காஷ்மீர் மற்றும் லடாக்: மாநிலம், யூனியன் பிரதேசம் - என்ன வேறுபாடு?

Kashmir

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியத்தை தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

ஆனால் இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரி இருக்காது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிந்த மசோதாவின்படி ஜம்மு & காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக சட்டமன்றத்துடன் இருக்கும். ஆனால் லடாக் பிராந்தியத்துக்கு அந்த அந்தஸ்து கிடைக்காது.

அமித் ஷா என்ன சொன்னார்?

அமித் ஷா

பட மூலாதாரம், NurPhoto

லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை அவர்கள் வாழும் பிராந்தியத்துக்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதே. அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில் லடாக் தனி யூனியன் பிரதேசமாக்கப்படும் என்றார் ஷா..

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் பிராந்தியம், சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது.

யூனியன் பிரதேசம் என்றால் என்ன?

ஒன்றிய பிரதேசம் எனப்படும் யூனியன் பிரதேசத்தை நேரடியாக நிர்வகிக்கும் அதிகாரம் இந்தியாவின் ஒன்றிய அரசு, அதாவது மத்திய அரசிடமே இருக்கும்.

இதுவரை இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை டெல்லி, புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி, சண்டிகர், டாமன் அண்ட் டையூ மற்றும் லட்சத்தீவுகள். இவற்றில் டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் சட்டமன்றம் இருக்கிறது.

மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் என்ன வேறுபாடு?

மாநிலத்துக்கு என தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அதனை நிர்வகிக்கும். அதற்கு சட்டங்களை இயற்ற அதிகாரம் உண்டு.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மாநிலங்களுக்கு தனி சட்டமன்றம், முதல்வர் மற்றும் அமைச்சரவை இருக்கும். ஒரு மாநிலத்துக்கு மேலவை, கீழவை இரண்டும் உண்டு. மாநிலங்களவையிலும் அதற்கு இடமுண்டு.

ஆனால் யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.

யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசத்துக்கு என்ன வித்தியாசம்?

பூக்கள் தோட்டத்தில சிறுவர்கள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி, புதுச்சேரி போன்ற சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசங்களுக்கு தனி சட்டப்பேரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் ஆனால் இதற்கு மேலவை இருக்காது. மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பார்.

சண்டிகர் போன்ற சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசங்களுக்கு மக்களால் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்க முடியாது. ஆகவே சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசத்துக்கு பாதி மாநில அதிகாரம் உண்டு என சொல்லலாம்.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு என்ன வித்தியாசம்?

இந்த மசோதா சட்டமாக நிறைவேறிய பின்னர் லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.ஆனால் ஜம்மு & காஷ்மீருக்கு பாதி மாநில அந்தஸ்து இருக்கும்.

இந்த பிராந்தியங்களுக்கு உரிய நேரம் வரும்போது முழு மாநில அதிகாரம் கொடுக்க தயாராகவே இருக்கிறோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :