14 வயது சிறுமிக்கு திருமணம்: வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்கள்; கதறி அழுத சிறுமி - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (06/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலை கிராமத்தில் உள்ள மாதேஸின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிக்கொண்டு சென்று மாதேஸின் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்த புகாரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: வல்லுநர் குழு தலைவர்

பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என, வல்லுநர் குழு தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "முருகன் கோவில் மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று, பழநி கோவில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் தெரிவித்தார்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.

மூலவர் சிலையைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதீனங்கள், ஸ்தபதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது மூலவர் சிலையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.

அதன்படி, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் இணை ஆணையர் நடராஜன், தற்போதைய இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஐஐடி பேராசரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர், குழுத் தலைவர் பொங்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழநி முருகன் கோவில் மூலவர் சிலை உறுதித்தன்மையுடன் இருக்கும். சிலை பாதுகாப்பாக இருக்கிறது. மூலவர் சிலை குறித்த ஐஐடி குழுவினரின் ஆய்வு முடிவை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது" என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகா் சிங்கமுத்துக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகா் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகா் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகா் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞா் முறையிட்டார். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினாஷ் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அல் அய்னில் ஒரு பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சக இந்தியக் குடியேறி ஒருவரைக் கொலை செய்ததற்காக முரளீதரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை குறித்து பிப்ரவரி 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதரகத்துக்கு தகவல் அளித்தது, அதன் பின்னர் தூதரகம் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டது. தூதரகம் இருவருக்கும் சாத்தியமான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகம் கருணை மனுக்கள் மற்றும் மன்னிப்பு கோரிக்கைகளை சமர்ப்பித்ததாகவும், ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் இப்போது இறுதி சடங்குகளில் குடும்பங்களின் பங்கேற்பை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக: இலங்கை எம்.பி

இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோர மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதார ஆதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயல்படுவதாக இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தத் தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2025 வரவுசெலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)