ஏமனில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல் ஹூத்திகளை பணிய செய்யுமா? அவர்களின் பலம் என்ன?

ஏமனில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

ஏமனில் உள்ள ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமெரிக்கா ராணுவம் இரண்டாவது முறையாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனில் உள்ள ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்காவின் டோமாஹாக்(Tomohawk) ஏவுகணைகளைக் கொண்டு சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்தத் தாக்குதல் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு நடந்துள்ளது. செங்கடலைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்காவின் கடற்படை போர்க் கப்பலால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று(வெள்ளிக்கிழமை) ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து வந்த ட்ரோன்களை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியிருந்தது.

இன்று(சனிக்கிழமை) காலை நடத்தப்பட்ட தாக்குதல், நேற்று எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சிதான் என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. மேலும், செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களைத் தாக்கும் ஹூத்திகளின் திறனைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திக்கள் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹூத்தியின் ரேடார் தளத்தை அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு காரணம் என்ன?

முன்னதாக, செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து, அமெரிக்க போர்க்கப்பல் மூன்று ஆள்ளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினர் ஏமனில் இருந்து குறிவைப்பதால், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகளுக்குத் தொடர்புடைய கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை உதவியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

இரண்டு கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன, ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கடந்த காரம் கூறியது. ஆனால், ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இரண்டு இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.

ஆனால், அந்தக் கப்பல்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக்குழுவினர் 2014இல் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்ததில் இருந்து ஏமனின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இது உள்நாட்டுப் போரைத் தூண்டியது.

காஸாவில் இரான் ஆதரவுடைய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருவதால், ஹூத்திகள் செங்கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்களை சமீபகாலமாகக் குறிவைத்து வருகின்றனர்.

ஏமனில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், Maxar Technologies

படக்குறிப்பு, ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம்
ஏமனில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், Maxar Technologies

படக்குறிப்பு, ஏமனில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

'ஹூத்திகள் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள்'

ஹூத்திகள்

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய நிகழ்வுகள், காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையே நடக்கும் மோதல்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்றும், அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே இருக்கும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் பிபிசியின் சர்வதேச செய்தி ஆசிரியர் ஜெர்மி போவன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஹூத்திகள் உடனடியாக பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஜெர்மி போவன் கூறியுள்ளார்.

"ஏமனில் உள்ள ஹூத்திகளுடன் நான் சிறிது காலம் இருந்துள்ளேன். அவர்கள் மிகவும் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் அமெரிக்கர்களுடன் மோதலை விரும்புவார்கள். அவர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். என்ன நடக்கிறது என்பது ஹூத்திகளுக்கும் இரானின் இஸ்லாமிய குடியரசுக்கும் தெரியும்," என்கிறார் அவர்.

அமெரிக்காவின் தாக்குதல் ஹூத்திகளை பணிய செய்யுமா?

ஹூத்தி ஆயுதக்குழு

பட மூலாதாரம், MINISTRY OF DEFENCE/PA WIRE

படக்குறிப்பு, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஹூத்தி ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஏமனின் தலைநகரான சனாவையும், செங்கடல் கடற்கரை உட்பட நாட்டின் பெரும் பகுதிகளையும் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில், செளதி அரேபியா ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒரு கூட்டணியை அமைத்து, ஹூத்திகளுடன் சண்டையிட்டது. ஆனால், அது முடியவில்லை.

ஏமனின் உள்நாட்டுப் போரில் தலையிடுவது என்பது அந்த நாட்டின் சட்டபூர்வமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவுவதாகும். அதற்காக, ஹூத்திகளை வெளியேற்ற வேண்டும் என்றும் செளதி கூறியது.

"ஆனால், தலையீடு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, நான் மிகவும் மூத்த சௌதிகளுடன் பேசினேன், அவர்கள் இரானின் ஹூத்திகளுக்கு பின்னால் இருந்து செயல்படுவதைத் தடுப்பதற்காகவே இதைச் செய்ததாக் கூறினர். ஏமன் சௌதி அரேபியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது," என்றார் ஜெரெமி போவன்.

ஹூத்திகளின் பலம் என்ன?

ஹூத்திகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹூத்தி ஆயுதக்குழுவினருக்கு இரான் நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது.

ஹூத்திகளின் திறனில் 2015 முதல் செளவுதி மேற்கொண்ட தொடர் குண்டுவீச்சு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்றார் ஜெரெமி போவன்.

"ஏமன் ஒரு மலை நாடு. குண்டுவீச்சுக்கு ஆளான அவர்களின் அனுபவத்தைப் பொறுத்தவரை, அவர்கள் பல விஷயங்களை மறைக்க முயன்றிருக்கலாம். ஹூத்திகளுக்கு இரான் வழங்கிய ஆயுதங்களை இயக்க உதவுவதற்காக ஏமனுக்கு ஆலோசகர்களையும் பயிற்சியாளர்களையும் அனுப்பியிருக்கலாம். மேலும் அவர்களும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வழிகளைப் பற்றி யோசித்திருப்பார்கள்," என்றார் ஜெரெமி போவன்.

இரான், ஹூத்தி ஆயுதக் கிடங்கை மேம்படுத்திய விதத்தை, அவர்கள் ஏமனில் இருந்து சுடும் ஆயுதங்களைப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம், என்றார் ஜெரெமி போவன். "அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மிகவும் அதிநவீனமானவை, மிகவும் ஆபத்தானவை, எனவே அதிக அச்சுறுத்தல் கொண்டவை.

கடந்த மாதம் ஹூத்திகள் ஒரு வணிகக் கப்பலைக் கைப்பற்றியபோது, அவர்களின் தாக்குதலின் வீடியோவில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதைக் காட்டியது. நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் படங்களைவிட அவை மிகவும் வலிமையானவை," என்றார் ஜெரெமி.

பிராந்தியம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்ட ஹூத்திகள், கப்பல்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த முடிந்தால், அவர்கள் மேற்கு நாடுகளுக்கு அடிபணியவில்லை என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாகச் சொல்வார்கள்.

ஹூத்திகள், அமெரிக்கா சொல்லும்படி செய்யாவிட்டால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து மேலும் பதிலடி கொடுக்கப்படுவதும் உறுதிதான் என்றார் ஜெரெமி.

செங்கடலில் நடக்கும் தாக்குதல்களுக்கு காரணம் என்ன?

செங்கடலில் நடக்கும் தாக்குதல்கள்

பட மூலாதாரம், FAREED KOTB/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக் குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி ஆயுதக்குழுவினர் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஏமனின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், ஹூத்தி ஆயுதக் குழுவினர் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஏமனில் எங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன?

ஹூத்தி அமைப்பினர் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

அக்டோபர் மாதம் முதல் செங்கடலில் சர்வதேச கடல்வழித் தடத்தில் சென்ற 27 கப்பல்களை ஹூத்திகளை தாக்கியுள்ளன என்றும் இதனால் 55 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ராயல் விமானப் படையின் போர் விமானங்கள், குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நடத்த உதவி புரிந்ததாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் வரையறுக்கப்பட்டவை, அவசியமானவை மற்றும் தற்காப்புக்குத் தேவையான அளவில் நடத்தப்பட்டவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடல் வழி சுதந்திர பயணத்துக்கும், தடையில்லா வர்த்தகத்துக்கும் பிரிட்டன் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சைப்ரஸில் இருந்து பறந்த, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் நான்கு டைஃபூன் ஜெட் விமானங்கள் இரண்டு ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசின.

இந்தத் தாக்குதல்கள் ஏமனின் தலைநகர் சனா, செங்கடலில் உள்ள ஏமனின் துறைமுகம் ஹுதயா, தமர் நகரம், சாதா நகரம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. ஜனவரி 11ஆம் தேதி காலை 2.30 மணியளவில் அமெரிக்க போர்க்கப்பல் தோமாஹாக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஜெட் விமானங்கள் 12க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து தாக்கின என்று தாக்குதல்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செங்கடலில் வர்த்தகப் போக்குவரத்தை சீர்செய்ய இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹூத்தி வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுசைன் அல்-எஸ்ஸி, இந்த அப்பட்டமான தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

ஹூத்திகளுக்கு எதிரான பத்து நாடுகள் கூட்டறிக்கை

கப்பல்கள் மீது ஹூத்தி அமைப்பினர் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய அரசுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தன.

ஹூத்தி ஆயுதக்குழுவினர் எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்து இருப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஹூத்திகள் நிறுத்த வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டியது.

ஹூத்திகள் மீது நடத்தப்படும் பல்முனைத் தாக்குதல்கள், தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த தற்காப்புக்காக நடத்தப்படுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலக மிக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்துலாக இருக்கும் ஹூத்திகளின் திறன் மற்றும் சக்தியை வலுவிழக்கச் செய்யவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன,” என்று அந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கடலில் நிலவும் பதற்றத்தைத் தணித்து நிலைமைகளைச் சீராக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூத்திகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு, அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)