You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய விமானப்படை வாகனங்கள் மீது தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் மரணம், 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூன்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்த இந்திய விமானப்படை, சனிக்கிழமையன்று, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாசிதார் அருகே தீவிரவாதிகளால் ஒரு ராணுவ வாகனம் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
பிடிஐ செய்தி முகமையின்படி, "மாலை 6:15 மணியளவில், வீரர்கள் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்."
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ராணுவம் உறுதி செய்தது.
உயிரிழந்த வான் படை வீரர்
ஒரு மணிநேரம் கழித்து, இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், "பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், விமானப்படை வீரர்கள் துணிச்சலாகப் போராடினர்" என்று கூறியது. இந்தத் தாக்குதலில், ஐந்து இந்திய வான் படை வீரர்கள் சுடப்பட்டனர், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயமடைந்த வீரர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்நிலை சீராக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தலைவர்கள் கண்டனம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பூஞ்ச் தாக்குதலை கோழைத்தனம் என விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூன்ச் நகரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்தக் கோழைத்தனமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், “பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப் படையின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் நான்கு துணிச்சலான விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். இந்த வெறுக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மூன்று வாரங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பூஞ்ச், அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி. அங்கு மே 25ஆம் தேதி ஆறாவது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)