இஸ்ரேல் vs இரான்: ஹமாஸ் தலைவர் கொலைக்கு 'சரியான நேரத்தில் பதிலடி'

"தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம்" - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரான் சூளுரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் பொறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி பாகேரி
    • எழுதியவர், டாம் பென்னட்
    • பதவி, பிபிசி செய்தி, லண்டனில் இருந்து

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு "சரியான நேரத்தில், பொருத்தமான முறையில் இரான் பதிலடி கொடுக்கும்” என அந்நாட்டின் பொறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளின் குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC-ஓஐசி), இஸ்மாயில் ஹனியே கொலைக்கு இரானின் எதிர்வினை பற்றி விவாதிக்க செளதி அரேபியாவில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

இரான், 'மோதல் சூழலை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு' எதிராக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் எச்சரிப்பார்கள் என்று நம்புவதாக அமெரிக்கா கூறியது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை

கடந்த வாரம் இரான் தலைநகர் டெஹ்ரானில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரானும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டின, ஆனால் இஸ்ரேல் தரப்பு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இரானிய மற்றும் பாலத்தீனிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC- ஓஐசி) புதன்கிழமை செளதி அரேபியவில் கூடியது.

இந்த கூட்டத்தில் பேசிய இரானின் பொறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் பக்யூரி அலி பாகேரி கனி, ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு இரான் கொடுக்கப் போகும் பதிலடியை ஓஐசி அமைப்பு ஆதரிக்கும் என எதிர்பார்ப்பதாக’ கூறினார்.

"இரானின் நடவடிக்கை அதன் சொந்த இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அரண் மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அரண்" என்று அவர் கூறினார்.

பின்னர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரானின் இறையாண்மை மீதான "தீவிரமான தாக்குதல்" என்றும் ஓஐசி அமைப்பு விவரித்தது.

அதே சமயம் இரானிய ராணுவ நடவடிக்கைக்கு இந்த அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.

"தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம்" - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரான் சூளுரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார்

பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஏப்ரலில், சிரியாவில் உள்ள அதன் தூதரக வளாகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இரான் இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. கிட்டத்தட்ட அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

தற்போதைய சூழலில் இரானின் பதிலடி இதே வடிவத்தை எடுக்கலாம் என பலர் அஞ்சுகின்றனர்.

செளதி அரேபியா புதன்கிழமை (ஆகஸ்ட் 7) இந்த கொலை குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்தது. துணை வெளியுறவு அமைச்சர் வலீத் அல்-குராய்ஜி, "இது இரானின் இறையாண்மைக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடு" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு

மோதலை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இஸ்ரேலை நாங்கள் வலியுறுத்துவது போல, இரானுடன் உறவு வைத்திருக்கும் அனைத்து தரப்பினரும் இதே அழுத்தத்தை இரானுக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சில உறுப்பினர்களுடன் அமெரிக்கா தொடர்பில் இருப்பதாகவும், "மோதல் அதிகரிப்பது இந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மேலும் மோசமாக்கும்" என்ற ஒருமித்த கருத்து அனைத்து தரப்புக்கும் இருப்பதாக நம்புவதாகவும் மில்லர் கூறினார்.

செவ்வாயன்று ஜோர்டான், கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து பதற்றச் சூழலை தணிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

"இந்த மோதலை அதிகரிக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். நாங்கள் அனைத்து தரப்பினருடனும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம், அந்த செய்தியை இரானுக்கு நேரடியாகத் தெரிவித்தோம். இஸ்ரேலுக்கும் தெரிவித்தோம்" என்று செவ்வாயன்று (ஆகஸ்ட் 6) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறினார்.

"தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம்" - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரான் சூளுரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வான்வழி தாக்குதல் மூலம் ஹனியே கொல்லப்பட்டார்

இரானிடம் பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை

புதன்கிழமையன்று இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானிடம் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், "இரான் இந்த விவகாரத்தில் மோதல் சூழலை அதிகரித்தால் மத்தியக் கிழக்கு பிராந்திய நிலைத்தன்மைக்கு நிரந்தரமாக தீங்கு விளைவிக்கும்" என்று கூறினார்.

மேற்கத்திய நாடுகள் போரைத் தடுக்க விரும்பினால், "ஆயுதங்களை விற்பதையும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று மக்ரோங்கிடம் இரானிய அதிபர் கூறியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது எப்படி?

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 31-ம் தேதி கொல்லப்பட்டார்.

"குறுகிய தூர எறிகணை" மூலம் அவர் கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவலர் படை தெரிவித்தது.

ஏவப்பட்ட அந்த எறிகணை சுமார் 7 கிலோ (16lbs) எடையுடன் "பலமான வெடிப்பை" ஏற்படுத்தியதாகவும், இதனால் ஹனியே மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் கொல்லப்பட்டதாகவும் இரான் துணை ராணுவ அமைப்பு கூறியது.

இரானில் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க டெஹ்ரானுக்கு இஸ்மாயில் ஹனியே சென்றிருந்தார்.

இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி), இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செயல்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியது. ஆனால் ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)