You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை: அதிக வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி - ஓர் சுவாரஸ்ய வரலாறு
- எழுதியவர், க. போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் சுமார் 30 ஆண்டுகள் வரலாறு கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 22) பெர்த் நகரில் தொடங்கியது.
உலகக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு அடுத்ததாக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக பார்டர்-கவாஸ்கர் கோப்பை ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
1947-48-ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகின்றன.
ஆனால், இரு அணிகளிலும் இருந்த முன்னாள் கேப்டன்கள், ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், ஆலன் பார்டர் ஆகியோருக்கு மரியாதை, கெளரவம் வழங்கும் விதத்தில் 1996-97ம் ஆண்டு முதல் பார்டர்-கவாஸ்கர் கோப்பை உருவாக்கப்பட்டு டெஸ்ட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடங்கப்பட்டபின், இந்தியா- ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இந்த டெஸ்ட் தொடரை வெல்வது மிகப்பெரிய கெளரவப் பிரச்னையாக மாறிவிட்டது.
ஆஸ்திரேலிய அணி ஒருமுறை மட்டும் (2004-05) இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை வென்றுள்ளது.
ஆனால், நீண்டகாலத்துக்குப்பின் பதிலடி கொடுத்த இந்திய அணி, 2018-19, 2020-21 என தொடர்ந்து இருமுறை ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று சாதித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுவரை 8 ஆண்டுகளாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்து வருகிறது.
இதுவரை பார்டர்-கவாஸ்கர் கோப்பை
கடந்த 1996-97ம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தொடங்கப்பட்டு, 2024 ஆண்டுவரை சீரான இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. இதில் 10 முறை இந்திய அணி தொடரை வென்றுள்ளது. 5 முறை ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன, ஒருமுறை டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டிரா செய்துள்ளது. டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தால், முந்தைய தொடரை எந்த அணி வென்றிருந்ததோ அந்த அணியே கோப்பையைத் தக்கவைக்கும்.
இதுவரை இந்தியாவில் 9 முறை பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டுள்ளன, அதில் 8 முறை (1996-97, 1997-98, 2000-01, 2004-05, 2008-09, 2010-11, 2012-13, 2016-17, 2022-23) இந்திய அணி வென்றுள்ளது.
அதேபோல ஆஸ்திரேலியாவில் 7 முறை (1999-00, 2003-04, 2007-08, 2011-12, 2014-15, 2018-19, 2020-21) பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டுள்ளன. அதில் 4 முறை மட்டுமே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது, 2 முறை இந்திய அணி வென்று, ஒருமுறை டிரா செய்துள்ளது.
இதுவரை இந்தத் தொடரில் 56 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், 24 போட்டிகளில் இந்திய அணியும் வென்றுள்ளன, 12 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இந்தியாவில் மட்டும் 32 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 18 ஆட்டங்களில் இந்திய அணியும் 6 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் 27 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 14 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், 6 போட்டிகளில் இந்திய அணியும் வென்றுள்ளன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடர் இரு அணிகளுக்கும் கடும் போட்டியாகவும், சவாலாகவும் இருந்தது 2001 மற்றும் 2007-08 தொடர்கள்தான். 2001ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி வந்திருந்தது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று தொடர்ந்து 16 டெஸ்ட்களில் வென்ற ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதேபோல, 2007-08ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. அங்கு பெர்த் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று, 2005 முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையாமல் 16 டெஸ்ட் போட்டிகளாக வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் சாதனைக்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
ஜாம்பவான்களின் மோதல் திருவிழா
பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்து இரு அணிகளிலும் இருக்கும் ஜாம்பவான் வீரர்கள் களத்தில் ஆவேசமான பந்துவீச்சு, பேட்டிங்கிலும் மோதிக்கொள்ளும் திருவிழாவாகவே இருந்துள்ளது.
இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், நயன் மோங்கியா, ராகுல் டிராவிட், கங்குலி, விவிஎஸ் லட்சுமண், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், அணில் கும்ப்ளே, அஸ்வின், விராட் கோலி, பும்ரா, ஷமி, இசாந்த் சர்மா என சிறந்த வீரர்கள் இந்திய அணியிலும், ஆஸ்திரேயாவின் பக்கம் பிரட் லி, ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித், டேமியன் மார்டின், பாட் கம்மின்ஸ், மெக்ராத், பிளெமிங், நாதன் லேயான், மேத்யூ ஹேடன், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ் என ஒவ்வொரு காலக் கட்டத்திலும் புதிய வீரர்களின் எழுச்சியும், அனுபவ வீரர்களின் ஆட்டமும் தொடருக்கு சுவாரஸ்யத்தையும், ரசனையையும், பரபரப்பையும், அதிகப்படுத்தின.
