You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுக்கோட்டை: ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை சேதம் என்று போராடிய பாஜக - உண்மை என்ன?
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற மெர்சி ரம்யா, தனது முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியதாகவும், 60 ஆண்டுகால பழைமையான அந்தச் சிலை சேதமானதாகவும் கூறி பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை உடைந்துவிட்டதாகப் பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? இந்த சர்ச்சை எப்படி எழுந்தது?
வாட்ஸ்ஆப்பில் பரவிய தகவல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கடந்த மே மாதம் 22ஆம் தேதி மெர்சி ரம்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவரின் முகாம் அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்களின் தொலைபேசிக்கு வாட்ஸ்ஆப் வழியாக செய்தி பகிரப்பட்டது.
அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அனுப்பப்பட்ட அந்த வாட்ஸ்ஆப் செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அங்கிருந்து மாற்றப்பட்டதாகவும், சிலையை மாற்றும்போது அது சேதமானதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் கிறிஸ்துவரான மாவட்ட ஆட்சியர், இந்து கடவுளை மாற்றியமைத்தது தொடர்பாக செய்தி வெளியிடுமாறு அந்த எண்ணிலிருந்து வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போராடிய பாஜக
மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
முகாம் அலுவலகத்திலிருந்த விநாயகர் சிலை, மன்னர் தொண்டைமான் காலத்தைச் சேர்ந்தது என்றும், புராதான சிலையை அப்புறப்படுத்தி மத நம்பிக்கைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்றும் பலரும் தங்களது சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பாக பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் மற்றும் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டனர்.
மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்றும், உள்ளே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க அனுமதிக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அனுமதிக்க மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 3 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதித்தனர்.
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை பார்க்க உள்ளே சென்ற புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விநாயகர் சிலை குறித்து விளக்கம் கேட்டனர்.
விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விளக்கமளித்த மாவட்ட நிர்வாகம்
விநாயகர் சிலை தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
"புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்த விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவல் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
இதில் உண்மை இல்லை. அரசமைப்பு சட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின்மீது மத சாயம் பூச முயற்சி நடக்கிறது," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த சிலை தொன்மையானது என்றும் தகவல் பகிரப்படுகிறது. இப்படி போலிச் செய்தியின் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளின் எதிர்வினை
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர், விநாயகர் சிலை தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேசியதாகவும் மாநில தலைமையுடன் கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் கூறினார்.
“மாவட்ட ஆட்சியருடைய இல்லத்தின் முகப்பில் அந்த விநாயகர் சிலை முன்பு இருந்தது. அதைப் புதிதாக வந்துள்ள ஆட்சியர் வெளியே எடுத்து தோட்டத்தில் வைத்துள்ளார்.
வெயிலில் இருந்தால் அந்தச் சிலை விரைவில் சிதிலமடையும். இதற்கு முன்னிருந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனது பதவிக் காலத்தின்போது அந்த விநாயகர் சிலை முன்பாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதை ஏன் இந்த ஆட்சியர் இடமாற்றம் செய்யவேண்டும்,” என்று கேள்வி எழுப்பினார்.
மதத்தை வைத்து பிரிவினையத் தூண்டும் நபர்கள் பரப்பும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
புகாரளித்த மாவட்ட ஆட்சியர்
விநாயகர் சிலை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சிலை விவகாரத்தில் போலிச் செய்தியைப் பகிர்ந்த நபர்கள் குறித்து சைபர் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
“மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் இருக்கும் அந்த விநாயகர் சிலை பழைமையான சிலை அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மண் சிலை. ஆனால் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் திட்டமிட்டு இந்தப் போலிச் செய்தியை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்துள்ளார்.
அந்த செல்போன் எண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமானது கிடையாது. அதனால் அந்த நபர் குறித்து மாநில சைபர் பிரிவு காவல்துரையிடம் புகார் அளித்திருக்கிறேன்,” என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருக்கும் விநாயகர் சிலை 60 ஆண்டுகள் பழைமையானது என்றும், மன்னர் தொண்டைமான் காலத்தைச் சேர்ந்தது என்றும் சிலர் பரப்பும் தகவல் குறித்துக் கேட்டபோது அது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
“அந்த விநாயகர் சிலை பழைய சிலை கிடையாது. அதைப் பரிசோதித்து உறுதி செய்யும்படி மாவட்ட அருங்காட்சியக இயக்குநரிடம் கேட்டிருக்கிறேன். மேலும் சிலை சேதமடைந்து இருக்கிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடுவார்,” என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்