புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 'மாநில அந்தஸ்து' சாத்தியமா? நல்லதா?

புதுச்சேரி போராட்டம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை, வலுவான அரசியல் குரலாக மாறிக் கொண்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசைவிட ஆளுநர்கள் அதிக அளவில் அதிகாரத்தை செலுத்துவதும், இதனால், முதல்வர்கள் சிறுமையாக உணர்வதாக தங்களுடைய கவலையை வெளிப்படுத்துவதும் இரண்டாவது ஆட்சிக் காலமாக தொடர்கிறது.

கடந்த முறை காங்கிரஸ் முதல்வரான நாராயணசாமிக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே வெளிப்படையாகப் பற்றி எரிந்த இந்த சிக்கல், தற்போது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி ஆட்சிக் காலத்திலும் நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்தது சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் வெளிப்பட்டது.

யூனியன் பிரதேசத்தில் பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன. இந்நிலையில், உண்மையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது சாத்தியமா, அப்படி மாநில அந்தஸ்து பெறுவது நன்மை பயக்குமா என்று ஆராய்ந்து சுவாரசியமான சில தகவல்களை தொகுத்து அளிக்கிறது இந்தக் கட்டுரை.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி இதுவரை 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தபோதும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போதுகூட மத்திய அரசு இணங்கி வரவில்லை.

அண்மையில் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமி பொம்மையாக செயல்படுவதாகவும், ஆளுநரே அதிகாரம் செலுத்துவதாகவும், புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டுவர முயல்வதாகவும் பேசினார்.

13 முறை தீர்மானம்

புதுச்சேரி சட்டப்பேரவை

இதையடுத்து, தாம் செயல்பட முடியாத நிலை இருப்பது குறித்து முதல்வர் ரங்கசாமியும் பொதுவெளியில் பேசத் தொடங்கினார்.

அனைத்திற்கும் மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது, கோப்புகள் காலதாமதம் ஆவதால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் தனி மாநில அந்தஸ்து பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சுதந்திரமாக செயலாற்ற முடியும் என்று பேசிய ரங்கசாமி, தன்னை சந்திக்க வந்த சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பேசும்போது , புதுவைக்கு இன்னும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என கூறும் அளவுக்கு சென்றார்.

புதுவை சட்டப் பேரவை
படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவை முகப்புப் பகுதி

ஆனால் இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி, தாம் முதல்வராக இருந்தபோது ஆளுநர் கிரண் பேடி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் அலட்சியம் செய்யப்பட்டபோது ரங்கசாமி புதுவையின் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை; அது மட்டுமல்ல, ஆளுநரின் அதிகாரத் தலையீட்டுக்கு ஆதரவாகவும் இருந்ததாக குற்றம்சாட்டினார்.

மறுபுறம் சமூக அமைப்புகளோ, புதுவையில் இந்தப் பிரச்சனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாகவும், மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தியும் பிரசாரம், போராட்டம் ஆகியவற்றை முன்னெடுக்கத் தீர்மானித்தன.

புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எடப்பாடி அணி ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. 

மாநில அந்தஸ்து சாத்தியமா?

புதுவை

இந்நிலையில், உண்மையில், இந்தக் கோரிக்கை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, “வாய்ப்பு உண்டு”என்று பதில் அளித்தார் மாநில தகுதிக்கான மக்கள் இயக்கத்தின் ஆலோசகரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் எம்.பி.ராமானுஜம்.

 பிபிசி தமிழிடம் பேசிய அவர், "புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை 1970ல் இருந்து முன்வைக்கப்படுகிறது. 1998-ல் இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த மதன்லால் குரானா, “புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. விரைவில் அதற்கான சட்ட முன்வரைவு அறிமுகப்படுத்தப்படும்,” என்று தெரிவித்தர்.

“அப்போது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘ஒரு சட்டமன்றம் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் இதை முழுமையாக பரிசீலிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

ஆகவே அதை செய்வோம்,’ என்று அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார். இதனால் புதுச்சேரியை மாநிலமாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பது தெளிவாகிறது.

நாடாளுமன்றத்தில் அப்போதைய பாஜக அரசே ஒரு நேர்மறையான பதிலைத் தந்திருக்கும் நிலையில், தற்போது மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயக முன்னணி அரசு அதை நிறைவேற்றுவது ஒரு தார்மீக கடமையாகும். அதைத்தான் இங்குள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்தார் ராமானுஜம். 

“ஆனால் கடந்த முறை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியை ஒரு சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்றிக் காட்டுவோம் என்றார். 'Best Union Territory' என்ற சொற்றொடரை அவர் தெளிவாக பயன்படுத்தினார். அதிலிருந்தே மத்திய அரசின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்," என்கிறார் ராமானுஜம். 

"1963 யூனியன் பிரதேச சட்டப்படி புதுச்சேரிக்குச் சட்டமன்றம் இருந்தாலும் அது யூனியன் பிரதேசமாக கருதப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி(GST)க்காக, அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரும்போது, அதற்கான விதியில் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமானது மாநிலத்துக்கு இணையாகக் கருதப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஒரே அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஒரு பகுதிக்கு எப்படி இரண்டு விதமான தகுதிகளைக் கொடுக்க முடியும்? இது ஒரு சட்ட முரண்பாடு. இதை ஏற்பதில் மத்திய அரசு ஏன் மாறுபடுகிறது," என்று கேட்கிறார் ராமானுஜம்.

தற்காலிக தீர்வு என்ன?

புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து கோரி போராட்டம்

"மாநில அந்தஸ்து பெறும் முயற்சி ஒரு புறம் இருந்தாலும், தற்போதைக்கு 1963 யூனியன் பிரதேச சட்டத்தின் உட்பிரிவுகளில், முதலமைச்சர் என்பவரே யூனியன் பிரேதசத்தின் நிர்வாகி.

முதலமைச்சர் இல்லாதபோது துணைநிலை ஆளுநர் நிர்வாகியாகச் செயல்படுவார் என்றும் இந்திய அரசு திருத்தம் செய்தால், மக்கள் பிரதிநிகளுக்கான அதிகாரம் கிடைக்கும்.

இதன் மூலமாக அதிகார மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தற்போதைய சூழலில் இது தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். முழுமையான‌ மாநிலத் தகுதியே நிரந்தர தீர்வாக அமையும்," என்கிறார் ராமனூஜம்.

நீடிக்கும் சிக்கல்கள் என்ன?

மத்திய அரசு இதை முக்கியமான விஷயமாகக் கருதுவதில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால், டெல்லிக்கும் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற காரணத்தினாலேயே மாநில அந்தஸ்து வழங்குவதை மறுதலித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதுவை பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பேராசிரியர் எம்.ராமதாஸ் தெரிவித்தார்.

"இதுவரை மத்தியில் ஆட்சி செய்தவர்கள் டெல்லியை கைக்குள் வைத்துக்கொள்ளவே நினைத்தனர். டெல்லிக்கு மாநிலத் தகுதி கொடுத்து, எல்லா உரிமைகளும் வழங்கிவிட்டால், அவர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பதற்காகவே அதை மாநிலமாக மாற்றாமல் இருக்கின்றனர். மேலும் அங்குள்ள காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஆனால் புதுச்சேரி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சூழலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால், டெல்லிக்கும் கட்டாயம் மாநில அந்தஸ்து கொடுத்தாக வேண்டி இருக்கும். அதனாலேயே புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கமல் இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.

இது தவிர, புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவை தொடர்ச்சியான நிலப்பரப்பாக இல்லை. இவை ஒன்றில் இருந்து ஒன்று தூரத்திலும் வெவ்வேறு மாநிலங்களுக்கு நடுவில், வெவ்வேறு மொழி பேசக்கூடிய மக்களைக் கொண்டும் அமைந்துள்ளன.

புதுவை யூனியன் பிரதேசத்தின் பகுதிகளான காரைக்கால் புதுவையில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், மாஹே 630 கி.மீ. தொலைவிலும், ஏனாம் 820 கி.மீ. தொலைவிலும் உள்ளன. 

புதுவை

இவை தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகள் பேசக்கூடிய பகுதிகளாகவும் உள்ளன. இதில் மொழி வாரியாகப் பிரிக்க முற்பட்டால் புதுச்சேரிக்கு மட்டுமே தனி மாநில அந்தஸ்து கொடுக்க வாய்ப்புள்ளது.

மற்ற மூன்று பகுதிகளான காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவற்றை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது," என்கிறார் அவர்.

நிதி நிலையைப் பொறுத்தவரை மத்திய அரசின் உதவி இல்லாமல், புதுச்சேரி ஒரு தனி மாநிலமாக செயல்பட முடியுமா, நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அது சாத்தியமா என்ற கேள்விகள் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார்.

"இவை எல்லாவற்றையும் மீறி அரசியல் நிலைப்பாடு இருந்தால் மத்திய அரசால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும். ஆனால் தற்போதிருக்கும் மத்திய அரசு அவ்வாறு செய்யுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஏனென்றால் மாநில அரசாங்கத்தின் உரிமைகளைக் குறைக்கும் வேலையை அவர்கள் செய்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசங்கள் மீதுள்ள அதிகாரத்தை இழக்க மத்திய அரசு முற்படாது," என்றும் பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நிதியாதார பகிர்வில் என்ன சிக்கல்?

வைத்திலிங்கம்
படக்குறிப்பு, வைத்திலிங்கம், புதுச்சேரி முன்னாள் முதல்வர்

மாநில அந்தஸ்து என்பது ஒரு புறம் இருந்தாலும், பொதுவாக அதிகாரம் இல்லாத யூனியன் பிரதேசங்கள் மாநிலம் போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பிபிசி தமிழிடம் பேசும்போது தெரிவித்தார்.

"ஒரு கிராம பஞ்சாயத்துக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இங்கிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லை. மாநில அரசு எனில் அதற்கு 40 சதவீதம் வரை மத்திய அரசு நிதி வழங்கும். ஆனால், யூனியன் பிரதேசம் என்பதால் புதுச்சேரிக்கு அவ்வளவு தூரம் நிதி கிடைப்பதில்லை.

மாநிலமாக இல்லாத காரணத்தால் மத்திய நிதிக்குழுவில் இருந்தும் உரிய அளவில் நிதி கிடைப்பதில்லை," என்கிறார் அவர்.

யூனியன் பிரதேசமாக இருப்பதால் அதிகார பகிர்வில் பாதிக்கப்படுவதைவிட, நிதியாதாரப் பகிர்வில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் வைத்திலிங்கம் கூறுகிறார்.

"அரசு வேலைவாய்ப்பில் மாநிலங்களில் இருப்பதைப் போன்ற அமைப்பை புதுவை யூனியன் பிரதேசத்தில் ஏற்படுத்த வழியில்லை. தற்போது புதுச்சேரியில் குரூப்-டி வேலை ஒப்பந்த அடிப்படையில் போடுவதாகப் போய்விட்டது.

குரூப்-சி பிரிவிலும் நேரடியாக வேலைக்கு அமர்த்துவது கேள்விக்குறியாகி உள்ளது. 

குரூப்-பி பிரிவில் இளநிலைப் பொறியாளர், மருத்துவர், பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்டப் பதவிகளுக்காக ஆட்களை யூனியன் பிரதேச அரசாங்கம் தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கிறது.

இட ஒதுக்கீட்டு முறையைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி குரூப்-பி பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் பொதுப் பிரிவு உட்பட மற்ற பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளது," என்று கூறினார் வைத்தியலிங்கம்.

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறும் அவர், அப்படிக் கொடுக்கமுடியாத பட்சத்தில் மேலே குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்கிறார் அவர்.

