You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?
அமெரிக்காவில் குடியேறிய புற்றுநோயாளி ஒருவர் லாட்டரியில் பெரிய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது அமெரிக்க வரலாற்றில் நான்காவது பெரிய லாட்டரி தொகை ஆகும்.
லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட செங் சைஃபன், பவர்பால் லாட்டரியில் 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றார். இந்திய மதிப்பில் இந்த தொகை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.
பல இரவுகள், தலையணைக்கு அடியில் லாட்டரி காகிதங்களை வைத்துக்கொண்டு தூங்கியதாக செங் சைஃபன் கூறுகிறார். பவர்பால் லாட்டரியை வெல்வதற்கான கணக்கீடுகள் கொண்ட காகித தாள்கள் அவரின் தலையணையின் கீழ் வாரக்கணக்கில் இருந்தன.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கும் சைஃபன் தனது வாழ்க்கையில் கடினமான நாட்களை நினைவு கூர்ந்தார், "நான் கடவுளிடம் உதவிக்காக கெஞ்சினேன். என் பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். என் உடல்நிலை சரியில்லை" என்று வேண்டியதாக அவர் கூறினார்.
சைஃபனின் லாட்டரி சீட்டில் இருந்த எண் வரிசைக்கு ஏப்ரல் 7ம் தேதி 1.3 பில்லியன் டாலர் பரிசுத் தொகை உறுதியானது. கடந்த திங்கள்கிழமை சைஃபனுக்கு லாட்டரி அமைப்பாளர்கள் பரிசுத் தொகையை வழங்கினர். இந்த லாட்டரி மூலம், சைஃபனின் மனைவி மட்டுமின்றி நண்பர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
சைஃபன் வழக்கமாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குவார். அவ்வாறு வாங்கிய ஒரு சீட்டு இம்முறை அவருக்கு பெரும் பரிசுத்தொகையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் தான் லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை தனது மனைவி டுவான்பெனுக்கும், 50 சதவீதத்தை தனது தோழி லைசா சோவுக்கும் தருவதாக கூறியுள்ளார்.
புற்றுநோயால் அவதிப்படும் சைஃபன் கடந்த எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார்.
'எனக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்று தெரியவில்லை'
"என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் கடவுளிடம் மட்டும் தான் உதவி கேட்டேன். அதன் பின்னர் எல்லாம் நடந்தது. இப்போது நான் என் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். எனக்கு ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியும். லாட்டரி பரிசுத் தொகையில் இருந்து கொஞ்சம் பணத்தை செலவழித்து வீடு வாங்க விரும்புகிறேன். " என்று சிபிஎஸ் ஊடகத்திடம் சைஃபன் கூறினார்.
லாட்டரி பரிசுத் தொகைக்கான காசோலையை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சைஃபன், "இந்தப் பணத்தை செலவழிக்க இன்னும் எத்தனை காலத்துக்கு என் உடல் நலம் ஒத்துழைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் வாழ்வேன் என்பது கூட எனக்குத் தெரியாது" என்றார்.
தனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது தெரிந்ததும், சைஃபன் அதை தன் மனைவி மற்றும் தோழியிடம் சொல்ல மிகவும் உற்சாகமாக இருந்தார்.
"என் மனைவியிடம் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன். நான் வேலைக்குப் போகிறேன் என்று பதிலளித்தாள். இனி வேலைக்குப் போகத் தேவையில்லை என்றேன்'' என்றார் சைஃபன்.
அமெரிக்காவின் மிகப் பெரிய லாட்டரி பரிசுத் தொகை 2.04 பில்லியன் டாலர்கள்
அமெரிக்காவில் லாட்டரி சீட்டுகளில் தரப்படும் பரிசுத் தொகை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் பரிசுத் தொகை பெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 2022 ல் ஒருவர் 2.04 பில்லியன் டாலர்களை (சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்) வென்றார். இன்றுவரை இந்த தொகை தான் அதிகபட்ச பரிசுத்தொகை.
லாட்டரி வெல்லும் வாய்ப்பை மேலும் கடுமையாக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் $292.2 மில்லியன் டாலர் பரிசை வெல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன.
தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்குவேன் என்று கூறும் சைஃபன், "நான் மீண்டும் லாட்டரியை வெல்லக்கூடும், நான் மீண்டும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் நம்பிக்கையுடன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)