சிக்கிம் வெள்ளம் - காணாமல் போன 102 பேரை மீட்க நடக்கும் போராட்டம்

சிக்கிம் வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பால் காணாமல் போன 23 ராணுவ வீரர்களில் ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
முக்கிய சாராம்சம்
  • 03592-202892
  • 03592-221152
  • 8001763383 என்ற மொபைல் எண் அல்லது '112' என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேரைக் காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

வடக்கு சிக்கிம் பகுதியில் உள்ள லோனாக் ஏரியில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக 14 பேர் பலியானதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 23 ராணுவ வீரர்களில் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள 22 ராணுவ வீரர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேக வெடிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களையும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான தேடுதல் மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் வெள்ள சூழ்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோதி நேற்று சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்குடன் பேசியுள்ளார்.

மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாகவும் மோதி தெரிவித்துள்ளார்.

உடைந்த ஏரி

சிக்கிம் வெள்ளம்

பட மூலாதாரம், DEFENCE MINISTRY

படக்குறிப்பு, மேக வெடிப்பின் காரணமாக சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி உடைந்தது.

சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாகப் பெய்த கனமழையால், அதன் கரை உடைந்தது.

இதனால் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் தண்ணீர் அளவு அபாயகரமாக உயர்ந்தது.

அருகிலிருந்த அணையில் இருந்து டீஸ்டா ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு மேலும் மோசமடைந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அணையின் நீர்மட்டம் 15 முதல் 20 அடி உயரம் வரை திடீரென உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அணையின் சுரங்கங்களில் சுமார் 14 பேர் வரை சிக்கியுள்ளதாக மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து மீட்க இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

புதன்கிழமை இரவு ஒரு வீரர் மீட்கப்பட்டதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்தாம் பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றிலிருந்து ஒரு குழந்தை உள்பட சிலரின் உடல்களையும் மீட்புப் படையினர் மீட்டனர் என்று அதிகாரிகள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

மீட்பு பணிகள்

சிக்கிம் வெள்ளம்

பட மூலாதாரம், DEFENCE MINISTRY

படக்குறிப்பு, வெள்ளநீர் டீஸ்டா நதியில் ஆர்ப்பரித்துச் செல்லும் நிலையில், சிக்கிமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளன.

தொடர் மழை, டீஸ்டா நதியில் வேகமாகப் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் தொடர்ந்து தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் வி.பி.பதக் கூறுகையில், வெள்ளத்தால் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பு பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் தனது சொந்த வீரர்கள் உட்பட காணாமல் போன மக்களை மீட்கும் நடவடிக்கைக்காக மூன்று உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

சிக்கிம் மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

சிக்கிம் வெள்ளம்

பட மூலாதாரம், DEFENCE MINISTRY

படக்குறிப்பு, காணாமல் போன ராணுவ வீரர்கள், பொதுமக்களை மீட்கும் முயற்சியில் மாநில நிர்வாகமும், பாதுகாப்புப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு வீரர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் பணியிலிருந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ராணுவத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாகவும், டீஸ்டா நதியில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ள நீராலும், அண்டை மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டீஸ்டா நதியிலிருந்து வரும் நீர், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களையும் மூழ்கடித்துள்ளது.

இதுவரை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 10 ஆயிரம் பேரை மீட்டு 190 நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் சிக்கிம் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி 24 வரை உயிரிழந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)