக்கு சாமி கும்பிடும் சடங்கின்போது, படம் வேண்டும் என்பதற்காக இறந்த பின்னர், படம் எடுப்பார்கள். ஒரு சில வீடுகளில் எல்லா சடங்குகளை படம் எடுக்கவேண்டும் என்பார்கள். ஒரு சிலர், குடும்பமாக நின்று இறந்தவருடன் படம் எடுத்துக்கொள்வார்கள்.
பல முறை சுடுகாட்டில் உடலை குழியில் கிடத்தி, மண்ணை மூடி, மாலை போடும் காட்சிகளைக் கூட படம் எடுத்திருக்கிறேன். ஒரு சிலருக்கு பூ அலங்காரம் செய்த தேரில் உட்காரவைத்து இழுத்துவருவார்கள். அதனை படம் எடுத்திருக்கிறேன்,'' என இறப்பு படங்களில் வித விதமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் குறித்து விளக்கினார் ரவீந்திரன்.
பெரும்பாலும் முதியவர்களைதான் படம் எடுப்பார்கள் என்றும் இறந்த குழந்தைகள், இளம்வயதினரை படம் எடுக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் அவருடைய உரையாடலில் தெரிந்துகொண்டோம்.
தனது தந்தையிடம் வேலை செய்ததால், சம்பளம் எதுவும் ரவீந்திரன் ஆரம்பக்கட்டத்தில் பெறவில்லை. 1970களில், இறப்பு வீடுகளுக்கு வரும் போட்டோகிராபருக்கு தனியாக காசு கொடுக்கும் முறை இருந்தது என்பதை அவரது உரையாடலில் இருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது. துக்கம் விசாரிக்கவந்த உறவினர்கள் பலர் போட்டோக்ராபருக்கு இரண்டு ரூபாய் கொடுப்பதை பெருமையாக நினைப்பார்கள் என்றும் ரவீந்திரன் நினைவுபடுத்திக் கூறினார்.
புல்லட், ஜாவா வண்டியில் அழைத்துச் சென்ற காலம்
1970களின் பிற்பகுதிவரை, சாதாரண குடும்ப படங்கள் நெகட்டிவ் உடன் பிரிண்ட் போடப்பட்ட படத்தை எடுத்துதர ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறப்பு படத்திற்கு ரூ.70 வரை வசூலிக்கப்பட்டது. கிராமங்களில் முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனே புகைப்படக்காரரிடம் சொல்லி, நல்ல படமாக எடுத்தவர்களும் உண்டு என்பதை ரவீந்திரனிடம் இருந்து தெரிந்துகொண்டோம்.
''இறப்பு புகைப்படங்களை எடுக்கும்போது, பல இறந்தவர்களின் கண்களை நேக்காக குத்திவிட்டு, அவர்கள் விழித்திருப்பது போல, உயிருடன் இருந்த சமயத்தில் எடுத்த படம் போல நான் எடுத்திருக்கிறேன் என்பதால், பலரும் என்னை விரும்பி அழைத்திருக்கிறார்கள். நான் சைக்கிளில் சென்றுதான் படம் எடுப்பேன்.
ஒரு சிலர் முக்கிய பிரமுகர், ஊரில் பெரிய பணக்காரர் போன்றவர்கள் இறந்துவிட்டால், அவசரமாக படம் எடுக்க புல்லட் வண்டி, ஜாவா பைக்கில் வந்து கூட்டிச்செல்வார்கள். அது எனக்கு பெருமையாக இருக்கும். மற்றவர்களுக்கு அது புரியவில்லை.
ஆரம்பக்கட்டத்தில், படம் எடுக்கப்பட்ட இறந்தவர் கனவில் வந்து முழித்து உற்று பார்ப்பது போன்ற கனவுகள் வரும். முதலில் நடுங்கி படம் எடுத்த நான், ஒரு கட்டத்தில், இறந்த நபரின் உடல் என் சப்ஜெக்ட் என்பதால், அழகாக காண்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன்,'' என நினைவலைகளை நம்மிடம் பகிர்கிறார் ரவீந்திரன்.
தனது உறவினர்கள் பலரும் ரவீந்திரனிடம் தங்களது கடைசி படங்களை எடுத்திருக்கிறார்கள். இறந்த பின்னர், சடலமாக படம் எடுப்பதை தவிர்க்க உயிருடன் இருக்கும் கடைசி நாட்களில் நல்ல நிலையில் படம் எடுத்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
மூட நம்பிக்கைகளை எதிர்கொண்ட பயணம்
அடுத்ததாக, சமூகத்தில் இறப்பு புகைப்படத்தை எடுக்கும் புகைப்படக்காரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து கேட்டபோது, சிறிய தயக்கத்துடன் பேசினார்.
‘’நான் இறப்பு தொடர்பான பல படங்களை எடுத்திருப்பதால், பல கஸ்டமர்கள் கூட, சுபநிகழ்ச்சிகளுக்கு நான் படம் எடுப்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு சில குடும்பங்களில் என்னை விலக்கி வைத்த காலமும் உண்டு. அபசகுனமானவர், ராசியில்லை என்று கூட சொல்லியிருக்கிறார்கள். அதனால், ஒரு சில நண்பர்களின் வீடுகளுக்கு கூட நான் செல்லாமல் இருந்திருக்கிறேன்.
ஆனால் ஆள் கிடைக்காமல், நான்தான் படம் எடுக்கவேண்டும் என்ற இக்கட்டான சூழலில், நான் எடுத்த படத்தை வாங்கிச்சென்றவர்கள், என்னை தேடிவந்தார்கள். சமரசமும் பேசியிருக்கிறார்கள், தொடர்ந்து அவர்களின் குடும்ப சுப நிகழ்ச்சிக்கு பிற்காலத்தில் நான் இரண்டு தலைமுறைகளுக்கு எடுத்திருக்கிறேன்,’’என உணர்வுப்பூர்வமாக நம்மிடம் தெரிவித்தார்.
1970களில் இறந்தவர்களை படம் எடுத்த அந்த கேமராவை உடனே சுபநிகழ்ச்சிக்கு எடுத்துச்செல்லமாட்டார்கள் என்றும் சில ஸ்டூடியோகளில் தனி கேமரா கூட வைத்திருப்பார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.
''என் தந்தையின் கடையில்தான் வேலை பார்த்தேன். இருந்தபோதும், இறப்பு படம் எடுத்த கேமராவை ஸ்டூடியோவிற்குள் உடனே கொண்டுவரக் கூடாது என்பார்.
நிகழ்வு முடிந்துவந்ததும், கடைக்கு வெளியில் நின்று, லேசாக தண்ணீர் தெளித்து கேமராவை அவரே வாங்கிச்செல்வார். நான் குளித்துவிட்டுதான் கடைக்குள் நுழையவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அவசரமாக இந்த படத்தை தயார் செய்யவேண்டும் என்பதால், உடனே குளித்துவிட்டு வந்து பிலிம் டெவலப் செய்து, பிரிண்ட் போடுவேன்,'' என நினைவு கூறுகிறார் ரவீந்திரன்.
தன்னுடைய சகநண்பர்கள், உறவினர்கள் சிலர், இறப்பு படங்களை எடுப்பதால், கேலி செய்ததுண்டு என்றும், சிலர் தான் மிகவும் தைரியமான நபர் என்று சொல்வதுண்டு என்கிறார்.
''புகைப்பட கலையை மதிக்க தெரிந்தவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். இறப்பு படங்களை எடுப்பதால், ஒரு சிலர், என்னிடம் பேச யோசிப்பார்கள். பலமுறை என் அம்மா, நான் இறப்பு படங்களை எடுக்கக்கூடாது என வலியுறுத்தினார். ஆனால் என் அப்பா, கண்டிப்பானவர் என்பதால் 10 ஆண்டுகள் கழித்துத்தான், இறப்பு படங்களை மற்றொரு நபரை வேலைக்கு சேர்த்துவிட்டு, முழுநேரமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு படம் எடுக்க என்னை அனுப்பினார்,'' என்கிறார்.
வருமானம் எவ்வளவு கிடைத்தது?
இறப்பு புகைப்படங்களை எடுக்கும் புகைப்பட கலைஞர்களின் வருமானம் குறித்து கேட்டபோது, 1980களில் தனது நண்பர்கள் பலர் ரூ.250 வரை மாத சம்பளமாக பெற்றதை குறிப்பிட்டார்.
''1980ல் ஒரு போட்டோகிராபர் மாத சம்பளம் என்பது ரூ.250ஆக இருந்தது. அன்றைய காலத்தில் அந்த சம்பளம் அரசு வேலைகளில் இருந்தவர்களுக்கு தான் கிடைத்தது. போட்டோகிராபர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு சமூகத்தில் இருந்தது. நான் அப்பாவின் கடையில் வேலை பார்த்தால், எனக்கு தனியாக சம்பளம் தரவில்லை. ஆனால் என் போன்ற நல்ல வேலையாள் இருந்தால், சம்பளம் ரூ.300 வரை கூட சம்பளம் தரலாம் என்று அவ்வப்போது என் அப்பா சொல்வார். இறப்பு வீடுகளில் படம் எடுப்பது, பிலிம் டெவெலப் செய்து, உடனே அதனை பிரண்ட் செய்து, பிரேம் போடுவது வரை எல்லா வேலைகளையும் நானே செய்துவிடுவேன். 1986ல் எந்த் தந்தையின் இறப்பை அடுத்து, நானே கடையை நிர்வாகம் செய்யதொடங்கினேன். நான் முதன்முதலில் வேலைக்கு சேர்த்த நபருக்கு ரூ.300 சம்பளம் தந்தேன்,''என்கிறார் ரவீந்திரன்.
போலீஸ் போட்டோக்ராபராக மாறிய ரிச்சார்டு
ஒன்பது வயதில் தந்தையுடன் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ரிச்சார்டு கென்னடி. தாத்தா ஆரோக்கியநாதன் 1916ல் ஏற்காட்டில் செயின்ட் மேரிஸ் ஸ்டுடியோவை பல சிக்கல்களுக்கு மத்தியில் தொடங்கியிருந்தார். அவரை தொடர்ந்து அப்பா அந்தோணி சேவியர் ஸ்டூடியோவை நிர்வாகம் செய்தார். அதனால், சிறுவயது முதல் ரிச்சார்டு கென்னடிக்கு ஸ்டூடியோ மிகவும் பழக்கப்பட்ட இடமாக இருந்தது. ஆனால் இறந்த நபர்களை படம் எடுப்பது அவருக்கு இள வயதில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அனுபவமாக இருந்தது.
''எனக்கு ஒன்பது வயதிருக்கும். முதல் முறையாக என்னை அப்பா அழைத்துச் சென்றார். ஏற்காடு மலைக்கிராம பகுதியில் இறந்த ஒரு முதியவரை படம் எடுக்கச் சென்றோம். நாங்கள் கேமராவை தூக்கி வருவதை பார்த்த பலர், பயந்து ஓடினர். ஒரு சில முதியவர்கள் அவர்களை படம் எடுத்துவிடுவோம் என்று அச்சப்பட்டு ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இறந்த நபரை உட்காரவைத்திருந்தார்கள். இறந்த நபரின் பின்புறம் வெள்ளை வேட்டியை பிடிக்க சொன்னார் அப்பா. கறை படிந்த சுவரை மறைத்து படம் எடுத்தோம். எனக்கு நடுக்கம், இரவு தூங்க முடியவில்லை, இறந்தவர்கள் கனவில் வந்து பயப்படுத்துவது போல பல இரவுகள் கழிந்தன,'' என தனது முதல் அனுபவத்தை சொல்கிறார் ரிச்சார்டு.
பதின்பருவத்தில் தேர்ந்த முறையில் படம் எடுக்கும் திறனை பெற்றுவிட்டதால், தந்தையின் உதவியின்றி இறப்பு படங்களை எடுக்க தொடங்கினார் ரிச்சார்டு. ஒரு கட்டத்தில், மலை பகுதிகளில் நேர்ந்த சாலை விபத்துகளை படம் எடுக்கவும் அழைக்கப்பட்டார். ''பதின்பருவத்தில் நான் போலீஸ் போட்டோகிராபர் வேலையும் செய்தேன் என்பதால், என்னை யாரும் மோசமாக நடத்தவில்லை. ஆனால் தொடர்ந்து இறப்பு தொடர்பான படங்களை எடுக்கிறேன் என்பதால், கஸ்டமர்களிடம் ஒருவித இடைவெளி இருந்தது உண்மைதான்,''என்கிறார் ரிச்சார்டு.
கண்ணீர் பெருகிய தருணங்கள்
ஒருமுறை படம் எடுக்கச்சென்ற சமயத்தில், ஒரு இளைஞர் இறந்தபோது, அவரது மனைவி மற்றும் உறவினர் பெண்கள் அழுது கொண்டே கடைசி படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். கல்யாணத்தில் செய்யும் சடங்குகளை ஒத்த பல சடங்குகள் செய்யப்பட்டன என்றும் இறந்தவரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் அந்த படத்தில் இருப்பதுபோன்ற குரூப் போட்டோ எடுக்கப்பட்டது என்றும் நினைவு கூறுகிறார் ரிச்சார்டு.
அதேபோல, பிறந்து சில தினங்களே ஆன குழந்தை ஒன்றை தாய் தனது மடியில் கிடத்தியது போன்ற படத்தை எடுத்தபோது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது என்கிறார். ''குழந்தைக்கு அலங்காரம் செய்து, புது துணி உடுத்தி, மலர் வைத்து, மை பொட்டு வைத்து அந்த தாய் மடியில் வைத்திருந்தார். அந்த குழந்தை உறங்கிக்கொண்டு இருந்தது போல தெரிந்தது. அந்த படம் எடுத்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதுபோல ஒரு சில வீடுகளில்தான் குழந்தைகள், இளைஞர்களை படம் எடுத்தார்கள். பெரும்பாலும், இறப்பு படங்கள் முதியவர்களுக்குத்தான் எடுத்தார்கள்,''என்கிறார்.
பெண்கள் சுடுகாடு வரை அனுமதிக்கப்படவில்லை என்பதால், வீட்டில் இருந்து இறந்த நபரை எடுத்துச்செல்லும் நேரத்தில் வீதியில் கும்பலாக குடும்ப உறுப்பினர்கள் நிற்பது போன்ற படம் எடுக்கப்பட்ட படத்தை காண்பித்தார். 1980களின் முற்பகுதிவரை இறந்தபோது எடுத்த புகைப்படம்தான் ஒரு நபரின் முதல் படமாக இருந்தது என்றார் அவர்.
சில கிராமங்களில், படம் எடுத்ததற்கு குறைந்த பணத்தை தான் ஒரு சிலரால் கொடுக்கமுடிந்தது என்றும் பழக்கூடைகளை தங்கள் சார்பாக மக்கள் கொடுத்து அனுப்புவார்கள் என்றும் சொல்கிறார். ஒரு சில கிராமங்களில் படம் எடுப்பதற்கு ரூ.100 கட்டணம் என்ற போதும், மேலும் ரூ.100யை உறவினர்கள் சேர்த்து கொடுத்த சம்பவங்களும் இருந்தன.
1985-1990 காலகட்டத்தில் பல கிராமங்களில் கூட ஸ்டூடியோகள் பெரியளவில் திறக்கப்பட்டதால், இறந்தவர்களை படம் எடுக்கும் நிகழ்வுகள் மிகவும் குறைந்துவிட்டது என்கிறார் ரிச்சார்டு. பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்வது குறித்த அச்சத்தில் இருந்து வெளியேறி, விதவிதமாக படங்கள் எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டதால், இறந்த பின்னர் படம் எடுப்பது குறைந்து, அந்த பழக்கம் மறைந்துவிட்டது என்று தெரிவித்தார். ஒரு சில முதியவர்கள் நோய்வாய்ப்பட்டால் உடனே அவரை படம் எடுத்துவிட்டதால், இறந்த பின்னர் படம் எடுப்பது அருகிவிட்டது என்கிறார்.
பல இறப்பு படங்களை எடுத்த யாஷிகா கேமராவை பத்திரமாக வைத்திருக்கிறார் ரிச்சார்டு. தற்போது டிஜிட்டல் முறையில் விதவிதமான படங்களை எடுக்கிறார் ரிச்சார்டு. அதேநேரம் பழைய படங்களை பொக்கிஷமாக பாதுகாத்துவைத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்