வன்முறை முதல் முதல்வரின் ராஜினாமா வரை! ஒன்றரை ஆண்டில் மணிப்பூரில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன்சிங் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார்.
முதலமைச்சர் அலுவலகத்தின் தனி உதவியாளரான தீபக் ஷிஜாகுருமாயும் பிபிசியிடம் பேசிய போது, ஞாயிற்றுக்கிழமை மாலையில் முதலமைச்சர் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதாக குறிப்பிட்டார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக சனிக்கிழமையன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக பாஜக தொண்டர்களை பிரேன் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்தியிருந்தார்.
பிரேன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பரவலான வன்முறை மற்றும் இதனை கையாளுவதில் தாமதம் செய்ததாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு போன்றவை பிரேன் சிங்கின் ராஜினாமாவை முக்கியத்துவம் பெறச் செய்கின்றன.

மே 2023: மணிப்பூரில் வெடித்த வன்முறை
மணிப்பூரில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வன்முறை தொடங்கியது.
2023ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் , மெய்தெய் சமூகத்தினரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக விரைவாக பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பின் சில நாட்கள் கழித்து 2023ம் ஆண்டு மே 3ம் தேதி குகி மற்றும் மெய்தேய் பழங்குடியினரிடையே இனக்கலவரம் வெடித்ததில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர்.
அனைத்து பழங்குடி மாணவர்கள் கூட்டமைப்பு நடத்திய பேரணி வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து மாநில அரசு வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வன்முறைகளின் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடங்களை இழந்தனர்.
மெய்தெய் சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைகளுக்கு முதன்மைக் காரணமாக கருதப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு மணிப்பூரின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
2024ம் ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூர் உயர்நீதிமன்றமானது தனது முந்தைய உத்தரவிலிருந்து மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பரிந்துரைப் பகுதியை நீக்கியது.
இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மெய்தெய் மற்றும் குகி சமூக மக்கள் இன்னமும் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இன்னும் சிலர் மாநிலத்திலிருந்து வெளியேறி அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூர் அரசின் தரவுகளின்படி, 250க்கும் மேற்பட்டோர் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் தொடங்கிய வன்முறை 21 மாதங்களுக்குப் பிறகும் முழுமையாக அமைதியடையவில்லை. வன்முறை தொடர்பான செய்திகள் இன்னமும் அந்த மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளன.
அமித் ஷா பயணமும், பிரேன் சிங்கின் கருத்தும்

பட மூலாதாரம், ANI
மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டதற்குப் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2023ம் ஆண்டு மே மாத இறுதியில் மணிப்பூரிற்கு நேரில் சென்றார்.
வன்முறைச் சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 20 ஆயிரம் மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் பிரேன் சிங் அப்போது குறிப்பிட்டார்.
பிடிஐ செய்தி முகமையின் தகவலின்படி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மணிப்பூரின் பல்வேறு பிரிவினரின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா, மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதே அரசின் முன்னுரிமை என குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் ராணுவம், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகரிகளுடனான ஆலோசனையின் போது, அமைதியைக் கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அமித் ஷா உத்தரவிட்டார்.
ஜூலை 2023: இரண்டு பெண்களின் வீடியோ

பட மூலாதாரம், Getty Images
2023ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நிர்வாணமாக்கப்பட்ட இரண்டு குகி பழங்குடி பெண்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வீடியோ சமூக ஊடங்களில் பரவிய நிலையில், மணிப்பூர் வன்முறை உலகெங்கும் மீண்டும் தலைப்புச் செய்தியானது.
மே 4ம் தேதி மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே இந்த பெண்கள் என்பதை மணிப்பூர் போலீஸ் உறுதி செய்தது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டு, தனது இதயம் வலியால் நிறைந்திருப்பதாக குறிப்பிட்டார். மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையால் நாடு அவமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இதில் ஈடுபட்டவர்களை விட மாட்டோம் என கூறினார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பேசியது இதுவே முதன்முறையாகும். முன்னதாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பேசாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
ஜூலையின் பிற்பகுதியில் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே பேசுகையில்," மணிப்பூரில் நடைபெறும் சம்பவங்களில் வெளிநாட்டு சக்திகளின் பங்களிப்பு இருப்பதை மறுக்க முடியாது. எல்லையோர மாநிலங்களில் நிலையற்ற தன்மை இருப்பது ஒட்டு மொத்த தேசப்பாதுகாப்புக்கும் நல்லதல்ல" என குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், EPA
ஜனவரி 2024
கடந்த ஆண்டின் ஜனவரியின் மையத்தில் பல்வேறு பகுதிகளில் 48 மணி நேரத்தில் ஏற்பட்ட வன்முறைகளில், பொதுமக்கள் 5 பேர் மற்றும் பாதுகாப்பு படையினரில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்களில் ஒன்று விஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. ஒரு வியாழக்கிழமை மாலையில் நிகழ்ந்த வன்முறையில் ஆயுதமேந்திய நபர்கள், தந்தை மகன் உட்பட 4 பேரைக் கொன்றனர்.
இதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரையை தொடங்கியிருந்தார். 6,700 கிலோ மீட்டருக்கு மேலான இந்த யாத்திரை மணிப்பூர் முதல் மும்பை வரை திட்டமிடப்பட்டிருந்தது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே உள்ள தவுபால் அருகே நடைபெற்ற பெரிய பேரணியில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராகுல்காந்தி, "மணிப்பூர் மக்கள் அனுபவித்து வரும் வலியை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்" எனக் கூறினார்.
"மணிப்பூரின் அடையாளமாக கருதப்படும் அமைதி, அன்பு, ஒற்றுமையை திரும்பக் கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறோம்" எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
ஏப்ரல் 2024: மணிப்பூர் பற்றி பேசிய பிரதமர் மோடி:
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மணிப்பூர் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் மணிப்பூர் குறித்து அவர் பேசுவது இதுவே முதன்முறையாகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதனை தனது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதன்படி , 'சரியான நேரத்தில் மத்திய அரசின் தலையீட்டாலும், மாநில அரசின் சிரத்தையான நடவடிக்கைகளாலும், மணிப்பூரில் நிலைமை முன்னேற்றமடைந்ததாக' அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர், அசாம் டிரிபியூன் செய்தித்தாளிற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். இதில்,"இந்த சூழலை உணர்வுப்பூர்வமாக கையாளுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். எங்களுடைய சிறந்த மனிதவளத்தையும், நிர்வாகத்திறனையும் இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறோம்" என்றார்.
ஏப்ரல் 2024: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை
மணிப்பூர் வன்முறை உலகெங்கிலும் உள்ள செய்தித்தாள்களில் விவாதிக்கப்பட்டது மட்டுமின்றி, 2024ம் ஆண்டு ஏப்ரலில், "மணிப்பூர் மற்றும் இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை" என்ற பிரச்னை பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எழுப்பப் பட்டது.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரன், இந்தியா அதன் அரசியலமைப்பின் வாயிலாக மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை காப்பதில் உறுதி பூண்டுள்ளது என்றார்.
"குறிப்பிடத் தக்க வகையில் ஏதேனும் பிரச்சனைகள், கவலைகள் எழுந்தால், அது பற்றி இந்திய அரசிடம் பிரிட்டன் அரசு எழுப்பும்." எனக் கூறினார் அவர்
செப்டம்பர் 2024
மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் செப்டம்பர் 1ம் தேதி ஏற்பட்ட புதிய வன்முறையில் பெண் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர். கடந்த 4 மாதங்களில் அவ்வப்போது சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தாக்குதல் நடத்துபவர்கள் டிரோன்களையும் பயன்படுத்துவதாக மணிப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் பின்னணியில் குகி கடும்போக்குவாதிகள் இருப்பதாக மணிப்பூர் போலிசார் குற்றம் சாட்டினர்.
இதன் பின்னதாக ஒருவாரத்திற்குள் அசாம் எல்லையில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தனர்.
நவம்பர் 2024: ஆதவை திரும்பப் பெற்ற என்.பி.பி.

