You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு (pre trial chamber - குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசாரணை பிரிவு) நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலண்ட் மற்றும் டெய்ப் மற்றும் (கொல்லப்பட்ட) இரு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வாருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரினார்.
மேலும், ஜூலை மாதம் காஸாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய நிலையில் அவருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக நடைபெறும் போரில், போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவரும் "பொறுப்பானவர்கள்" என்ற குற்றச்சாட்டுக்கு "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த பிடிவாரண்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளையும் பொறுத்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்தான் இவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரும் மனுவுக்கு அடிப்படையாகும்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காஸாவில் குறைந்தது 44,000 பேர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறுவது என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, “யூத எதிர்ப்பு மனநிலையிலானது” என்றும் “நவீன கால டிரேஃபஸ் விசாரணை (Dreyfus trial)” என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிரேஃபஸ் விசாரணை என்பது, 19-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் யூத ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட விசாரணை ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டியது.
''பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார், [காஸாவில்] ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடையும் வரை பின்வாங்க மாட்டார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)