'பிராமணர்' விமர்சனத்தை தொடர்ந்து மீண்டும் சாடல்: இந்தியா பற்றி டிரம்பின் ஆலோசகர் என்ன சொன்னார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா 'பூஜ்ஜிய வரி' வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோதியை குறிவைத்து தாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இம்முறை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டை ஒரு காரணமாக்கியிருக்கிறார்.

"சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேடையைப் பகிர்ந்துகொண்டது வெட்கக்கேடானது," என நவரோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன் பின்னர், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், மேலும் ஐரோப்பா மற்றும் யுக்ரேனுடன் நிற்க பிரதமர் மோதி முன் வரவேண்டும்," என அவர் சமீபத்திய நாட்களில் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 'இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்க' ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது மிகவும் தாமதமானது எனவும் திங்கட்கிழமை டிரம்ப் கூறியுள்ளார்.

தற்போது பிரதமர் மோதி சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நட்புடன் சந்தித்துப் பேசினார்.

மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன, மேலும் மேற்கத்திய ஊடகங்கள், டிரம்பின் வரி விதிப்புகளால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கமாகி வருவதாக பகுப்பாய்வு செய்கின்றன.

புதின், மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, திங்கட்கிழமை சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டின்போது புதின், மோதி மற்றும் ஷி ஜின்பிங்

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பீட்டர் நவரோ ஏற்கெனவே பலமுறை கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் இந்தியாவை ரஷ்ய எண்ணெய்க்கு 'தானியங்கி சலவை இயந்திரம்' (பணமோசடி மையம்) என்று அழைத்தார், இந்திய மக்களின் செலவில் 'பிராமணர்கள்' லாபம் ஈட்டுவதாகவும், இதை 'நிறுத்த வேண்டும்' என்று ஒருநாள் முன்னதாக கூறினார்.

டிரம்ப் மற்றும் நவரோ இந்தியாவை 'வரி மன்னர்' என்று அழைத்தனர், ஆனால் அமெரிக்காவிலேயே டிரம்பின் கொள்கைகள் குறித்து அசௌகரியம் உணரப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், இந்தியாவைப் பற்றிய டிரம்பின் கொள்கைகளை அமெரிக்காவுக்கு ஒரு பெரிய 'உத்தி இழப்பு' என்று விவரித்தார், மேலும் 'அமெரிக்கா பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்கிறது' என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய பீட்டர் நவரோ, "அமைதியின் பாதை ஓரளவு புது தில்லி வழியாக செல்கிறது. இப்போது மோதி முன்னுக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோதியை மிகவும் மதிக்கிறேன். இந்திய மக்களை நேசிக்கிறேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரான மோதி, உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளான புதின் மற்றும் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பது வெட்கக்கேடானது. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை." என்றார்.

மோதி குறித்து நவரோ என்ன கூறினார்?

பீட்டர் நவரோ

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

படக்குறிப்பு, பீட்டர் நவரோ இந்தியா மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தியா மற்றும் சீனா இடையேயான ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றங்களையும் நவரோ சுட்டிக்காட்டினார். "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை, குறிப்பாக இந்தியா பல தசாப்தங்களாக சீனாவுடன் பனிப்போரிலும், எல்லையில் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது," என்றார்.

"எனவே, இந்திய தலைவர்கள் எங்களுடனும், ஐரோப்பாவுடனும், யுக்ரேனுடனும் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல. மேலும் அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா இந்தியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் இதையே காரணமாகக் கூறி டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித கூடுதல் வரி விதித்தார், இதனால் இறக்குமதி வரி மொத்தம் 50 சதவிகிதமாக உயர்ந்தது.

ஆனால், இந்தியா இதை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு ஏற்புடையதல்ல' என்று விவரித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வரிகள் குறித்து டிரம்பின் கருத்து

திங்கட்கிழமை, ஷி ஜின்பிங் மற்றும் புதினை மோதி சந்தித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் எனப்படும் சமூக ஊடகதளத்தில், "பலருக்கு இது புரிவதில்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைவாகவே வணிகம் செய்கிறோம், ஆனால் அவர்கள் (இந்தியா) எங்களுடன் பெரிய அளவில் வணிகம் செய்கிறார்கள்," என தெரிவித்தார்.

"வேறு வார்த்தைகளில், இந்தியா எங்களுக்கு பெரிய அளவில் பொருட்களை விற்கிறது. நாங்கள் அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். இது இதுவரை முற்றிலும் ஒருதலைபட்ச உறவாக இருந்து வருகிறது, பல தசாப்தங்களாக இப்படியே நடந்து வருகிறது," என டிரம்ப் தெரிவித்தார்.

"எங்கள் வணிகங்கள் இன்னும் இந்தியாவில் பொருட்களை விற்க முடியவில்லை. இதற்கு காரணம், இந்தியா மற்ற நாடுகளை விட எங்களுக்கு மிக உயர்ந்த வரி விதித்துள்ளது. இது இதுவரை ஒரு ஒருதலைபட்ச பேரழிவாக இருந்து வந்துள்ளது," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இப்போது இந்தியா வரியை பூஜ்ஜியமாக்க முன்வந்துள்ளது, ஆனால் அது தாமதமாகிறது. அவர்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்," என டிரம்ப் மேலும் கூறினார்,

டிரம்ப் முன்பும் இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைப் பற்றி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது, பின்னர் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என டிரம்ப் உரிமை கொண்டாடுவதும் இருந்தது.

மோதலை நிறுத்துவதற்காக மக்களுக்கு தலைசுற்றும் அளவுக்கு வரிகளை விதிப்பேன் என இந்தியாவிடம் கூறியதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்தல்

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன் இந்தியா குறித்த டிரம்பின் கொள்கைகள் குறித்து எச்சரித்துள்ளார்.

இந்தியா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை குறித்து அமெரிக்காவிலும் அதிருப்தி உள்ளது, மேலும் குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி சமீபத்தில் இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, டிரம்ப் தனது கொள்கைகளால் தனது கூட்டாளிகளை விலக்கி வைப்பதாக கவலை தெரிவித்தார்.

பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், கடந்த மாதம் "இந்தியாவுடனான உறவுகளை தியாகம் செய்வது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய உத்தி இழப்பு" என்று எச்சரித்தார்.

ஆகஸ்ட் 20 அன்று ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சல்லிவன், அமெரிக்க அதிபர் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது, டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட செய்தியாக இருந்தது என்றார்.

அமெரிக்கா பல தசாப்தங்களாக "உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான" இந்தியாவுடன் உறவுகளை உருவாக்கி வந்துள்ளது. சீனாவின் உத்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அமெரிக்கா இந்தியாவுடன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் நண்பர்களும் உலகின் மற்ற நாடுகளும் அமெரிக்காவை எந்த வகையிலும் நம்ப முடியாது என்று நினைக்கத் தொடங்கினால், அது நீண்ட காலத்தில் அமெரிக்க மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது," என சல்லிவன் மேலும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு