வரதட்சணை புகார்: கணவர், மாமியாரை பழிவாங்க பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகிறதா?

    • எழுதியவர், உமாங்க் போத்தார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த சில மாதங்களில், பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஏழு வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தெரிவித்திருக்கின்றன.

நீதிமன்றங்களின் இந்தக் கருத்துக்கு கலவையான எதிர்வினைகள் வந்திருக்கின்றன.

ஒருபுறம், 'ஆண்கள் உரிமைகளுக்காக' குரலெழுப்பும் குழுக்கள், நீதிமன்றங்களின் இந்தக் கருத்தை, இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உள்ளது என்பதை நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளன.

மறுபுறம், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் நீதிமன்றத்தின் இந்தக் கருத்து வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமணமான பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாகவும், ஆனால் அதைப் பற்றிய தவறான ஒரு பிம்பம் உருவாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன?

498A பிரிவை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. முன்னதாக, உச்ச நீதிமன்றமும் இந்த வாசகத்தைப் பயன்படுத்தியிருந்தது.

இதுபோன்ற வழக்குகளில் ஒரு தம்பதியுடன் ஒரே வீட்டில் வாழாத கணவரின் உறவினர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஒரு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுபோன்ற பல வழக்குகளில், குற்றச்சாட்டுகள் 'பொதுவானவை’ என்றும் 'தெளிவற்றவை' என்றும் நீதிமன்றங்கள் பதிவு செய்துள்ளன.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கில், வன்முறை நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது. உதாரணமாக, மனைவியின் சிகிச்சை சீட்டில் காயம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றிருந்தது.

உத்தரபிரதேசத்தில், மாமனார் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும், அவ்வளவு பணத்தை கொண்டு வர முடியாததால், கணவர் மற்றும் மாமனார் தன்னை அடித்து, வற்புறுத்தியதாகவும் மனைவி புகார் அளித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் அனுமதியின்றி கணவன் உடலுறவு கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆனால், உடல் ரீதியான வன்கொடுமை மற்றும் வரதட்சணைக் கொடுமை தொடர்பாக அந்தப் பெண் அளித்திருந்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளதால் கணவன் குடும்பத்தினரை பழிவாங்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது தவிர, மாமியார் மற்றும் மாமனார் தம்பதியினருடன் மிகக் குறுகிய காலமே தங்கியிருந்தனர். கணவர் மீதான வழக்கு தொடர்ந்தாலும், மாமியார் மற்றும் மாமனார் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தில் ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 86 வயதான மாமியார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அவரை துன்புறுத்துவதற்கு சமம் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. மாமியார் மீதான குற்றச்சாட்டுகள் பொதுவானவையாக உள்ளது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. கணவர் மீதான வழக்கு இன்னும் நடந்து வந்தாலும், மாமியார் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது.

குடும்ப வன்முறை சார்ந்த வழக்குகளில், இந்தச் சட்டம் சமூக கட்டமைப்பில் தடைகளை உருவாக்குகிறது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

திருமணம் தொடர்பான அனைத்து வழக்குகளும், வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும், ‘ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன’ என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல தம்பதிகள் அதற்குப் பதிலாக லிவ்-இன் உறவுகளைத் தேர்வு செய்கிறார்கள், இது 'எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளும் இல்லாத மன அழுத்தமில்லாத தோழமை', என்றும் கூறியிருந்தது.

வரதட்சணை கொடுமை தொடர்பான சட்டத்தின் தவறான பயன்பாடு இப்படியே தொடர்ந்தால், அது திருமண அமைப்பையே 'முற்றிலும் அழித்துவிடும்' என்றும் அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சட்டம் என்ன சொல்கிறது?

மனைவிகளைக் கொடுமைப்படுத்துவது, வரதட்சணை தொடர்பான மரணங்கள் போன்ற பல வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு 1983-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில், 498A பிரிவானது சேர்க்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, கணவன் அல்லது அவரது உறவினர்கள் மனைவியைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

இந்தப் பிரிவு ‘தெளிகுற்றம்’ (cognizable offence) சார்ந்தது, ஜாமீனில் வெளிவர முடியாதது. இச்சட்டத்தின் கீழ் பிடிவாரண்ட் இல்லாமல் கூட காவல்துறை ஒருவரை கைது செய்யலாம்.

இந்தச் சட்டம் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் மட்டும் பாதுகாப்பு அளிப்பதில்லை. குடும்ப ரீதியான கொடுமையிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கிறது.

இங்கு, ‘கொடுமை’ என்பது ஒரு பெண்ணை வரதட்சணைக்காக துன்புறுத்துவது அல்லது பெண்ணுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தீங்கு விளைவிப்பது அல்லது தற்கொலைக்கு தூண்டுவது.

இச்சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை தடுக்க கடந்த பல ஆண்டுகளாக, நீதிமன்றங்கள் பல அறிவுரைகளை வழங்கியுள்ளன.

2008-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், திருமணம் அல்லது குடும்பத் தகராறில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன், காவல்துறை முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது.

2014-ஆம் ஆண்டில், 498A பிரிவின் கீழ் ஒரு வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒருவரை போலீசார் தாங்களாகவே கைது செய்யக்கூடாது என்றும், முதலில் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த நபரை கைது செய்ய மாஜிஸ்திரேட் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது .

2017-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நலக் குழுவை அமைத்து இதுபோன்ற விஷயங்களைக் கண்டறிந்து தீர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஆண்கள் உரிமைக் குழுக்கள் ஆதரித்துள்ளன.

"ஒரே ஒரு வாக்குமூலத்தால், கணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், அவர்களின் தொழில், தன்னம்பிக்கை மற்றும் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன," என்கிறார் அமித் லக்கானி. ஆண்கள் நல அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவராக அமித் லக்கானி உள்ளார்.

இவர்களில் பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்பட்டிருப்பது நீதியின்மையையே காட்டுகிறது என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, 'பாலின நடுநிலையான சட்டங்கள்' மிகவும் அவசியம்.

' மனைவிகளின் அட்டூழியங்களை எதிர்க்கும் அகில இந்திய சங்கத்தின்' தலைவர் தஷ்ரத் தியோரா, "இச்சட்டம் சரியானதுதான். தவறான குற்றச்சாட்டுகளைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்." என்று கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், சில சமயங்களில் கணவன் மனைவியை துன்புறுத்துவது நடந்தாலும், அவரது 'ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் வழக்கு பதிவு செய்வது தவறு' என்று கூறுகிறார்.

498A பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான முக்கிய வாதங்கள், இந்த வழக்குகளில் தரப்பட்ட மிகக் குறைந்த தண்டனை விகிதம் ஆகும்.

எடுத்துக்காட்டாக, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி , இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17% பேர் மட்டுமே விசாரணைக்குப் பிறகு தண்டனை பெற்றுள்ளனர். கொலை வழக்குகளில் தண்டனை விகிதம் 42%.

தண்டனை விகிதத்தை மேற்கோள் காட்டி, பல ஆண்கள் உரிமை ஆர்வலர்கள் '498A இன் கீழ் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் தவறானவை' என்று கூறுகின்றனர்.

பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டனவா?

இருப்பினும், இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்யும் பல வழக்கறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். மாறாக, குறைந்த தண்டனை விகிதம் அடிப்படை யதார்த்தத்தின் தவறான படத்தை அளிக்கிறது என்கின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் அபர்ணா பட் கூறும்போது, “இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையில், 498A பிரிவின் கீழ் வரும் ஒரு வழக்கு மிகவும் கடினமானது," என்கிறார்.

மூத்த வழக்கறிஞரும், பெண்கள் உரிமை நிபுணருமான இந்திரா ஜெய்சிங் சமீபத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், 'சட்டப் பயங்கரவாதம்' என்ற வார்த்தைப் பிரயோகம், இந்த விஷயத்தை ‘பொதுப்படையாக்குவது’ மற்றும் 'ஒரு சிக்கலை இயல்பானதுபோல் காட்டுவதற்கு' ஒரு பொதுவான எடுத்துக்காட்டு, என்றிருந்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விரிவாகப் பணியாற்றிய பல்வந்த் சிங், ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’இல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்.

ராஜஸ்தானின் நான்கு காவல் நிலையங்களில் 498A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 300 வழக்குகளை ஆய்வு செய்த குழுவில் அவர் இருந்தார்.

அவர் கூற்றுப்படி, இந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே முடிக்கப்பட்டன. மேலும் அவை 'தவறானவை' என்றும் 'தவறான புரிதலின் விளைவு' என்றும் காவல்துறை கூறியது.

மேலும் பேசிய பல்வந்த் சிங், "மூடப்பட்ட பெரும்பாலான வழக்குகளில், பெண்கள் தங்கள் கணவர் மற்றும் மாமியார்களிடமிருந்து வன்முறையை எதிர்கொண்டது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது," என்றார்.

அவரைப் பொறுத்தவரை, “498A மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து ஆணாதிக்க சிந்தனையால் ஏற்பட்டது. காவல்துறை இந்த வழக்குகளை தனிப்பட்ட தகராறுகளாகக் கருதுகிறது, அது சரிசெய்யப்பட வேண்டும்,” என்றார்.

498A பிரிவைச் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன?

498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது கடினம் என்று அபர்ணா பட் கூறுகிறார். ஏனெனில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் அடிக்கடி சர்ச்சையைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு, போலீசார் சமரசம் செய்து , 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்' என்று தம்பதியினருக்கு அறிவுரை வழங்க முயற்சிப்பதாகவும் முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல சந்தர்ப்பங்களில், உடல்ரீதியான துன்புறுத்தலின் தெளிவான அறிகுறிகள் தென்பட்ட பின்னரே காவல்துறை புகார்களை பதிவு செய்கிறது, என்கிறார்.

பல்வந்த் சிங் கூறும்போது, “போலீசார் வழக்குகளை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். பல வழக்குகளில் பெண்கள் வழக்கு பதிவு செய்ய நீதிபதியிடம் செல்ல வேண்டியிருந்தது,” என்றார்.

அபர்ணா பட் கூறுகையில், “எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும், சமரசம் செய்ய பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், காவல்துறை மற்றும் நீதிபதிகள் கூட நிறைய அழுத்தம் கொடுக்கிறார்கள்,” என்றார்.

அவரது கூற்றுப்படி, "குடும்பம் குழந்தையில் பாதுகாப்பை ஒரு ஆயுதமாக்குகிறது, இது பெண்கள் மீதான நல்லிணக்கத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது."

உறவினர்களின் அழுத்தம் காரணமாகவோ அல்லது கணவன் விவாகரத்து செய்ய சம்மதிப்பதாலோ அல்லது பெண்ணை தாய்வீட்டிற்கு அனுப்ப சம்மதிப்பதாலோ பெண்கள் தங்கள் வழக்கைத் தொடருவதில் உதவியற்றவர்களாகவே காணப்படுவதாக பல்வந்த் சிங் கூறினார்.

வழக்கு முன்னோக்கி நகர்ந்தாலும், வன்முறையை நிரூபிப்பது மிகவும் கடினம்.

அபர்ணா பட் கூறுகையில், “உடல், உளவியல் மற்றும் பொருளாதாரம் எனப் பல வகையான வன்முறைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மருத்துவ ஆதாரம் இல்லை. பல வழக்குகளில் பெண்கள் வழக்கு பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குள் ஆதாரங்களை சேகரிப்பதில் நிறைய நேரம் வீணடிக்கப்படுகிறது,” என்கிறார்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் துன்புறுத்தல் நடைபெறுவதாக பல்வந்த் சிங் கூறுகிறார், எனவே ஆதாரங்களை முன்வைப்பது மிகவும் கடினம் மற்றும் வழக்கு நீண்ட காலத்திற்கு இழுக்கப்படுகிறது. எனவே தண்டனை கிடைப்பதும் கடினம், என்கிறார்.

துஷ்பிரயோகத்தின் உண்மை என்ன?

சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, எந்தவொரு சட்டத்திலும் இது சாத்தியம் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் 498A தவறாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததற்குக் காரணம், அது பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்கும் சட்டம் என்பதால்.

குஜராத்தின் முன்னாள் ஏடிஜிபி ரஞ்சன் பிரியதர்ஷி கூறும்போது, “498A என்பது பெண்களுக்கு மிகவும் புரட்சிகரமான சட்டம். பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதில் இது மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. எந்தச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படலாம்” என்கிறார்.

பல்வந்த் சிங்கின் கூற்றுப்படி, 'தவறான' அல்லது 'தவறான புரிதல்' என்று கூறி மூடப்பட்ட வழக்குகளில், கணவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வன்முறை இருக்கவே செய்தது.

ஆனால், சட்டப்பிரிவு 498A-வை அமல்படுத்த, வரதட்சணைக் குற்றச்சாட்டைச் சேர்க்க வேண்டும் என்று சில பெண்களிடம் வழக்கறிஞர்கள் சொல்கின்றனர்.

அவர் மேலும் கூறுகையில், ''இவ்வாறு, இப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட, வரதட்சணைக் கொடுமைகள் நடக்காத வழக்குகளிலும், அவை மிகைப்படுத்தப்படுகின்றன. பின்னர் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறன. இருப்பினும், இந்த் வழக்குகள் பொய்யானவை என்றும், வன்முறை எதுவுமே நடைபெறவில்லை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது," என்கிறார்.

இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் குறைவான கல்வியறிவு பெற்றவர்கள். அவள் ஒரு வழக்கறிஞர் அல்லது அவரது குடும்பத்தின் ஆண் உறுப்பினர் அல்லது ஒரு மதத் தலைவர் அல்லது ஒரு ஊர்த்தலைவரின் ஆலோசனையைப் பின்பற்றினார்.

மேலும் பேசிய பல்வந்த் சிங், “இப்பிரிவின் ஒரே நோக்கம் வீட்டிற்குள் வன்முறையைத் தடுப்பதுதான். 498A-வின் கீழ் நல்லிணக்க ஒப்பந்தம் இருந்தபோதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வன்முறை மீண்டும் தொடங்கியது," என்கிறார்.

“எனவே இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதில் உண்மையில்லை. உண்மையில், நீதித்துறை அமைப்பு பெண்களின் கவலைகளை சரியாகக் கையாளவில்லை," என்கிறார்.

(கூடுதல் தகவல்கள்: ருச்சிதா புரபியா)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: