You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடியரசு தின கொண்டாட்டம் உலகின் பிற நாடுகளை விட எவ்வாறு தனித்து நிற்கிறது?
- எழுதியவர், நிகிதா யாதவ்
இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை இன்று (ஜனவரி 26) கொண்டாடுகிறது.
இந்நாளில் தான் இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, காலனித்துவ கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, அதிகாரப்பூர்வமாக ஒரு குடியரசாக மாறியது.
டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ராணுவ டாங்கிகள் அணிவகுத்துச் செல்ல, போர் விமானங்கள் வானில் சாகசங்களை செய்யும்.
இந்த அணிவகுப்பு ஒரு கண்கவர் நிகழ்வாகும், ஆனால் விழாவின் மிக முக்கியமான இடங்களில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டனியோ கோஸ்டா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு அவர்களைத் தலைமை விருந்தினர்களாக அழைத்ததன் மூலம் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க அரசு நிகழ்வுகளில் ஒன்றின் மையப்புள்ளியாக ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா வைத்துள்ளது.
இந்த நாளில், இந்தியா தனது தலைநகரின் மையப்பகுதியை ஒரு மேடையாக மாற்றுகிறது.
டெல்லியில் உற்சாகமூட்டும் கூட்டத்திற்கு முன்னேஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லவ கர்த்தவ்ய பாதையில் (முன்னர் ராஜ்பாத் அல்லது கிங்ஸ் அவென்யூ) கவச வாகனங்கள் நகர்ந்து சென்றன. வண்ணமயமான அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களைக் கடந்து சென்றன.
அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே இந்நிகழ்வைக் கண்டு களித்தனர்.
குடியரசுத் தலைவர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மூத்த அரசு அதிகாரிகளை விட குடியரசுத் தலைவரின் இருக்கைக்கு மிக அருகில் தலைமை விருந்தினர் அமர்ந்திருந்தார்.
இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அருகில் யார் அமர்ந்திருப்பார்கள் என்பது வெறும் நெறிமுறை சார்ந்த விஷயமாக மட்டும் நீண்டகாலமாகப் பார்க்கப்படவில்லை.
கடந்த பல ஆண்டு காலமாக, தலைமை விருந்தினரின் தேர்வு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்தியா முன்னிலைப்படுத்த விரும்பும் உறவுகளின் குறிகாட்டியாக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நடைமுறை 1950ல் அப்போதைய இந்தோனீசிய அதிபர் சுகர்னோ இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டதன் மூலம் தொடங்கியது.
ஒரு குடியரசாக உருவெடுத்த ஆரம்ப ஆண்டுகளில், புதிதாக சுதந்திரம் பெற்ற மற்ற நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்தது. இது அதன் ஆரம்பகால தலைமை விருந்தினர்களின் தேர்வில் பிரதிபலித்தது.
அப்போதிருந்து, இந்த அணிவகுப்பு உலகெங்கிலும் உள்ள தலைவர்களை வரவேற்றுள்ளது, இது இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மற்றும் உத்தி சார்ந்த முன்னுரிமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
பூடான் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளின் தலைவர்கள் முதல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய வல்லரசுகளின் அரசாங்கத் தலைவர்கள் வரை பலரும் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் உட்பட, பிரிட்டன் ஐந்து முறை இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக இடம்பெற்றுள்ளது.
1950 முதல் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா (முன்னாள் சோவியத் யூனியன்) நாடுகளின் தலைவர்களும் கிட்டத்தட்ட ஐந்து முறை அழைக்கப்பட்டுள்ளனர். இது அந்த இரு நாடுகளுடனும் இந்தியா கொண்டுள்ள நீண்டகால உத்தி சார்ந்த உறவுகளை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு பரந்த அளவில் கடந்தகால விருந்தினர் பட்டியலைக் கொண்டுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் யாருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா எவ்வாறு தீர்மானிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
விருந்தினர்களைத் தேர்வு செய்யும் இந்தச் செயல்முறை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்டது. முன்னாள் தூதர்கள் மற்றும் ஊடக செய்திகளின் படி, இது பொதுவாக வெளியுறவு அமைச்சகத்திற்குள் தொடங்குகிறது.
அங்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இறுதி முடிவு பிரதமரின் அலுவலகத்தால் எடுக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செயல்முறை நடைபெற பல மாதங்கள் ஆகலாம்.
பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "உத்தி சார்ந்த குறிக்கோள்கள், பிராந்திய சமநிலை மற்றும் ஒரு நாடு இதற்கு முன்பு அழைக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன," என்றார்.
அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், இந்த முடிவெடுப்பதில் நிறைய சிந்தனையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது என்றார்.
"இது முக்கியமான கூட்டாளிகள், அண்டை நாடுகள் மற்றும் முக்கிய வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு சமநிலையாகும்," என்று கூறிய அவர், அந்த நேரத்தில் அந்த நாட்டுத் தலைவருக்கு நேரம் இருக்கிறதா என்ற காரணியும் ஒரு பங்கினை வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
தலைமை விருந்தினர்களின் பட்டியல், உலக நாடுகளுடனான இந்தியாவின் மாறிவரும் உறவை பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு கொள்கை ஆய்வாளர் ஹர்ஷ் வி பந்த் கூறுகிறார்.
"இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பிரதிநிதிகள் வந்திருப்பதைப் பார்க்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான நமது உறவை நாம் பலப்படுத்துகிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது."
பெரும்பாலும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம் என்றும் இது தற்போதைய உலக அரசியல் சூழலில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த நிகழ்வு நடக்கிறது.
கிட்டத்தட்ட ஓராண்டாக நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்ததில் இருந்து இரு நாட்டு உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவிற்குத் தான் அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது.
"குடியரசு தினத் தலைமை விருந்தினர் தேர்வு, அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன, எந்தப் பகுதி மீது இந்தியா கவனம் செலுத்த விரும்புகிறது அல்லது ஏதேனும் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்க விரும்புகிறதா என்பதை உணர்த்துகிறது," என்று கூறிய பந்த், இந்தியா தொடர்ந்து 'உலகளாவிய தெற்கு' (global south) நாடுகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
உதாரணமாக, 2018-ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' தலைவர்கள் தலைமை விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
ஒரு பிராந்தியக் கூட்டமைப்பு அவ்வாறு அழைக்கப்பட்டது அதுவே முதல் முறை. இது அந்த அமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டுகால உறவைக் குறித்தது என்று பந்த் கூறினார்.
அதே சமயம், சில நாடுகள் விருந்தினர் பட்டியலில் இடம்பெறாமல் போனது, அவர்களுக்கு இடையிலான கசப்பான உறவுகளையும் பிரதிபலிக்கின்றன.
1965-ல் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடப்பதற்கு முன்பு வரை பாகிஸ்தான் தலைவர்கள் இரண்டு முறை தலைமை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு பாகிஸ்தான் அழைக்கப்படவில்லை.
இது இரு நாட்டு உறவில் நிலவும் தொடர்ச்சியான விரிசலைக் காட்டுகிறது.
சீனா ஒரே ஒருமுறை மட்டுமே பங்கேற்றுள்ளது. 1958-ல் மார்ஷல் ஜியான்யிங் கலந்துகொண்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைத் தகராறு காரணமாக போர் வெடித்தது.
ஆனால், குடியரசு தினத்தின் முக்கியத்துவம் என்பது வெறும் ராஜ்ஜீய உறவுகள் மற்றும் விருந்தினர் பட்டியலைக் கடந்தும் நீண்டுள்ளது.
இந்திய குடியரசு தினவிழா எவ்வாறு தனித்து நிற்கிறது?
உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளை விட, இந்தியாவின் அணிவகுப்பு பல காரணங்களால் தனித்து நிற்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ஒரு விருந்தினரை அழைக்கும் வழக்கம் அவற்றில் ஒன்று.
பெரும்பாலான நாடுகளில் இத்தகைய அணிவகுப்புகள் ராணுவ வெற்றிகளை நினைவுகூரும் வகையில் அமைகின்றன.
உதாரணமாக, ரஷ்யாவின் 'வெற்றி தினம்' இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியைக் குறிக்கிறது.
பிரான்சின் 'பாஸ்டில் தினம்' பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தையும் முடியாட்சியின் வீழ்ச்சியையும் கொண்டாடுகிறது.
சீனாவின் ராணுவ அணிவகுப்பு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிரான அவர்களின் வெற்றியைக் குறிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் கொண்டாட்டம் அரசியலமைப்பை மையமாகக் கொண்டது என்று பந்த் கூறுகிறார்.
"பல நாடுகளுக்கு இத்தகைய கொண்டாட்டங்கள் போரின் வெற்றிகளுடன் தொடர்புடையவை. நாம் அதை அவ்வாறு கொண்டாடுவதில்லை. நாம் ஒரு அரசியலமைப்பு ஜனநாயகமாக மாறியதை, அதாவது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததையே கொண்டாடுகிறோம்"என்று அவர் விவரித்தார்.
மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளைப் போலன்றி, இந்தியாவின் குடியரசு தினம் தனது ராணுவ பலத்துடன் கலாசார நிகழ்ச்சிகளையும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளையும் ஒருங்கிணைக்கிறது.
இது நாட்டின் வலிமை மற்றும் பன்முகத்தன்மை ஆகிய இரண்டையும் பறைசாற்றுகிறது.
ராஜ்ஜீய உறவுகள் மற்றும் குறியீடுகளைத் தாண்டி, இந்த அணிவகுப்பு வருகை தரும் தலைவர்கள் மீது ஆழ்ந்த தனிப்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் அதிகாரி ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
ஒபாமா தம்பதியினர் ஒட்டகங்களின் மீது அமர்ந்து வந்த வீரர்களின் அணிவகுப்பைக் கண்டு வியந்தனர். அந்தத் தருணம் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் முடிந்த பின்னரும் நீண்ட காலம் அவர்கள் நினைவில் நின்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு