You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பண்டார வன்னியன்: இலங்கைத் தமிழர்கள் இந்த மன்னரை மாவீரனாகக் கொண்டாடுவது ஏன்?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம்.
முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான் பகுதியில் பண்டார வன்னியனின் நினைவு சிலை அமைந்துள்ளது.
இந்த இடத்திலேயே ஆங்கிலேயர்களால் பண்டார வன்னியனுக்காக வைக்கப்பட்ட கல்லொன்றும் காணப்படுகின்றது.
யுத்தக் காலத்தில் இந்த நினைவு கல் சேதமடைந்திருந்த நிலையில், அதன் பின்னரான காலத்தில் பிரதேச மக்களால் அந்த கல் மீண்டும் செப்பனிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராக தமிழ் மன்னன் சபதம்
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியானது 1796 ஆம் ஆண்டு ஆரம்பமானது.
ஒல்லாந்தர் காலத்தில், அவர்களுக்கு எதிராக போராடிய காரணத்தினால் பண்டார வன்னியன், ஒல்லாந்தர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் அவரை மீள இணைத்துக் கொண்டுள்ளனர்.
எனினும், தான் மீண்டும் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக பண்டார வன்னியன் சபதம் எடுத்துக் கொண்டார் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ஆங்கிலேயரை வென்ற பண்டார வன்னியன்
இதன்படி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாரிய படையெடுப்பை ஆரம்பித்த பண்டார வன்னியன், வன்னி நிலப்பரப்பை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக முல்லைத்தீவு கோட்டை பகுதியில் 1803 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி போர் தொடுத்த பண்டார வன்னியன், பாரிய வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.
இவ்வாறு கைப்பற்றிய ஆட்சியை, ஆங்கிலேயர்கள் சிறிது காலத்தில் மீள கைப்பற்றிக் கொண்டனர்.
பண்டார வன்னியன் வீர மரணம்
இவ்வாறான பின்னணியில், பண்டார வன்னியன் 1803ம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
ஆங்கிலேய தளபதி ஒருவரின் தலைமையிலான படை, 1803 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி அதிகாலை பண்டார வன்னியன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் பண்டார வன்னியன் மற்றும் அவரது படைகள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சண்டையில் பண்டார வன்னியன் கடுமையாக போராடினாலும், அவர் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார்.
மேலும் இந்த மோதலில் பண்டார வன்னியன் வீர மரணமடைந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
மாவீரனாக கொண்டாடப்படும் பண்டார வன்னியன்
தமிழ் மன்னன் ஒருவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வீர மரணமடைந்தாலும், இலங்கை தமிழர்கள் அவரை மாவீரனாகவே இன்றும் கருதுகின்றனர்.
பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டார் என ஆங்கிலேயர்களால் பொறிக்கப்பட்ட ஆதாரங்களை இன்றும் ஒட்டுச்சுட்டானில் காணக்கூடியதாக இருக்கிறது.
பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டமையை இட்டு கவலைப்பட தேவையில்லை என ஒட்டுச்சுட்டான் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா தெரிவிக்கின்றார்.
பண்டார வன்னியன் குறித்து இலங்கை தமிழர்கள் பெருமிதம்
''பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டார் அல்லது தோல்வியுற்றார் என்பதற்காக நாங்கள் கவலைப்படவோ, துக்கப்படுவதற்கோ தேவையில்லை. காரணம் பண்டார வன்னியனை தோற்கடித்த அதே படைத்தளபதியான கெப்டர் வொன்றிவேர்க், அவர் இந்த இடத்தில் வீரப் போர் செய்து, தங்களுடைய படைகளினால் தோற்கடிக்கப்பட்டார் என்ற வரலாற்றை கற்பொறிப்பில் அவர்கள் பொறித்து வைத்திருக்கின்றனர்."
"1803 ம் ஆண்டு அந்த வரலாற்று தடம் இந்த இடத்தில் பொறிக்கப்பட்டமைக்கான சான்று இங்கு இருக்கின்றது. எனவே நாங்கள் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். எங்கள் தமிழ் வீர மரபினுடைய வரலாறு, அந்த வரலாற்றினுடைய மன்னன் மாவீரன் பண்டார வன்னியன் வாழ்ந்த அந்த வழி தடத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்." என்று சின்னப்பா நாகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய இன்றைய நாளை, வெற்றி நாளாக கருதி, நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
ஒரு தலைவனின் ஊடாக எவ்வாறு எங்களுடைய சமூகத்தினுடைய ஒரு தலைமைத்துவம், மரபுரிமைகள், தொன்மை சிறப்புகள், பாரம்பரியம், பண்பாடு, மொழி, இனம் இவை பாதுகாக்கப்பட்டதோ, அந்த அத்தனை விடயங்களையும் பாதுகாக்க வேண்டும்.
அத்துடன், இன்றைய இளைய தலைமுறை இவை அனைத்தையும் பின்பற்றுகின்ற தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே, பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்