களத்திலும் வீரர்களுக்கு இடையே நடக்கும் சூடான வார்த்தை மோதல், உரசல்கள், கிண்டல்கள் ஆட்டத்தின் வேகத்தையும், ரசனையையும் அதிகப்படுத்தி, இரு நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு தீணிபோட்டன.
2024 பார்டர்-கவாஸ்கர் தொடர் ஏன் முக்கியமானது?
பார்டர்-கவாஸ்கர் தொடர் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 2018ம் ஆண்டுவரை (22 ஆண்டுகளாக) ஆஸ்திரேலியாவில் ஒருமுறைகூட கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை.
முதல்முறையாக 2018-19ம் ஆண்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றது. தொடர்ச்சியாக 2வது முறையும் 2020-21ம் ஆண்டிலும் இந்திய அணி வென்று சாதித்துக்காட்டியது.
இப்போது 3வது முறையாக நவம்பர் 22ம் தேதி தொடங்கியுள்ள டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வெல்லுமா, அல்லது இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு ஆஸ்திரேலிய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் தொடரை வென்று கடந்த 5 ஆண்டுகளாக கோப்பையை இந்திய அணி தக்கவைத்துள்ளதால், இதை முறியடிக்க இந்த முறை ஆஸ்திரேலிய அணி முயலும் என்பதால் போட்டிகள் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு இந்த பார்டர்-கவாஸ்கர் தொடர் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே வெற்றியுடன் முடிக்கவும் இந்திய அணி தீவிரமாகப் போராடும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஒரு டெஸ்டில் தொடங்கப்பட்ட தொடர்
1996-97ம் ஆண்டில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டில் ஒரே டெஸ்ட் போட்டியாக இந்தத் தொடர், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தார்.
இந்த ஆட்டம் 1996, அக்டோபர் 10ம் தேதி தொடங்கி 4 நாட்களில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்களும், இந்திய அணி 361 ரன்களும் குவித்தன. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த நயன் மோங்கியா 152 ரன்கள் விளாசினார்.
2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 58 ரன்கள் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் சேர்த்த இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. அணில் கும்ப்ளே இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
28 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி
1997-98 பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் 3 போட்டிகளாக நடத்தப்பட்டது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையைத் தக்கவைத்தது.
இந்தத் தொடரில் சச்சினின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் சச்சின் 155 ரன்கள் சேர்த்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவே, அந்த டெஸ்டில் இந்திய அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் முகமது அசாருதீனின் 163 ரன்கள் சேர்த்த ஆட்டத்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியுடன் கோப்பையைத் தக்கவைத்தது.
பெங்களூருவில் நடந்த 3-வது டெஸ்டில் சச்சின் சதம் அடித்தாலும், ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாஹ் சதம் அடித்தார். மேலும், மார்க் டெய்லரின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியை வென்றது 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1970-ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறாமல் இருந்த ஆஸ்திரேலிய அணி 28 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
ஒயிட்வாஷாகிய இந்திய அணி
பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 1999-2000 ஆண்டில் பயணம் செய்தது. இந்தத் தொடரில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோற்று 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியது.
ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது சச்சினின் பேட்டிங்தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க மெல்போர்ன் மைதானத்தில் சச்சின் சதமடிக்க, வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ அறிமுகமான போட்டி இது.
சிட்னியியில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணியை இன்னிங்ஸ் 141 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வென்றது. வி.வி.எஸ். லட்சுமண் 167 ரன்கள் சேர்த்து இந்திய அணியை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றினார். கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காலத்தால் அழிக்கமுடியாத வெற்றி
2000-01 ஆம் ஆண்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று மீண்டும் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது.
கொல்கத்தாவில் மார்ச் 11 முதல் மார்ச் 15 தேதிவரை நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அறிமுகமாகியிருந்த ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருந்தார்.
அது மட்டுமல்லாமல், 69 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஆட்டத்தில் இந்திய அணி 171 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கியது ஆஸ்திரேலிய அணி.
3வது நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்த டெஸ்டில் இந்திய அணி தோற்றுவிடும் என பலரும் நம்பினர். ஆனால் லட்சுமண், ராகுல் டிராவிட் 4வது நாளில் அமைத்த கூட்டணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்துவிட்டது.
பல பந்துவீச்சாளர்களை கேப்டன் ஸ்டீவ் வாஹ் பயன்படுத்தியும் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. டிராவிட் 180 ரன்களும், லட்சுமண் 281 ரன்களும் சேர்த்து 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர். 7 விக்கெட் இழப்புக்கு 657 ரன்கள் சேர்த்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து, கடைசிநாளில் இந்திய அணி பந்துவீசியது.
ஹர்பஜன், அணில்கும்ப்ளே, சச்சின் என 3 பேரும் மாறி மாறி சுழற்பந்துவீசியதில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஃபாலோ ஆன் பெற்ற ஒரு அணி, டெஸ்ட் போட்டியில் வென்ற 3வது அணி என்ற பெருமையை பெற்றது இந்தியா. டிராவிட், லட்சுமண் பேட்டிங், ஹர்பஜன் சிங்கின் சிம்மசொப்பன பந்துவீச்சு என்றென்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.
3வது டெஸ்ட் சென்னையில் நடந்தது. இந்த டெஸ்டிலும் ஹர்பஜன் சிங்கின் ஆஃப் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறினர். ஹர்பஜன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 42 ஓவர்களில் 155 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்கு நிர்ணயித்தது.
சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியது. 151 ரன்களுக்கு 8-வது விக்கெட்டும் சரிந்தது. விக்கெட் கீப்பர் சமீர் டீகே, ஹர்பஜன் சிங் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். ஹர்பஜன் சிங் வின்னிங் ஷாட் அடித்து இந்திய அணிக்கு கோப்பையை உறுதி செய்தார்.இந்த வெற்றி மூலம் 30 ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியாத வரலாறு காப்பாற்றப்பட்டது.
டிரா செய்த இந்திய அணி
செளரவ் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு 2003-04ம் ஆண்டில் இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் தொடருக்காக சென்றிருந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது.
பார்டர்-கவாஸ்கர் தொடர் ஒரேமுறை மட்டுமே டிராவில் முடிந்தது என்றால் அது இந்த முறைதான். இதன் மூலம் இந்திய அணி நடப்பு சாம்பியன் என்பதாலும், டெஸ்ட் தொடரை சமன் செய்ததாலும் கோப்பையைத் தக்கவைத்தது.
அடிலெய்ட் டெஸ்டில் டிராவிட்டின் இரட்டை சதம், சிட்னியில் சச்சின் 241 ரன்கள் குவிப்பு, கங்குலியின் முதல் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் ஆகியவை டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்யக் காரணமாக இருந்தது. குறிப்பாக டிராவிட் டெஸ்ட் தொடரில் 694 ரன்கள் குவித்தார், விவிஎஸ் லட்சுமன் 494 ரன்களும், சேவாக் 464 ரன்களும் சேர்த்தனர்.
35 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடர் வெற்றி
இந்திய மண்ணில் 35 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருந்த ஆஸ்திரேலிய அணி 2004-05 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று அதன் தாகத்தை தணித்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபியிலும், நெதர்லாந்து, இலங்கை தொடரிலும் இந்திய அணி மோசமாக ஆடி இருந்தது. அதைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் ஆஸ்திரேலிய அணியிடம் டெஸ்ட் தொடரை 2-1 என இழந்து மோசமான தோல்வியை இந்திய அணி பதிவு செய்தது. 1969ம் ஆண்டுக்குப் பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத ஆஸ்திரேலிய அணி வென்றது. மெக்ராத், ஷேன் வார்ன் ஆகிய ஜாம்பவான்களுக்கு இந்த தொடர் கடைசியாக அமைந்தது.
லாராவின் சாதனையை முறியடித்த சச்சின்
2008-09 பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திருந்தது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் தனித்தனி கேப்டன் என்ற முறை வந்தபோது, கும்ப்ளே தலைமையில் கிடைத்த மிகப் பெரிய தொடர் வெற்றியாகும்.
மொஹலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை எட்டி, லாராவின் 11,953 ரன்கள் சாதனையை முறியடித்தார். இந்த டெஸ்டில் இந்திய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது. கடந்த 1977ம் ஆண்டில் மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணியை 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. அதைவிட கூடுதல் ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
டெல்லியில் நடந்த 3வது டெஸ்டில் விவிஎஸ் லட்சுமண், கம்பீர் ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர். ஒரே டெஸ்டில் இரு இந்திய பேட்டர்கள் இரட்டை சதம் அடித்தது முதல் நிகழ்வாக இருந்தது. கங்குலி, கும்ப்ளே ஆகிய இரு ஆளுமைகளுக்கு இந்த டெஸ்ட் தொடர் கடைசியாக அமைந்தது.
2வது முறையாக ஒயிட்வாஷ்
2011-12 பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியது. இந்திய அணிக்கு 2வது முறையாக உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்த எம்எஸ் தோனி தலைமையில் சென்றிருந்த இந்திய அணி மோசமாக ஆடி தோற்றது.
இந்திய அணி சார்பில் இந்தத் தொடரில் விராட் கோலி 300 ரன்களைக் குவித்தார். 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த மைக்கேல் கிளார்க் முச்சதம் விளாசி டெஸ்ட் வரலாற்றில் 25 பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். 4வது டெஸ்டில் பாண்டிங், கிளார்க்ஜோடி 4வது விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையைப் படைத்தனர்.
ஆஸ்திரேலிய அணி பெரிய தலைமுறை மாற்றத்தை இந்தத் தொடரில் கொண்டு வந்தது. மெக்ராத், வார்ன், கில்கிறிஸ்ட், ஹேடன் ஆகியோர் ஓய்வு பெற்றபின், பாண்டிங் ஃபார்மின்றி தவித்தபின் புதிய வீரர்களை அறிமுகம் செய்தது. கிளார்க், பீட்டர் சிடில், பட்டின்சன், வார்னர், ஹாரிஸ், ஸ்டார்க், ஷான் மார்ஷ், நாதன் லேயான், கிறிஸ்டியன் போன்ற இளம் வீரர்கள் அறிமுகமாகினர்.
கோலியின் விஸ்வரூபம்
2014-15 பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றாலும், விராட் கோலி என்ற மாபெரும் வீரர் உலகிற்கு அடையாளமாகினார். இந்த தொடரில் மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி முடிந்தபின், திடீரென எம்எஸ் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 692 ரன்களைக் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடிலெய்டில் இரு இன்னிங்ஸிலும் கோலியின் சதம், மெல்போர்ன் டெஸ்டில் 169,54 ரன்கள், சிட்னி டெஸ்டில் 147 ரன்கள் என 4 சதங்களை ஆஸ்திரேலிய மண்ணில் அடித்து பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கோலி ஈர்த்தார்.
ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி
2018-19 பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்திய அணியால் மறக்க முடியாது. கோலி தலைமையில் சென்றிருந்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வென்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி புஜாராவின் சதத்தால் 31 ரன்களில் வென்று 2008ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றியை பெற்றது.
மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் புஜாரா 2 சதங்கள் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார்.
2வது முறையாக கோப்பையை வென்ற இந்தியா
2020-21ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையைத் தக்கவைத்தது. இந்த தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இ்ந்திய அணி 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பெரி தோல்வியைச் சந்தித்தது. இந்த போட்டி முடிந்தவுடன் கேப்டன் கோலி சொந்த விவகாரங்களுக்காக தாயகம் திரும்பினார்.
அதன்பின் 3 போட்டிகளுக்கு ரஹானே தலைமையில் இந்திய அணி விளையாடியது. புஜாரா, ரஹானே தவிர அணியில் அனுபவமான வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களான ரிஷப் பந்த், சிராஜ், கில், நடராஜன், ஆகியோரை வைத்துக்கொண்டு ரஹானே டெஸ்ட் தொடரை வென்று சாதித்தார்.
மெல்போர்ன் டெஸ்டில் ரஹானே அடித்த சதம் போட்டியை வெல்ல உதவியது. சிட்னி டெஸ்டில் ரிஷப் பந்தின் 97 ரன்கள், கில் அரைசதம் ஆகியவை டெஸ்ட் போட்டியை டிரா செய்ய உதவியது.
பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் ஷர்துல் தாக்கூர் அடித்த 67 ரன்கள், கில்லி 91 ரன்கள் இந்திய அணி வெற்றிக்கு உதவியது. இந்தடெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தக்கவைத்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து 2வது முறையாக பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது.
இதைத் தொடர்ந்து, 2022-23ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று 3வது முறையாக கோப்பையைத் தக்கவைத்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)