You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிபே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தியதாக போலி குறுஞ்செய்தி - பல லட்ச ரூபாய் மோசடி நடந்தது எப்படி?
நீங்கள் ஒரு வியாபாரி.
ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்து உங்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி, அதற்காக ஆன்லைனில் பணமும் அனுப்பி வைக்கிறார்.
உங்கள் கைபேசி எண்ணுக்கு உங்கள் வங்கியிலிருந்து அதற்கான மெசேஜும் வருகிறது.
நீங்களும் அதை நம்பி அந்த நபர் அனுப்பும் முகவரிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கிறீரகள்.
ஆனால் அடுத்த நாள் தான் உங்களுக்குத் தெரிகிறது, உங்களுக்கு வங்கியிலிருந்து வந்த அந்த குறுஞ்செய்தி போலியானது என்று.
அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா?
ஒவ்வொரு நாளும் புதிது புதிய முறைகளில் நடக்கும் பண மோசடிகளில் இது சமீபத்தில் நடந்த ஒன்று.
தில்லியைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி இந்த மோசடியில் சமீபத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை இழந்திருக்கிறார்.
ஆன்லைனில் தங்க விற்பனை
நவால் கிஷோர் கண்டேல்வால் என்பவர், தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் அவர் அயோத்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு அறிமுகம் இல்லாத ஒரு எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
கடையிலிருந்த அவரது மகனிடம் 15 கிராம் தங்கச் சங்கிலி வாங்குவதாகச் சொன்ன அந்த நபர், ஆன்லைனில் பணம் அனுப்புவதற்காக அவர்களது வங்கிக் கணக்கின் தகவல்களையும் கேட்டிருக்கிறார்.
சற்று நேரத்தில் நவால் கிஷோரின் தொலைபேசி எண்ணுக்கு, அவரது வங்கிக் கணக்கில் 93,400 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை அவர்களும் அந்த நபரின் முகவரிக்கு தங்கச் சங்கிலியை அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அடுத்த நாள் அதே நபர் மீண்டும் தொலைபேசியில் அழைத்து 30 கிராம் தங்கச் சங்கிலி வேண்டும் என்று கூறி, அதற்காக 1,95,400 ரூபாய் பணமும் அனுப்புவதாகக் கூறியிருக்கிறார். மீண்டும் வங்கியிலிருந்து பணம் வந்ததுபோல குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
காத்திருந்த அதிர்ச்சி
இது நடந்த பிறகு தனது வங்கிக் கணக்கைப் பார்த்த நவால் கிஷோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த இரண்டு தங்கச் சங்கிலிகளுக்காக அவரது கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
அப்போதுதான் அவர் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்த்தார். அவை வங்கியிலிருந்து வந்ததுபோல இருந்தாலும், வங்கியிலுருந்து வந்தவை அல்ல. போலியானவை.
இச்சம்பவம் நடந்த போது அவர் வெளியூரில் இருந்ததால், கடையில் இருந்த அவரது மகனால் வங்கியின் மொபைல் செயலியை உடனடியாகப் பார்க்க முடியவில்லை.
வங்கியைத் தொடர்பு கொண்டு அவர்கள் கேட்டபோது, வங்கிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக என்.டி.டி.வி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் போதும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தில்லியிலும், இந்தியாவில் வேறு பல இடங்களிலும் இருக்கும் நகைக் கடை உரிமையாளர்கள் இதே போன்ற மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
இந்த மோசடி முறையைப் பற்றி அறிந்துகொள்ள, பிபிசி தமிழ் சைபர் பாதுகாப்பு வல்லுநரான ஹரிஹரசுதன் தங்கவேலுவிடம் பேசியது.
அவர் இந்த மோசடியை ‘மிகவும் அடிப்படை நிலையிலான மோசடி’ என்று குறிப்பிடுகிறார்.
“இன்றைக்கு யார் வேண்டுமானாலும், இதுபோன்ற இண்டர்நெட் SMSகளை எளிதாக அனுப்பலாம். இதனை ‘SMS Flooding’ என்று அழைப்போம்,” என்கிறார்.
இந்த மெசேஜ்கள் வங்கி போன்ற ஒரு சேவை வழங்குநர் (service provider) அனுப்புவது போலவே ‘AD’, ‘VD’, ‘TM’ போன்ற முன்னொட்டுகளுடன் வரும், என்று கூறும் ஹரிஹரசுதன், முதல் பார்வையிலேயே இவற்றை உண்மையன வங்கி மெசேஜ்களிலிருந்து பிரித்தறிவது கடினம் என்கிறார்.
“உண்மையான வங்கி மெசேஜை காப்பி செய்து, அதில் சில மாற்றங்களைச் செய்து, இணையம் மூலம் அதை அனுப்புவது சுலபமானதுதான், யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்,” என்கிறார் ஹரிஹரசுதன்.
மேலும் பேசிய அவர், இதில் பெரிய தொழில்நுட்ப நுணுக்கங்கள் எதுவும் இல்லை என்கிறார் அவர்.
‘இது சைபர் கிரைம் கிடையாது’
இதுபற்றி மேலும் பேசிய ஹரிஹரசுதன், இது சைபர் கிரைம் வகையில் சேராது என்கிறார்.
“இதில் வங்கிக் கணக்கு வங்கியின் PIN எண்ணைப் பயன்படுத்தி மோசடி செய்யப்படவில்லை. அதனால் இது cyber fraud கிடையாது. அடிப்படை நிலையிலான மோசடிதான்,” என்கிறார் அவர்.
GPay, PayTM பெயரில் மோசடிகள்
இதே மோசடி மற்றொரு முறையிலும் நடப்பதாகக் கூறுகிறார் ஹரிஹரசுதன்.
இது GPay, PayTM போன்ற பணப் பரிவர்த்தனைச் செயலிகளின் பெயரைப் பயன்படுத்தி நடப்பதாகச் சொல்கிறார்.
அதாவது, GPay, PayTM போன்ற செயலிகளில் பணம் அனுப்பியதும் வரும் ‘screenshot’ போலவே போலியான screenshotகளைத் தயாரிக்கும் செயலிகள் பலதும் இணையத்தில் உலா வருகின்றன.
“இதுபோன்ற மோசடிச் சயலிகளில் ஒருவர், தொகை, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால் அந்தக் கணக்குக்கு அந்தத் தொகை செலுத்தப்பட்டதுபோன்ற screenshot-டை அது தயார் செய்து கொடுக்கும். போலிக் குறுஞ்செய்திகள் போலவே, இதுபோன்ற போலி screenshotகளையும் முதல் பார்வையிலேயே கண்டுகொள்வது கடினம்,” என்கிறார் ஹரிஹரசுதன்.
இந்த மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
அதற்கு ஒரே வழி, ஒருவர் உங்களுக்குப் பணம் அனுப்பியிருப்பதாகச் சொல்லி, அதற்கான ஒரு screenshot-டை அனுப்பினாலோ, அல்லது வங்கியில்ருந்து வந்ததுபோல ஒரு குறுஞ்செய்தி வந்தாலோ, முதலில் உங்களது வங்கிச் செயலியைத் திறந்துபார்த்து, உங்கள் கணக்கில் அந்தத் தொகை செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வதுதான், என்கிறார் ஹரிஹரசுதன்.
இதுபோன்ற மோசடிகளில் வங்கிகள் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்பதால் வங்கிகளும் இதில் ஒன்றும் செய்ய முடியாது, என்கிறார் அவர்.
அப்படி ஒருவர் இந்த முறை மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், போலீசில் புகார் கொடுப்பதுதான் ஒரே வழி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்