பட மூலாதாரம், Getty Images
அங்கொன்றும் இங்கொன்றுமாக அக்டோபரில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள் நவம்பரில் தீவிரமடைந்தன. அம்மாதத்தின் 11ம் தேதியன்று பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஆயுதமேந்திய 10 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பாவி பழங்குடி இளைஞர்கள் 10 பேரை மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவினர் (CRPF) சுட்டுக் கொன்று விட்டதாக, ZORO (Zo Reunification Organization) அமைப்பு குற்றம் சாட்டியது. இது மணிப்பூரில் இனப் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியது.
மீண்டும் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி (NPP) கடந்த நவம்பரில் விலக்கிக் கொண்டது.
தேசிய மக்கள் கட்சி சார்பில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில்,"மணிப்பூரில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து என்.பி.பி. கட்சி கவலை தெரிவிக்கிறது. கடந்த சில தினங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது, அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர், மாநிலமே பாதிப்பை சந்தித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
"மணிப்பூரை ஆளும் பிரேன் சிங் தலைமையிலான அரசு பிரச்னையை தீர்ப்பதிலும், இயல்பு நிலையை மீளக் கொண்டு வருவதிலும் தோல்வியடைந்து விட்டதாக நாங்கள் உணர்கிறோம். தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப்பெறுவது என என்.பி.பி. கட்சி முடிவு செய்துள்ளது " என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் என்.பி.பி.-க்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் இது தவிர 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். என்.பி.பி. கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வான ஜெய் கிஷன் சிங் சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார்.
டிசம்பர் 2024

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் குமார் பல்லா-வை மணிப்பூர் மாநில ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இவருக்கு முன்னதாக அசாம் ஆளுநர் லக்ஸ்மன் ஆச்சார்யா மணிப்பூர் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
அஜய் குமார் பல்லா உள்துறைச் செயலாளராக ஏறத்தாழ 5 ஆண்டுகள் பணியாற்றியதோடு, அமித் ஷாவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுபவர். 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அஜய் குமார் பல்லா, மத்திய அரசில் பணியாற்றும் முன்னதாக அசாம், மேகாலயா மாநிலங்களில் 2002ம் ஆண்டு வரையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஜனவரி 2025
ஜனவரி 3ம் தேதி மணிப்பூரின் கங்போக்பி மாநிலத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. மனோஜ் பிரபாகர் உட்பட பல காவலர்கள் இதில் காயமடைந்தனர்.
பிடிஐ செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த தாக்குதலானது இம்பால் கிழக்கு மாவட்டத்தின் எல்லையில் உள்ள சைபோல் கிராமத்தில் மத்திய படைகளை திரும்பப் பெறவில்லை எனக் கூறி நடத்தப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் டிசம்பர் 31ம் தேதி பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் லத்தி தாக்குதல் நடத்தியதாக, குகி பழங்குடி அமைப்புகள் குற்றம் சாட்டின. இதனைத் தொடர்ந்த நாட்களில் மிகப்பெரிய போராட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. மத்திய படைகளை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இது பற்றி விளக்கிய மணிப்பூர் போலீசார்," பெரிய தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர், கூட்டத்தை கலைப்பதற்காக பலப்பிரயோகம் நடந்தது. கங்போக்பி மாவட்ட எஸ்.பி. சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் உள்ளார். பெரிய எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்" என அறிக்கை ஒன்றில் கூறினர்.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, போராட்டக்காரர்களில் 15 பேர் காயமடைந்தததாக தெரிவிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












