You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க மாணவர் போராட்டம்: வியட்நாம் போர் நினைவுக்கு வருவது ஏன்? இதனால் டிரம்புக்கு என்ன சாதகம்?
- எழுதியவர், வில்லியம் மார்க்வெஸ்
- பதவி, பிபிசி
காஸாவில் மாதக்கணக்கில் நீடிக்கும் போருக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள் சில முக்கிய பல்கலைக் கழகங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன. போராட்டங்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, 34,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ள காஸாவில், இஸ்ரேலின் ராணுவ தாக்குதலுக்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
போரினால் லாபம் ஈட்டும் இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான நிதி உறவுகளைத் துண்டிக்குமாறும் இஸ்ரேலில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தரும் ஒத்துழைப்பை நிறுத்துமாறும் அம்மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களை வலியுறுத்தியுள்ளனர்.
போருக்கு எதிர்ப்பு காட்டும் மாணவர்கள் யூத விரோத செயல்பாடுகளை அனுமதிப்பதாகவும், யூத வம்சாவளி மாணவர்களை அச்சுறுத்துவதாகவும் பல்கலைக் கழக நிர்வாகமும் அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வாரம் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் போராட்டக்காரர்களை வெளியேற்றிய போது, 1968 இல் மதிப்புமிக்க அந்த நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல்களுடன் பல ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்கள் ஒப்பிட்டன.
வியட்நாம் போர் காரணமாக ஏற்பட்ட கோபத்தால் 1968-ம் ஆண்டில் பல போராட்டங்கள் நடைபெற்றன. ராணுவ ஆள் சேர்ப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற அதிகமான இளைஞர்கள் அழைக்கப்பட்டனர்.
1968-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டங்களின்போது வாழ்ந்த பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் பிபிசி முண்டோ பேசியது. அதன்மூலம், இன்று நடக்கும் போராட்டங்கள் குறித்து பகுப்பாய்வு செய்தது.
1968-ம் ஆண்டு நிகழ்வுகளின் கால வரிசை
ஜனவரி: டெட் தாக்குதல்: அமெரிக்கா மற்றும் அதன் தென் வியட்நாமிய கூட்டாளிகளுக்கு எதிராக வடக்கு வியட்நாம் மற்றும் வியட்காங் படையின் பரவலான திடீர் தாக்குதல்.
ஏப்ரல் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை: போருக்கு எதிரான, ஆப்பிரிக்க -அமெரிக்க உரிமைகளின் பாதுகாவலர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தலைவர், டென்னஸி மாகாணம் மெம்பிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
மே: பிரெஞ்சு மே என்பது நுகர்வோர், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான பரவலாக நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்கு வழங்கப்பட்ட பெயர்.
ஜூன் - ராபர்ட் எஃப். கென்னடி படுகொலை: வியட்நாமில் போருக்கு எதிராக வாதிட்ட அமெரிக்க அதிபர் வேட்பாளர், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒரு ஹோட்டலில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் - செக்கோஸ்லோவாக்கியா மீதான சோவியத் படையெடுப்பு: சோவியத் ஒன்றியத்தின் டாங்குகள் மற்றும் 3 வார்சா ஒப்பந்த கூட்டாளிகள் ஒரு விடுதலை இயக்கத்தை நசுக்க பரேக் நகருக்குள் (Prague) நுழைந்தனர்.
ஆகஸ்ட் - ஜனநாயக மாநாட்டில் ரத்தக்களரி போராட்டங்கள்: ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சிகாகோவில் பாதுகாப்புப் படையினரால் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டனர்.
அக்டோபர் - லாடெலோல்கோ (Tlatelolco) படுகொலை: சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் மாணவர் பேரணியில் மெக்சிகன் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 300 முதல் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.
நவம்பர் - ரிச்சர்ட் நிக்ஸன் தேர்வு: குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்ஸன் ஜனநாயக கட்சியின் ஹூபர்ட் ஹம்ப்ரியை தோற்கடித்தார்.
வியட்நாம் போர் - காஸா போர் என்ன ஒற்றுமை?
1968 இல் வியட்நாம் போர் அதன் மிக முக்கியமான கட்டத்தை எட்டியது. ஜனவரியில், வியட்காங் கெரில்லா படையினரால் ஆதரிக்கப்பட்ட வட வியட்நாமியப் படைகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலைகளைத் தாக்கி, தென் வியட்நாமின் அப்போதைய தலைநகரான சைகோன் வரை ஊடுருவின.
இந்த நடவடிக்கை சந்திரப் புத்தாண்டுக்கான டெட் (TET) தாக்குதல் என அறியப்பட்டது. வடக்கு கம்யூனிஸ்ட் படைகளுக்கு இது ஒரு ராணுவ தோல்வியாக இருந்தாலும், துணிச்சலான தாக்குதலின் படங்கள், போர் பற்றிய அமெரிக்க மக்களின் கருத்தை மாற்றத் தொடங்கின.
"சுரங்கப் பாதையின் முடிவில் ஒரு வெளிச்சம்" என்று பேசிய அதிபர் லிண்டன் பி. ஜான்சனின் அரசாங்கம் போரில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்றும், மோதலின் உண்மை நிலவரத்தை மக்களிடம் இருந்து மறைத்ததையும் இந்த தாக்குதல் வெளிப்படுத்தியது.
அச்சமயத்தில் மாணவராக இருந்த, தற்போது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான கென்னத் வால்ஷ், "இந்த நிகழ்வுதான் அனைத்தையும் ஆரம்பித்தது," என்று பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.
"எதிரி இதை நிறுத்தப் போவதில்லை என்பது நாட்டிற்கு தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்கா மற்றும் கம்யூனிஸ்ட் படையினரும் பொதுமக்களும் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்கப் போகின்றன என்பது தெரிந்தது" என்று பல புத்தகங்களின் ஆசிரியரும் வெள்ளை மாளிகையின் முன்னாள் நிருபருமான கென்னத் வால்ஷ் கூறுகிறார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலிய எல்லைக்குள் ஹமாஸ் போராளிகளின் ஊடுருவல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியது.
ஆனால், பல மாதங்கள் நீடித்த இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட பாலத்தீனர்களின் எண்ணிக்கை, 6 மாதங்களுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அளவை எட்டியுள்ளது. காஸா மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர்.
"சமீபத்திய மாதங்களில் காஸாவிலிருந்து வரும் தாக்குதல் குறித்த படங்கள் நம்ப முடியாத அளவுக்கு இஸ்ரேலின் பதிலடியை பிரதிபலிப்பதாக உள்ளது" என்று நியூயார்க் டைம்ஸில் சார்லஸ் கைசர் எழுதியுள்ளார். இவர், ‘1968 இன் அமெரிக்கா’ (1968 in America) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
“ஹமாஸ் செய்த செயல் பயங்கரமானது, அருவருப்பானது என்பது உண்மை. ஆனால், அதற்கு இஸ்ரேல் பதிலளித்த விதத்தின் காரணமாக, நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அளவுக்கு இஸ்ரேலுக்கு எதிராக மிகப்பெரிய வெறுப்பு உருவாகியுள்ளது” என கைசர் தெரிவித்தார்.
இந்த எதிர்மறையான விளைவுதான் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெருகிவரும் போராட்டங்களுக்குத் தூண்டியது. இது 1968 ஆம் ஆண்டைப் போலவே இருப்பதாக பலர் கருதுகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தில் என்ன ஒற்றுமை?
“இப்போது நடப்பது 1968-ம் ஆண்டில் நடந்ததைப் போலவே உள்ளது. 1968 இல், மாணவர்கள் வியட்நாம் போருக்கு எதிராக கல்லூரி வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்புள்ள நிறுவனங்களில் பல்கலைக் கழக நிர்வாகங்களின் முதலீடுகளை கேள்விக்கு உட்படுத்துகின்றனர்," என்கிறார் கென்னத் வால்ஷ்.
“இதுவொரு வித்தியாசமான சிக்கல் தான். 1968-இல் இருந்ததைப் போலவே, இப்போது முக்கிய காரணம் கோபம், வெறுப்பு மற்றும் அநீதியின் உணர்வு. எனவே அமெரிக்காவில் இப்போது நடக்கும் பல விஷயங்கள் நம்மை 1968-க்கு, அந்தக் கொந்தளிப்பான ஆண்டுக்கு அழைத்துச் செல்கின்றன” என்றார் அவர்.
இருப்பினும், “வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களும் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. கொலம்பியா பல்கலைக் கழகத்தின் அடையாளமான நிர்வாகக் கட்டடமான ஹாமில்டன் ஹாலில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம்" என, 1968-ம் ஆண்டில் ஆர்வலராக இருந்தவரும் ‘1968: தி இயர் தட் ராக்ட்ப்தி வார்ல்ட்' (1968: The Year that Rocked the World) என்ற புத்தகத்தின் ஆசிரியர் மார்க் குலான்ஸ்கி தெரிவித்தார்.
"தற்போதைய போராட்டங்களில் மாணவர்கள் ஹாமில்டன் ஹாலை கைப்பற்றினர். 1968-ம் ஆண்டிலும் போராட்டக்காரர்கள் இதைத்தான் செய்தார்கள். அப்போது நிகழ்ந்ததை இப்போது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்ற முயற்சிக்கின்றனர்"," என்று அவர் கூறுகிறார்.
"இரண்டு நிலைமைகளும் முற்றிலும் வேறுபட்டவை. எங்கள் அரசாங்கம் எங்களை போராட கட்டாயப்படுத்தியது. நாங்கள் போரை எதிர்ப்பதில் பிடிவாதமாக இருந்தோம்,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "வியட்நாமில் நடந்த போர் எங்களுக்கு நடந்தது. ஆனால், இப்போது போராடுபவர்கள் காஸாவில் போரில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவார்கள்" என்றார்.
இருப்பினும், 1960களின் பிற்பகுதியில் கொலம்பியாவில் மாணவராக இருந்த பத்திரிகையாளர் சார்லஸ் கைசர், அங்கு நடந்த வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி செய்திகளை சேகரித்தார். தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் பாராட்டப்பட வேண்டும் என்று அவர் நம்புகிறார்.
"சில வழிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகவும் ஆச்சரியமானவை, ஏனென்றால் தனிப்பட்ட ஆபத்துக்கான கூறுகள் எதுவும் இல்லை. மாறாக அவர்கள் காஸா மக்களுக்கு ஏற்பட்ட நிலைமையின் தாக்கம் காரணமாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
"அகிம்சை வழியில், இஸ்ரேலிய தந்திரோபாயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் எந்தவொரு எதிர்ப்புக்கும் நான் வலுவாக ஆதரவாக இருக்கிறேன். இஸ்ரேல் போரை நடத்தும் விதம் முற்றிலும் அழிவுகரமானதாக உள்ளது" என்றார்.
மார்க் குர்லான்ஸ்கி தனது பங்கிற்கு, ஆர்ப்பாட்டங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அவற்றை விமர்சிப்பவர்களுக்கு வலுவூட்டுவதாகவும் நம்புகிறார்.
"நான் அந்த பிரச்னைக்குரிய யூதர்களில் ஒருவன், நான் ஒருபோதும் இஸ்ரேலுக்கு பெரிய ஆதரவாளராக இருந்ததில்லை. நம்மில் பலரிடையே நெதன்யாகு அரசாங்கத்தை மிகவும் எதிர்க்கும் ஒரு இயக்கம் இருந்தது," என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
"ஆனால் நாங்கள் ஏற்கனவே அமைதியாகிவிட்டோம். அவர்கள் (போராட்டக்காரர்கள்) இதை வேறுவிதமாக கையாண்டிருந்தால், அவர்கள் போருக்கு எதிராக யூத மற்றும் பாலத்தீன இயக்கத்தை நடத்தியிருக்க முடியும்" என்றார் அவர்.
சார்லஸ் கைசர் கொலம்பியா மற்றும் பிற பல்கலைக் கழகங்களில் சில எதிர்ப்பாளர்களிடம் இருந்து யூத எதிர்ப்பு வெளிப்பாடுகள் பற்றி எச்சரிக்கிறார். “அமைதியான போராட்டங்களுக்கும் மக்கள் தங்கள் எதிர்ப்பாளர்களின் மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கும் இடையே நான் ஒரு பெரிய வேறுபாட்டைக் காண்கிறேன்" என்றார்.
எப்படியிருந்தாலும், 1968 இல் நடந்ததைப் போலவே, பல போராட்டங்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அடக்கியதை கைசர் கண்டிக்கிறார்.
"போராட்டக்காரர்கள் 1968 இன் பின்னணியை ஆய்வு செய்து அவர்களின் முன்னோடிகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றதாகத் தோன்றினாலும், தற்போதைய பல்கலைக் கழக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை" என்றார்.
மாணவர் போராட்டத்தால் டிரம்புக்கு என்ன சாதகம்?
1968 இல் உலகம் உண்மையிலேயே கொந்தளிப்பில் இருந்தது. வியட்நாம் போருக்கான எதிர்ப்பு அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்டது மட்டுமல்லாமல், பல நாடுகளில் மாணவர் எழுச்சிகள் உருவாயின. குறிப்பாக பிரான்ஸில் இது மே 68 அல்லது மே பிரெஞ்ச் என அழைக்கப்படுகிறது.
கூடுதலாக, மேற்கு மற்றும் சோவியத் முகாம்களுக்கு இடையே பதற்றங்கள் இருந்தன. சோவியத் ஒன்றியமும் அதன் சில வார்சா ஒப்பந்த நாடுகளும் அப்போதைய செக்கோஸ்லோவாக்கியாவைத் தங்கள் டாங்குகளால் ஆக்கிரமித்து, சீர்திருத்தவாதத் தலைவர் அலெக்சாண்டர் டுபேக்கை பதவி நீக்கம் செய்து கம்யூனிச சர்வாதிகாரத்தை மீண்டும் அமல்படுத்த பராக் நகரை அடைந்தனர்.
அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்க உரிமைகளின் பாதுகாவலரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, அதிபர் ஜான் எஃப். கென்னடியின் சகோதரரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடிக்கும் இதேதான் நடந்தது .
அமெரிக்காவில் சமூகம் முற்றிலுமாக இருதுருவப்படுத்தப்பட்டது, டஜன் கணக்கான நகரங்களில் கலவரங்கள் நடந்தன. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், பலவீனமடைந்த அதிபர் லிண்டன் பி. ஜான்சன், தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். 1968 நவம்பரில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் நிச்சயமற்ற நிலை சூழ்ந்தது.
"1968 ஆம் ஆண்டில், (குடியரசுக் கட்சி வேட்பாளர்) ரிச்சர்ட் நிக்சன், குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முன்வைக்க மாணவர் எழுச்சிகளைப் பயன்படுத்தினார். ஜனநாயகக் கட்சியினர் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் பலவீனமாக இருந்தனர். அது அவர் தேர்தலில் வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது" என்று விளக்குகிறார், ‘தி ஆர்க்கிடெக்ட்ஸ் ஆஃப் டாக்சிக் பாலிட்டிக்ஸ் இன் அமெரிக்கா’ (The Architects of Toxic politics in America) எனும் புத்தகத்தின் ஆசிரியர் கென்னத் வால்ஷ்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் பயன்படுத்தும் துல்லியமான வாதம் இதுதான். "நாடு விரும்புவது சட்டம் மற்றும் ஒழுங்கு. இது, டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக உள்ளது. எனவே கடந்த காலத்துடன் மற்றொரு விஷயமும் ஒன்றுபோல் உள்ளது”என்கிறார் வால்ஷ்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பைடன் மற்றும் டிரம்ப் இருவருக்கும் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன. காஸாவில் இஸ்ரேல் எவ்வாறு போரை நடத்துகிறது என்பதில் தன்னால் தாக்கத்தை செலுத்த முடியவில்லை என்றாலும், அதிபர் பைடன் 1968 இல் லிண்டன் பி. ஜான்சன் கொண்டிருந்த பலவீனமான நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளார் என்பதை சார்லஸ் கைசர் எடுத்துக்காட்டுகிறார்.
பைடனை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிக்கும் ஜனநாயக மாநாடு சிகாகோ நகரில் நடைபெறும், 1968 இல் அதே மாநாட்டில் போர் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
"மாநாட்டின் போது சிகாகோவில் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களைப் பிரதிபலிப்பது பற்றி நிறைய பேசப்படுகிறது. இது 1968 இல், ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு அரசியல் பேரழிவாக மாறியது" என்று அவர் எச்சரித்தார்.
"1968 இல், போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் இறுதி விளைவு, ரிச்சர்ட் நிக்சன் அதிபரான போது நாட்டை எதிர் திசையில் கொண்டு சென்றது," என்று அவர் விளக்கினார்.
"இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தூண்டப்பட்ட இதேபோன்ற குழப்பம், சிகாகோ தெருக்களில் ஏற்பட்டால், 2024 இல் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)