சுன்னத் செய்வது பாலியல் திறனை அதிகரிக்குமா?

சுன்னத்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பெலிப் லாம்பியாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் அறுவை சிகிச்சை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

எகிப்திய சமூகத்தில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்தோல் நீக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இன்று உலகில் மூன்றில் ஒரு நபர் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்துள்ளனர்.

முன் தோல்நீக்க அறுவை சிகிச்சை செய்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இஸ்லாத்தில் பிறக்கும் குழந்தைகளில் இது ஒரு சடங்காக பின்பற்றப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவில் பிறந்தவர்கள் உள்ளனர். 2016ஆம் ஆண்டு தரவின்படி அங்கு 80.5 சதவிகித ஆண்கள் முன்தோல் நீக்கம் செய்துள்ளனர். அமெரிக்காவில் மருத்துவ நன்மைக்காக இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

உலகில் செய்யப்படும் பெரும்பாலான முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை குழந்தை பிறந்தவுடன் செய்யப்படுகின்றன. அதன் பிறகு செய்யப்படுபவை மருத்துவ காரணங்களுக்காக செய்யப்படுகின்றன.

முன்தோல் அறுவை சிகிச்சை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

முன் தோலின் பணி என்ன? அது நீக்கப்பட்டால் என்ன நடக்கும்?

முன்தோல்

பட மூலாதாரம், Getty Images

முன்தோல் என்பது ஆண்குறி தோலின் ஒரு பகுதி ஆகும். உறுப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஆணுறுப்பின் மற்ற தோல் போல அல்லாமல் முன் தோல் தனித்து இருக்கும். அதில் எந்தவித பிரச்னையும் இல்லையென்றால் தளர்ந்த மற்றும் விறைப்புத்தன்மை என இரண்டு நிலைகளிலுமே முழுத்தோலையும் நீக்கிவிட முடியும்.

"ஆணுறுப்பை மறைத்து, ஒரு உறை போன்று செயல்படுவதே முன் தோலின் பணி" என அமெரிக்க யூரோலஜி கூட்டமைப்பைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் அனா மரியா ஆட்ரான் பிபிசி முண்டோ சேவையிடம் கூறினார்.

நோயெதிர்ப்பு செயல்பாட்டிலும் முன் தோலின் பங்கு இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால், ஆணுறுப்பின் தலைப்பகுதி உணர்திறன் மிக்கது. மருத்துவக் காரணங்களுக்காக முன் தோல் நீக்கப்படும் போது அதுவரை மூடியிருந்த ஆணுறுப்பின் தலைப்பகுதிக்கு தற்போது காற்று மற்றும் உடையுடன் நேரடி தொடர்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே முதல் வாரத்தில் முன் தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்தவர் அசௌகரியத்தை உணர்வர். ஆணுறுப்பு விறைப்பு அடையும் போது வலியும் ஏற்படலாம்.

காலப்போக்கில் ஆணுறுப்பின் தலைப்பகுதியில் உள்ள தோல் கடினமடைந்து, அதிகப்படியான உணர்திறனை இழக்க ஆரம்பித்துவிடும்.

பொதுவாக இந்த அறுவை சிகிச்சை இரண்டு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, அறுவை சிகிச்சை கத்தி மூலம் முன் தோலை அகற்றுவது. மற்றொன்று, ஸ்டேபிள் கன் (staple gun)எனப்படும் நவீன கருவி கொண்டு அகற்றுவது. வழக்கமான மயக்க மருந்துகளே இந்த சிகிச்சையின் போது கொடுக்கப்படும்.

எப்போது முன் தோலை நீக்க வேண்டும்?

சுன்னத்

பட மூலாதாரம், Getty Images

மத ரீதியான விஷயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு மருத்துவக் காரணங்களோடு பார்த்தால் முன் தோல் நீக்கம் குறித்து மாறுபட்ட பார்வைகள் உள்ளன.

அமெரிக்காவில் பெரும்பாலானோர் குழந்தைகள் பிறந்த உடனேயே முன் தோல் நீக்கம் செய்ய விரும்புகின்றனர். புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு முன் தோல் நீக்கம் செய்வதில் நிறைய நன்மைகள் இருப்பதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறுகிறது.

சிறுநீர் பாதை தொற்றுகள், ஆண்குறி புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி உட்பட சில பாலியல் நோய்கள் பரவுவதை முன் தோல் நீக்கம் தடுப்பதாக சிறுநீரக மருத்துவர் அனா மரியா ஆட்ரான் கூறுகிறார்.

ஆனால், முன் தோல் நீக்கத்தால் பயனுள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு முன்தோல் நீக்கம் செய்யக் கூடாது என்கிறது ராயல் டட்ச் மருத்துவ சங்கம்.

வழக்கமான நம்பிக்கைக்கு மாறாக, முன் தோல் நீக்கத்தில் ரத்தக்கசிவு, தொற்று போன்ற மருத்துவ அபாயங்கள் இருப்பதாகவும் உளவியல் சிக்கல்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

பைமோசிஸ், பாராஃபிமோசிஸ் மற்றும் பாலனிடிஸ் போன்ற மருத்துவக் காரணங்களே முன் தோல் நீக்கத்திற்கு வழிவகுக்கின்றன.

முனைப்பகுதியில் முன் தோல் குறுகியதாக இருக்கும் நிலை பைமோசிஸ் என அழைக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்திலேயே கண்டறிந்தால் க்ரீம் வகை மருந்துகள் மூலம் இதைக் குணப்படுத்தலாம்.

நுனித்தோல் முழுவதுமாக பின்னோக்கிச் சென்று மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியாத நிலை பாராஃபிமோசிஸ் என அறியப்படுகிறது.

பாலனிடிஸ் என்பது ஆணுறுப்பின் தலைப்பகுதியில் ஏற்படும் வீக்கமாகும். இது பெரும்பாலும் சுகாதாரமின்மை காரணமாக ஏற்படுகிறது.

இந்த மூன்று சிக்கல்களும் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்திலும் ஒருவருக்கு ஏற்படலாம்.

தாம்பத்ய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தாம்பத்ய வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

ஷாபிரோவின் கூற்றுப்படி, இது பதிலளிப்பதற்கு கடினமான கேள்வி. ஏனெனில் இது குறித்து உறுதியான ஆய்வுகள் எதுவும் இல்லை.

``முன் தோல் நீக்கத்திற்குப் பிறகு ஆணுறுப்பு தலைப்பகுதியின் உணர்திறன் அதிகரிப்பதால் தொடக்கத்தில் அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். பின்னர், காற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டு முனைப்பகுதி காய்ந்த நிலையை அடைய ஆரம்பிக்கும். முனைப்பகுதியில் உள்ள தோல் கடினத்தன்மையை அடைந்ததும் அதனுடைய உணர்திறனும் குறைய ஆரம்பிக்கும்`` என்கிறார் ஷாபிரோ.

முன் தோல் இல்லாமல் தன்னுடைய ஆணுறுப்பு அழகாக இருக்கும் என்று நினைத்து மருத்துவமனைக்குச் செல்பவர்களும் உள்ளனர்.

இது போன்ற காரணங்களுக்காகவும் முன் தோல் நீக்க சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், முன் தோல் நீக்க சிகிச்சைக்குப் பிறகு ஆணுறுப்பு பெரிதாக மற்றும் நீளமாகத் தெரியும் அல்லது உடலுறவின் போது கூடுதல் சிறப்பாக செயல்பட முடியும் என்பது வெறும் கட்டுக்கதை. விந்து வெளியேற்றமும் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி மற்றும் குணமடைவதில் உள்ள சிக்கலைத் தவிர்க்க நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களைத் தடுக்குமா?

முன் தோல் நீக்கத்தை ஆதரிப்பவர்கள் அதற்குக் கூறும் காரணங்களில் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களை அது தடுக்கும் என்பதும் ஒன்று.

ஐநா சபைகூட எச்ஐவி ஒழிப்புக்கான தனது பிரசாரத்தில் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் முன் தோல் நீக்க ஆதரவு பிரசாரத்தை பெரிய அளவில் மேற்கொண்டது.

முன் தோல் நீக்கம் எச்ஐவி தொற்று விகிதத்தில் சரிவை ஏற்படுத்தியது. ஆனால், வேற்றுபாலின உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த சரிவு இருந்தது.

'`முன் தோல் நீக்கம் மற்றும் எச்ஐவி பரவலுக்கு இடையேயான தொடர்பு இன்னும் தெளிவாகவில்லை. அதிக எஸ்டிடி மற்றும் எச்ஐவி தொற்று கொண்ட அமெரிக்காவில் அதிக அளவிலான முன் தோல் நீக்கம் உள்ளது. ஆனால், டச்சில் நிலைமை வேறாக உள்ளது. குறைந்த எஸ்டிடி மற்றும் எச்ஐவி தொற்று கொண்ட அங்கு, முன் தோல் நீக்க சிகிச்சை குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது'` என்கிறது ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ சங்கம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கு முன் தோல் நீக்கம் எச்ஐவிக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பு தருகிறது. ஆனால், மாற்று பாலினத்தோரோடு உறவு கொள்பவர்களிடம் இது எந்த மாதிரியான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கொனோரியா, சிபிலிஸ், கிளமிடியா, ஹெர்பெஸ், மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது பிறப்புறுப்பு புண்கள் போன்ற பிற எஸ்டிடி நோய்களிலிருந்து முன் தோல் நீக்கம் பாதுகாப்பு அளிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: