இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா: திணறடித்த தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வரும் உலகக்கோப்பைப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 213 ரன்களை நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடனே இந்தியா இறுதிச்சுற்றில் போட்டியிட வேண்டியிருக்கும். எனவே இந்தியா ஆடவில்லை என்றாலும் இந்திய ரசிகர்களும் ஆர்வத்துடனே இந்தப் போட்டியைப் பார்த்து வருகின்றனர்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். கொல்கத்தாவில் நேற்று இரவு மழை பெய்து, காலையிலிருந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங், சீமிங்கிற்கும் சாதகமாக இருக்கிறது.
கடந்த 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 213 ரன்களில் டை ஆனது. அந்த ஸ்கோர் எண்ணிக்கைக்கு ஒரு ரன் குறைவாக தென் ஆப்ரிக்கா சேர்த்துள்ளது.
தென் ஆப்பிரி்க்க அணி ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மில்லர், கிளாசன், கோட்ஸி கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அதிலும் குறிப்பாக மில்லர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்கா சேர்த்த 212 ரன்களில் 101 ரன்கள் மில்லர் சேர்த்தவை. இரண்டாவது அதிகபட்சம் கிளாசன் சேர்த்த 47 ரன்கள். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக எந்த ரன்களையும் சேர்க்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடக்கத்திலிருந்தே தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி அளித்தது. மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரும் சேர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் டாப்-ஆர்டர் பேட்டர்களை உலுக்கி எடுத்தனர்.
கொல்கத்தாவில் நிலவிய காலநிலை, ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம், காற்றில் இருந்த ஈரப்பதம் ஆகியவற்றை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டத்தைத் தங்கள் பக்கம் இழுத்தனர்.
தென் ஆப்ரிக்கா வெல்ல முடியுமா?
தென் ஆப்ரிக்க அணிக்கு 212 ரன்களை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்வது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
ஆனால், ரபாடா, கோட்ஸீ, யான்சென் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு, கேசவ் மகராஜ், மார்க்ரம், ஷம்சி ஆகியோரின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக இருந்து தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மாயாஜாலம் நடக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
‘கத்தி’ போல் இறங்கிய துல்லியப் பந்துவீச்சு
பவுமா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட் துல்லியமான லைன் லென்த்தில் பந்துவீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.
அதிலும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் பவுமா டக்-அவுட்டில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வேன்டர் டூ சென் களமிறங்கினார்.
ஃபீல்டிங்கில் கலக்கிய வார்னர்
அடுத்தடுத்த ஓவர்களை ஹேசல்வுட், ஸ்டார்க் கட்டுப்கோப்பாகப் பந்து வீசியதால் டீகாக், டூசெனால் ரன் சேர்ப்பதே கடினமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் தப்பித் தவறி ஏதாவது ஷாட்களை அடித்தாலும் அதையும் லாபுஷேன், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஃபீல்டிங் செய்ததால் தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை சேர்க்கவே முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒரு பவுண்டரி கூட இல்லை
ஆறு ஓவர்களாக தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதனால் டீ காக் பொறுமை இழந்தார். ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சரியான லென்த்தில் வீசப்பட்ட பந்தை டீ காக் தூக்கி அடிக்க, கம்மின்ஸ் சிறிது தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். டீ காக் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார்.
52 பந்துகளுக்குப் பின்...
ஸ்டார்க் வீசிய 9வது ஓவரில் மார்க்ரம் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். ஏறக்குறைய 8 ஓவர்களுக்குப் பின் 52 பந்துகளுக்குப் பின் தென் ஆப்பிரிக்க முதல் பவுண்டரி அடித்தது.
பத்து ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை வரலாற்றில் ஓர் அணி பவர்ப்ளேயில் சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டார்ஸ், ஹேசல்வுட் மிரட்டல்
மிட்ஷெல் ஸ்டார்க் ஏற்கெனவே 5 ஓவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் ஓவரை வீச கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பளித்தார்.
அதை சரியாகப் பயன்படுத்தி 11வது ஓவரை வீசிய ஸ்டார்க், 5வது பந்தில் மார்க்கரமை வெளியேற்றினார். பாயின்ட் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து, மார்க்ரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். உலகக்கோப்பைத் தொடரில் 49 பந்துகளில் சதம் அடித்த மார்க்ரம், இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்னையும் சேர்க்க திணறி விக்கெட்டை இழந்தார்.
ஹேசல்வுட் 12வது ஓவரை வீச வந்தார். ஹேசல்வுட் தனது ஒவ்வொரு ஓவரையும் மிகத் துல்லியமான லைன் லென்த்தில் வீசியதால் அவரின் ஓவரில் ரன் சேர்க்கவே முடியவில்லை. இந்த ஓவரையும் ஹேசல்வுட் மிகத் துல்லியமாக வீசினார். 5வது பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டூசென் 31 பந்துகள் சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்து. அரையிறுதி பயம், அதிர்ச்சி, பதற்றம் தென் ஆப்பிரிக்க அணியை சூழ்ந்து கொண்டு அவர்களைப் பாடாய்ப்படுத்தியது.
அடுத்து வந்த டேவிட் மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்கத் திணறிய தென் ஆப்பிரி்க்க, கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கிளாசன், மில்லர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ரன் சேர்க்கும் முயற்சி

பட மூலாதாரம், Getty Images
மழை குறுக்கிட்டதால் 15வது ஓவரின்போது ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. கிளாசன், மில்லர் விக்கெட் இழந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் நிதானமாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்திருந்தது.
இருபது ஓவர்களுக்கு பிறகு கிளாசனும், மில்லரும் ரன்களை சேர்க்கும் விதத்தில் ஆடினர். மழைக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மை மாறியதாலும், பனிமூட்டம் இல்லாததாலும் ரன் சேர்க்க ஓரளவு வாய்ப்பு கிடைத்தது.
ஸம்பா வீசிய 27வது ஓவரில் கிளாசன் இரு சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்த முயன்றார். 28 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது. ஆடம் ஸம்பா ஓவரை மட்டும் குறிவைத்து கிளாசன், மில்லர் வெளுத்து வாங்கினர். ஸம்பா வீசிய 29வது ஓவரில் ஃபுல்டாசாக வந்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி மொத்தம் 8 ரன்கள் சேர்த்தார்.
முப்பது ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது.
டிராவிஸ் ஹெட் 31வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் கிளாசன் பவுண்டரிகள் விளாசி 8 ரன்கள் சேர்த்தார். ஆனால் 4வது பந்தில் க்ளீன் போல்டாகி, கிளாசன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிளாசன், மில்லர் இருவரும்தான் அணியை மீட்டெடுக்கும் வகையில் இந்த ஜோடி பிரிந்தது பெரிய பின்னடைவாகும்.
அடுத்து வந்த யான்சென் வந்த வேகத்தில் கால்காப்பில் வாங்கி டக்-அவுட்டில் வெளியேறினார். 31வது ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு119 ரன்கள் சேர்த்திருந்தது.
ரன் சேர்க்கப் போராடிய டேவிட் மில்லர்

பட மூலாதாரம், Getty Images
அடுத்து கோட்ஸீ களமிறங்கி, மில்லருடன் சேர்ந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் நிதானமாக பேட் செய்த மில்லர் 70 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.
டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் இருவருமே முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என்றபோதிலும் இருவரின் பந்துவீச்சிலும் பந்துகள் நன்றாக டர்ன் ஆனதால் பேட் செய்யக் கடினமாக இருந்தது. இதனால் மில்லர், கோட்ஸீ இருவரும் ரன் சேர்க்க சிரமப்பட்டனர்.
ஆனால், ஸ்ட்ரைக்கை மில்லரிடம் வழங்கி கோட்ஸி பெரிதாக ஷாட்களை ஆடாமல் ஒதுங்கினார். ஆனால், மில்லர் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்களை சேர்த்தார். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து போராடியது.
கோட்ஸீ நிதானமாக பேட் செய்த நிலையில் கம்மின்ஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தார். கம்மின்ஸ் வீசிய 44வது ஓவரில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து கோட்ஸி 19 ரன்னில் பெவிலியின் திரும்பினார். 7வது விக்கெட்டுக்கு கோட்ஸீ, மில்லர் 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேசவ் மகராஜ், மில்லருடன் சேர்ந்தார். 45 ஓவர்களுக்கு மேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விளாசி மில்லர் ரன் சேர்க்கப் போராடினார். டெய்லண்டரான கேசவ் மராஜை எளிதாக வெளியேற்றினார் ஸ்டார்க்.
ஸ்டார்க் வீசிய 47வது ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து மகராஜ் 4 ரன்னில் வெளியேறினார். கம்மின்ஸ் 48வது வீசினார், முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, மில்லர் 115 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக நாக்-அவுட் போட்டிகளில் சதம் அடித்த முதல் பேட்டர் மில்லர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால் சதம் அடித்து நீண்டநேரம் மில்லர் நிலைக்கவில்லை. அதே ஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் தூக்கி அடித்த பந்தை டிராவிஸ் ஹெட் கேட்ச் பிடிக்க மில்லர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஸ்டார்க் வீசிய 49வது ஓவரில் ரபாடா சிக்ஸர் விளாசி ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரை கம்மின்ஸ் வீசினார். 4வது பந்தை ராபாடா லாங்ஆன் திசையில் தூக்கி அடிக்க மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்தார். ரபாடா 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். யான்சென் வீசிய 5-வது ஓவரில் ஹெட் 2 பவுண்டரிகளையும், வார்னர் ஒரு சிக்ஸரையும் விளாசி 15ரன்கள் சேர்த்தனர். ரபாடா வீசிய 6-வது ஓவரில் வார்னர் 2 சிக்ஸர்களையும், ஹெட் ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினர்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்

பட மூலாதாரம், Getty Images
7-வது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். முதல் பந்திலேயே வார்னர் க்ளீன் போல்டா 29 ரன்னில் வெளியேறினார். அதிரடியா ரன்களைக் குவித்த தொடக்க ஜோடியை மார்க்ரம் பிரித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு வார்னர், ஹெட்60 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து மார்ஷ் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். ரபாடா வீசிய 8-வது ஓவரில் மார்ஷ் ரன்ஏதும் சேர்க்காமல் வேன்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது.
ஹெட் அரைசதம்
கோட்ஸீ வீசிய 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்மித் நிதானமாக பேட் செய்ய ஹெட் அதிரடியைத் தொடர்ந்தார்.
டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த கேசவ் மகராஜ் கொண்டு வரப்பட்டார். மகராஜ் வீசிய 15-வது ஓவரில் க்ளீன் போல்டாகி 52 ரன்களில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஆஸ்திரேலியா ரன் சேர்க்கத் திணறல்

பட மூலாதாரம், Getty Images
நான்காவது விக்கெட்டுக்கு லாபுஷேன் களமிறங்கி, ஸ்மித்துடன் இணைந்தார். இருவரையும் பிரிக்க ஷாம்ஸி பந்துவீச அழைக்கப்பட்டார். ஷாம்ஸி, மகராஜ் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் சரிந்து, ஓவருக்கு 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
ஷாம்ஸி வீசிய 17-வது ஓவரில் ஸ்மித் அடித்த ஷாட்டில் பேட்டில் பட்டு வந்த பந்தை விக்கெட் கீப்பர் டீ காக் பிடிக்காமல் கோட்டைவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்திருந்தது. முதல் 10 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா அடுத்த 10 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஷாம்ஸி, மகராஜ் இருவரும் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.
திருப்புமுனை ஷாம்ஸி, மகராஜ்
ஷாம்ஸி, மகராஜ் ஓவரில் ரன் சேர்க்க லாபுஷேன் தடுமாறினார். பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டு அது பவுண்டரியாகத்தான் முடிந்தது. ஷாம்ஸி வீசிய 22-வது ஓவரில் லாபுஷேன் கால்காப்பில் வாங்கி 18 ரன்களில் வெளியேறினார்.
ஆடுகளம் காய்ந்துவிட்டதால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கத் தொடங்கியது. இதனால், ஷாம்ஸி, மகராஜ் ஓவரை கணித்து ஆடுவது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் சிரமமாக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார்.
கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றை மனிதராக வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் ஆட்டம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருந்தது. ஆனால் அனைவரையும் ஏமாற்றிய மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஷாம்ஸி வீசிய 24-வது ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணி 106 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 31 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
6-வது விக்கெட்டுக்கு ஜான் இங்கிலிஸ் களமிறங்கி, ஸ்மித்துடன் சேர்ந்தார். ஷாம்ஸி, மகராஜ் வீசும் பந்துகள் துல்லியமாகவும், கணிக்கமுடியாத வகையில் டர்ன் ஆகியதால், மிகுந்த பொறுமையுடன் ஸ்மித் பேட் செய்தார். இதனால் ஆஸ்திரேலிய ரன்ரேட் 5ஆகச் சரியத் தொடங்கியது. 25 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா இக்கட்டான கட்டத்தில் சிக்கி இருந்தது.
பரபரப்பான கட்டம்
அடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆட்டம் யார் பக்கம் வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்ரிக்கா கடுமையாக போராடி வருகிறது. ஸ்மித், இங்கிலிஸைத் தவிர முறையான பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. கடைசிவரிசை பேட்டர்கள் பேட் செய்யக்கூடியவர்கள் என்றாலும் நெருக்கடி நேரத்தில் தரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம்.
இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா
மகாராஜ், ஷாம்ஸி இருவரும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சவாலாக இருந்தனர். இருவரின் ஓவரிலும் ஸ்மித்தும், இங்கிலிஸும் ஓவருக்கு 4 ரன்களுக்குள்ளாகவே சேர்த்தனர். கோட்ஸி வீசிய 34-வது ஓவரில் ஸ்மித் 30 ரன்னில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்ஷெல் ஸ்டார்க், வந்து இங்கிலிஸுடன் இணைந்தார். தேவைப்படும் ரன்களைவிட, பந்துகள் அதிகம் இருந்ததால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பந்துகளை வீணடிப்பதில் கவலைப்படவில்லை.
ஷம்ஸி, மகராஜ் ஓவரில் ரன் சேர்க்காமல், கோட்ஸீ ஓவரை மட்டுமே இங்கிலிஸ், ஸ்டார்க் கவனம் செலுத்தினர். இங்கிலிஸ் விக்கெட்டை வீழ்த்தினால் ஏதேனும் திருப்பம் ஏற்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியினர் நம்பினர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஷம்ஸி, மகராஜ் ஓவர்கள் முடிந்துவிட்ட நிலையில் மார்க்ரமுக்கு ஓவர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 39-வது ஓவரை கோட்ஸி வீசினார். கோட்ஸி வீசிய 5-வது பந்து யார்கராக வீசவே இங்கிலிஸ் கிளீன் போல்டாகி28 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஷ் ஆட்டமிழந்ததும் ஏதேனும் திருப்பம் ஏற்படலாம் என்று நம்பப்பட்டது. அடுத்துவந்த கம்மின்ஸ் வந்தவுடன் கால்காப்பில் வாங்கினார், ஆனால் டிஆர்எஸ் எடுத்தாலும் அதில் அவுட் வழங்கவில்லை.
40ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய வெற்றிக்கு 60 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
மார்க்ரம் வீசிய 40-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது. கோட்ஸி வீசிய 41-வது ஓவரில் கம்மின்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க 6 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 200 ரன்களைக் கடந்தது.
ஆஸ்திரேலிய வெற்றிக்கு கடைசி 48 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மார்க்ரம் 43-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தை கம்மினிஸ் லெக்திசையில் தூக்கி அடிக்க அது மில்லரிடம் கேட்சாகும் என எதிர்பார்க்கப்பட்டு முன்கூட்டியே தரையில் பட்டு வந்தது.
உலகக் கோப்பை இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா
ஜான் இங்கிலீஷ் மற்றும் ஸ்மித்தின் கூட்டணி வெகு நேரம் நீடிக்கவில்லை. ஜான் இங்கிலீஷ் 28 ரன்களுக்கும் ஸ்மித் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் அதற்கு பிறகு விக்கெட் எடுக்க தென் ஆப்பிரிக்கா எவ்வளவு போராடியும் முடியவில்லை. 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை விட்டு வெளியேறி்யது. ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பைக்கான இறுதி போட்டி ஆமதாபாத்-ல் நவம்பர் 19ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நடைபெற உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












