இஸ்ரேல் - இரான்: அமெரிக்கா பேச்சைக் கேட்காத நெதன்யாகுவின் அடுத்த திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ ஃப்ளோடொ
- பதவி, பிபிசி மத்தியக் கிழக்கு சேவை
லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. அதே சமயம் இஸ்ரேலின் போர் ஓராண்டைக் கடந்து தொடர்கிறது.
வியாழன் (அக்டோபர் 10) இரவு பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா., அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர். போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதற்கு இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியாவில் நடக்கும் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு புதிய தாக்குதல் நடைபெற்றது.
இவை அனைத்திற்கும் மேலாக, இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது. ஆனால், இஸ்ரேலின் நட்பு நாடுகள் நிதானத்தை வலியுறுத்துகின்றன.
ஆனால், இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதேசமயம், பல தரப்புகளில் இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்த்து வருகிறது. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:
- அக்டோபர் 7, 2023 தாக்குதல்
- பெஞ்சமின் நெதன்யாகு
- அமெரிக்கா

சுலைமானி படுகொலையை தள்ளி நின்று பாராட்டிய இஸ்ரேல்
இரானிய ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து இரவு நேர விமானத்தில் இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
சுலைமானி இரானின் ஆக்ரோஷமான குட்ஸ் படையின் தலைவராக இருந்தார். இது வெளிநாட்டு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இரானின் புரட்சிகர காவலர் படையின் ரகசியப் பிரிவு.
ஜெருசலேம் என்று பொருள்படும் இந்த குழு, இராக், லெபனான், பாலத்தீனப் பகுதிகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கு ஆயுதம், பயிற்சி, நிதி மற்றும் பினாமி படைகளை வழங்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தச் சமயத்தில், இரானில் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அடுத்தபடியாக சுலைமானி இரண்டாவது சக்திவாய்ந்த நபராக இருந்தார்.
சுலைமானியின் வாகன அணிவகுப்பு விமான நிலையத்தை விட்டு வெளியேறி வந்ததும், அதன் மீது ட்ரோன் மூலமாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் சுலைமானி கொல்லப்பட்டார்.
சுலைமானி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தது இஸ்ரேல் உளவுத்துறை என்றாலும், தாக்குதல் நடத்திய ட்ரோன் அமெரிக்காவிற்கு சொந்தமானது.
இந்தத் தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியது அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்ல.
சுலைமானி கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, முன்னாள் அதிபர் டிரம்ப் பின்னர் ஒரு உரையில், "நெதன்யாகு எங்களைக் கைவிட்டார் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்," என்று கூறினார்.
டிரம்ப் ஒரு நேர்காணலில், ‘அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மிகவும் தீவிரமான பங்கு வகிக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும்’, ‘அமெரிக்காவின் கடைசி சிப்பாய் எஞ்சியிருக்கும் வரை இரானுடன் அமெரிக்கா தொடர்ந்து போராட வேண்டும் என்று நெதன்யாகு விரும்புகிறார்’ என்றும் புகார் கூறினார்.
டிரம்ப் கூறிய இந்தக் கருத்துக்கள் அந்தச் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனாலும், சுலைமானி படுகொலையை நெதன்யாகு பாராட்டினார். அவரைப் பொருத்தவரை, இந்தப் படுகொலைச் சம்பவத்தில் ஒருவேளை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருந்தால், இஸ்ரேலுக்கு எதிரான பெரிய அளவிலான தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று கருதினார். இரான் அல்லது லெபனான், பாலத்தீனப் பகுதிகளில் இருக்கும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களிடமிருந்து பெரியளவிலான எதிர்வினை வந்திருக்கும் என நெதன்யாகு நினைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
தொடரும் தாக்குதல்
இஸ்ரேல் இரானுடன் ஒரு மறைமுகப் போரை எதிர்கொண்டது. ஆனால் இரு தரப்புமே போரை மட்டுப்படுத்துவதில் கவனமாக இருந்தன. பெரிய அளவிலான மோதலுக்கு இருதரப்பும் தயாராக இல்லை.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பெஞ்சமின் நெதன்யாகு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகக் கட்டடத்தைத் தாக்குமாறு இஸ்ரேலிய விமானப் படைக்கு உத்தரவிட்டார். அதில் இரண்டு இரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் ஜூலை மாதம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் இறந்த ஹெஸ்பொலாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கரை படுகொலை செய்யவும் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் மூத்தப் பத்திரிகையாளர் பாப் உட்வார்டின் புதிய நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதன் படி, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தச் சம்பவங்கள் குறித்து மிகவும் கோபமாக இருக்கிறார்.
அமெரிக்க அதிபர்களின் மாறுபட்ட நிலைப்பாடு
வெள்ளை மாளிகை பல மாதங்களாக முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வந்த மோதலைத் தூண்டுவதில் இஸ்ரேலியப் பிரதமர் ஈடுபட்டதை அறிந்து அதிபர் ஜோ பைடன் கோபமடைந்ததாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
"இஸ்ரேல் ஒரு முரட்டுத்தனமான நாடு, அங்கு வசிப்பவர்கள் முரட்டு குணம் கொண்ட மக்கள் என்ற கருத்து இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது," என்று அதிபர் பைடன் கூறினார்.
நெதன்யாகுவை ஒரு அமெரிக்க அதிபர் (டிரம்ப்) மிகவும் ‘எச்சரிக்கையாக இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த மற்றொரு அமெரிக்க அதிபர் (பைடன்) நெதன்யாகுவை மிகவும் 'ஆக்ரோஷமானவர்' என்று விமர்சித்தார்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளின் மிகவும் தீர்க்கமான திருப்புமுனை 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தால் ஏற்பட்டது. இது இஸ்ரேலின் வரலாற்றில் கொடூரமான நாளாகும். இஸ்ரேலின் அரசியல், ராணுவ, மற்றும் உளவுத்துறையின் தோல்விகளை அந்த தினம் அம்பலப்படுத்தியது.
நெதன்யாகு அமெரிக்க அதிபரின் பேச்சைக் கேட்கவில்லை என்பதுதான் இரு நிலைப்பாடுகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.
இஸ்ரேலின் போர் தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதல்களின் தீவிரம் மற்றும் இஸ்ரேலிய சமூகத்தின் மீதான அதன் தாக்கம், அதன் பாதுகாப்பு உணர்வு ஆகியவை இஸ்ரேலின் எதிர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் பாலத்தீனத்தில் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் காஸாவின் துயரமான சூழல் ஆகியவை அமெரிக்காவைச் சங்கடப்படுத்தியது. அதன் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா கருதியது.
அமெரிக்காவிடமிருந்து அதிக மானியங்களைப் பெறும் ஒரு நாட்டை வல்லரசு நாட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை, அமெரிக்காவின் விமர்சகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனாலும், ஏப்ரலில் இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கப் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேலின் பாதுகாப்பு அதன் மிகப்பெரிய கூட்டாளிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இது பிரதிபலிக்கிறது. ஆனால், இஸ்ரேல் போரின் போக்கை மாற்றும் அழுத்தங்களை கண்டுகொள்ளவில்லை.
இந்த வருடம், அமெரிக்காவின் அனுமதியின்றி ஹெஸ்பொலாவுடன் மோதலை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்தது.
நீண்ட காலம் இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் அழுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியும். அதை முற்றிலும் புறக்கணிக்காவிட்டாலும், அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது 20 ஆண்டு கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.
குறிப்பாக, தேர்தல் நடக்கும் சமயத்தில், அமெரிக்கா தனது போக்கில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை நெதன்யாகு அறிவார். அவர் எப்போதும் இதை நம்புகிறார். அதே நேரம், இஸ்ரேல் அமெரிக்காவின் எதிரிகளுடன் போராடுகிறது என்பது அதற்குத் தெரியும்.
சமீபத்திய மோதலைப் பொருத்தவரை, நெதன்யாகு இஸ்ரேலிய அரசியல் போக்கிலிருந்து விலகிச் செயல்படுகிறார் என்று கருதுவது தவறானது. ஏதாவது அழுத்தம் ஏற்பட்டால், ஹெஸ்பொலாவுக்கு எதிராக மட்டுமல்ல, இரானுக்கு எதிராகவும் அவர்கள் வலுவான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், அமெரிக்காவும் பிரான்சும் லெபனான் தொடர்பான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை முன்வைத்த போது, இந்த 21 நாள் போர் நிறுத்தத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பு இஸ்ரேலிடம் இருந்து வந்தது. எதிர்ப்பு தெரிவித்ததில் இஸ்ரேலின் முக்கிய இடதுசாரிப் பிரிவுகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளும் அடக்கம்.

பட மூலாதாரம், Getty Images
தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் இப்போது தனது போரைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது. ஏனெனில், அது சர்வதேச அழுத்தங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்று கருதுவதால் மட்டுமல்ல, அச்சுறுத்தல்களுக்கான சகிப்புத்தன்மை அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு மாறிவிட்டது.
பல ஆண்டுகளாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள கலிலியில் தாக்குதல் நடத்துவதை ஹெஸ்பொலா இலக்காகக் கொண்டுள்ளது. இப்போது இஸ்ரேலிய மக்கள் ஆயுதமேந்திய பலர் தங்கள் வீடுகளுக்குள் நுழையும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியாது, அது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
அச்சுறுத்தல் பற்றிய இஸ்ரேலின் பார்வையும் மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு பரவலான போரைத் தூண்டக்கூடிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக டெஹ்ரான், பெய்ரூட், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் ஆகிய நகரங்கள் மீதான குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்.
டெஹ்ரானில் இரானின் விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் முழு தலைமையையும் நீக்கியது. சிரியாவில் உள்ள தூதரகக் கட்டடத்தில் இருந்த இரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஹெஸ்பொலா இதுவரை 9,000 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவியுள்ளது. டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும் அது தாக்குதல் நடத்தியது. இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைகளை ஏவியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ராணுவத்தால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
கடந்த ஆறு மாதங்களில் இஸ்ரேல் மீது இரான் ஒரு முறை அல்ல இரண்டு முறை பெரியளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் அது 500 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மீது தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது கடந்த காலத்தில் நடந்திருந்தால், இந்தச் சம்பவங்களில் ஏதேனும் ஒன்று கூட பரவலான பிராந்திய யுத்தத்திற்கு வழிவகுத்திருக்கும். கடந்த காலங்களில் பொதுவாக எச்சரிக்கையாக இருந்து ஆபத்துகளைத் தவிர்த்து வந்த நெதன்யாகுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