முதல்வருக்கு காங்கிரஸ் ஆதரவு. ஆனால்...

ரங்கசாமி
படக்குறிப்பு, என். ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர்

“மாநிலத் தகுதியைப் பெறும் விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கொடுக்கிறோம். ஆனால் அவர் முதலில் மாநிலத் தகுதி விவகாரத்தில் நிலையாக இருக்கிறாரா? அவர் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,” என்கிறார் வைத்தியலிங்கம். 

பாஜக என்ன சொல்கிறது?

முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி வரும் மாநிலத் தகுதி குறித்து பாஜக-வின் கருத்து என்ன என்று பாஜகவை சேர்ந்தவரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பிபிசி விளக்கம் கேட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "மத்திய அரசாங்கத்தைப் பொருத்தவரை புதுவைக்கு செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருசிலவற்றை அரசாங்கம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படுத்த முடியும். சட்டத்தை மீறி எல்லாவற்றையும் செய்து விட முடியாது. நமது ஒரு யூனியன் பிரதேசத்தை மட்டும் வைத்து அனைத்தையும் செய்துவிட முடியாது.

இந்தியாவில் உள்ள பிற யூனியன் பிரதேசங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது," என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டோடு இணைக்க முயன்றபோது நடந்தது என்ன?"

லட்சுமி நாராயணன்
படக்குறிப்பு, லட்சுமி நாராயணன், புதுச்சேரி அமைச்சர்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், "மக்கள் எந்த விஷயத்திலும் தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக அடையமுடியும். 1979ல் புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் தமிழ்நாடு முதல்வர் எம்ஜிஆர் இருவரும் முடிவெடுத்தனர். 

இதனை எதிர்த்து புதுச்சேரியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு 'இணைப்பு எதிர்ப்பு போராட்டம்' நடைபெற்றது. மத்திய அரசு ராணுவத்தை வரவழைத்தது. ஆனால் ராணுவத்தால் மக்கள் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்தது. 

சாத்தியமில்லாத விஷயம் மக்கள் ஒன்றிணைந்தால் சாத்தியமாகும் என்ற வரலாறு புதுச்சேரிக்கு ஏற்கனவே இருக்கிறது. அதனால் யூனியன் பிரதேச சட்டத்தில் தடையாக என்ன இருந்தாலும், அதை மாற்றியமைக்க வேண்டும்," என்கிறார் லட்சுமி நாராயணன்.

யூனியன் பிரதேச சட்டம் முதன் முதலில் ஏழு யூனியன் பிரதேசங்களுக்கு கொண்டுவரப்பட்டது. அதில் புதுச்சேரி தவிர்த்து அப்போதிருந்த பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாறிவிட்டன என்கிறார் லட்சுமி நாராயணன்.

"புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற முடியாது என்று சொல்வதற்கு மத்திய அரசிடம் வலுவான கரணங்கள் எதுவுமில்லை. ஜனநாயகம் அனைவருக்கும் பொதுவானது, இதில் வரையறுக்கப்பட்ட ஜனநாயகம், வரையறுக்கப்படாத ஜனநாயகம் என்று வேறுபடுத்திட முடியாது. கண்டிப்பாக புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற முடியும். சட்டப்பூர்வமாக அதற்கு தகுதிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மொழிவாரியாக மாநிலங்களப் பிரித்தாலும், தற்போது ஒரே மொழி பேசும் பல மாநிலங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் வாழக்கூடிய மக்கள் அவர்கள் விரும்பும்படி வாழ வழிவகை செய்யவேண்டும் என்ற சர்வதேச உடன்படிக்கை பிரான்ஸ் - இந்தியா இடையே உள்ளது. அதன்படி இந்த நான்கு பிராந்தியங்களைப் பிரிக்காமல் மாநில அந்தஸ்து வழங்க முடியும்," என்கிறார் அமைச்சர் லட்சுமி நாராயணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: