சந்திரயான்-3 விண்கலம் தங்க நிறத் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?

சந்திரயான் -3 விண்கலம் தங்கம் மென் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, சந்திரயான் விண்கலத்தில் சுற்றப்பட்டிருக்கும் மென் தகடுகள் தங்கத்தால் ஆனவையா?
    • எழுதியவர், ஹிந்த் சப்னிஸ்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலாவில் இன்று(ஆகஸ்ட் 23) மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது.

நிலாவுக்கு மூன்றாவது முறையாக இந்தியா விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த முறை விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் நிலாவை சென்றடைந்தாலும், அது நிலாவில் இறங்கும்போது விழுந்து நொறுங்கியது. எனவே இந்த முறை சந்திரயான் 3 மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகமானது.

அந்த எதிர்பார்ப்புகளைத் தற்போது அது பூர்த்தி செய்துள்ளது.

சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட்டது முதல், விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வம் அனைவரிடத்திலும் அதிகரிப்பதைக் கவனிக்க முடிகிறது.

சந்திரயான் -3 குறித்த தகவல்களைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். விண்கலத்தின் பல புகைப்படங்களை இணையத்தில் பார்த்திருப்போம். சமூக ஊடகப் பக்கங்களில் அவற்றைப் பகிர்ந்திருப்போம்.

அந்த புகைப்படங்களில் விண்கலத்தை தங்க நிற மென் தகடுகள் சுற்றியிருப்பதை காண முடியும். சந்திரயான் -3 விண்கலம் மட்டுமல்ல, பிற விண்கலங்கள், செயற்கைகோள்கள், கருவிகளும்கூட மென் தகடுகளால் சுற்றப்பட்டிருக்கும்.

அது என்ன மென் தகடு, அது ஏன் விண்கலத்தை சுற்றி மூடப்பட்டுள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. அதற்கான அறிவியல்பூர்வமான விடையை இன்று தெரிந்துகொள்ளலாம்.

விண்கலத்தை சுற்றி ஏன் தங்க நிற மென் தகடுகள் உள்ளன?

மும்பையில் உள்ள நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பரஞ்சபேவிடம் இதற்கான சுவாரஸ்யமான பதிலை நமக்கு அளித்தார்.

“விண்கலத்தை சுற்றி நீங்கள் பார்ப்பது, தங்கம் போல் காட்சியளித்தாலும் அது தங்கம் அல்ல” என்று மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பதிலளித்தார் அவர்.

அதற்குப் பெயர் MLI- Multi-Layer Insulation என்கிறார் அரவிந்த் பரஞ்சபே.

“எம்.எல்.ஐ என்பது மென் தகடுகளால் ஆனது. அந்த மென் தகடுகள் பல அடுக்குகளில் ஒன்றின் மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். தங்க நிற மென் தகடுகள் வெளியேயும், வெள்ளை அல்லது வெள்ளி நிற தகடுகள் உள்ளேயும் வைக்கப்படும்” என்று விவரிக்கிறார்.

இந்த தகடுகள் பார்ப்பதற்கு தங்கம் போல் இருந்தாலும், அவை தங்கத்தால் ஆனவை அல்ல. அவை பாலிஸ்டர் தன்மை கொண்ட பொருட்களால் ஆனவை. இதன் மீது அலுமினியம் பூச்சு இருக்கும். இவை இரண்டும் சேர்த்து தான் மென் தகடுகள் உருவாக்கப்படுகின்றன.

மென் தகடுகள் எங்கு இருக்கும்?

இந்த தகடுகள் விண்கலத்தின் முழுவதிலும் சுற்றி இருக்காது. சில முக்கியமான பகுதிகளை மட்டும் சுற்றி இருக்கும். “கதிர்வீச்சால் சேதமடையக்கூடிய பகுதிகளைச் சுற்றி தான் இந்த தகடுகள் வைக்கப்படும்.

எவ்வளவு தகடுகள் பயன்படுத்தப்படும் எப்படி பயன்படுத்தப்படும் என்பது, விண்கலம் எந்த இடத்தில் நிலைகொண்டு இருக்கப் போகிறது அல்லது எந்தப் பகுதியில் பயணிக்க போகிறது என்பதைப் பொருத்து அமையும்” என்கிறார் பரஞ்சபே.

சந்திரயான் -3 விண்கலம் தங்கம் மென் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, விண்கலத்தின் மீதுள்ள மென் தகடுகள் பல அடுக்குகளால் ஆனது.

இந்தத் தகடுகளின் பயன் என்ன?

இந்த தகடுகளின் வேலை, விண்கலத்தை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதாகும், இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், வெப்பத்திலிருந்து இந்த தகடுகள் விண்கலக்த்தை பாதுகாக்கும்.

“பூமியிலிருந்து விண்வெளிக்கு செல்லும் பயணத்தின் போது வழி நெடுகிலும் வெப்பம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் விண்கலத்தின் மென்மையான கருவிகள் மீது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

திடீரென வெப்பம் அதிகரித்தால், விண்கலம் இயங்காமல் போகக்கூடும். எனவே இந்த தகடுகள் விண்கலத்தின் அமைப்பில் மிகவும் முக்கியமானவை” என விளக்குகிறார் பரஞ்சபே.

வெப்பத்தில் ஏன் மாற்றம் ஏற்படுகிறது?

சந்திரயான் -3 விண்கலம் தங்கம் மென் தகடால் மூடப்பட்டிருப்பது ஏன்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, விண்கலத்தைச் சுற்றியுள்ள தகடுகள் கதிர்வீச்சிலிருந்து விண்கலத்தை பாதுகாக்கும்.

இந்த தகடுகள் குறித்த மேலும் சில தகவல்களை அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் செயற்கைக்கோள், தரவுகள் மற்றும் தகவல் சேவை மையம் தெரிவிக்கிறது.

விண்வெளியில் விண்கலம் நிலை நாட்டப்பட்டிருக்கும் இடத்தில் எவ்வளவு நேரடி சூரிய வெளிச்சம் இருக்கும் என்பதை பொருத்து இந்த எம் எல் ஐ தகடுகள் தயார்செய்யப்படும். அப்போதுதான் வெப்பத்திலிருந்து விண்கலத்தை பாதுகாக்க முடியும் என்று அமெரிக்க செயற்கைக்கோள் மையம் கூறுகிறது.

நிலவை சென்றடைய பல லட்சம் கிலோமீட்டர்கள் விண்கலம் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் மைனஸ் 200 டிகிரி பாரன்ஹீட் முதல் 300டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தில் மாற்றம் ஏற்படும். பூமிக்கு பக்கமான சுற்றுவட்டபாதை குளிர்ந்ததாக இருக்கும். அந்த நேரத்தில், விண்கலத்தின் கருவிகள் உருவாக்கும் வெப்பத்தை வெளியே செல்ல விடாமல் இந்த தகடுகள் தடுக்கும்.

இந்த தகடுகள் சூரிய கதிர்களையும், நேரடி சூரிய வெளிச்சத்திலிருந்து வரும் புற ஊதா கதிர்களையும் உள்வாங்கி, மீண்டும் விண்வெளியிலேயே பிரதிபலிக்கும். இதன் மூலம் விண்கலம் கதிர்வீச்சு ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படும் என்பதையும் அமெரிக்க செயற்கைக்கோள் மையம் குறிப்பிடுகிறது.

விண்வெளி துகள்களில் இருந்து பாதுகாப்பு

விண்கலத்தின் கருவிகளில் உள்ள உணரிகள், விண்வெளி துகள்களால் சேதமடையக் கூடும். விண்கலம் காட்சிகளை பதிவு செய்வதை அந்த துகள்கள் தடுக்கக் கூடும். இந்த மென் தகடுகள், துகள்களிலிருந்தும் விண்கலத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.

தங்க முலாம் பூசப்பட்டது போன்ற இந்தத் தகடுகள், விண்கலங்கள், செயற்கைக்கோள்கள், விண்வெளி நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டை பராமரிக்க மிகவும் அவசியமானவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: