ஒரு டாட் பால் கூட விடாமல் சாதனை ரன் குவித்த அபிஷேக் அதிரடிக்கு கடைபிடித்த 'புது டெக்னிக்'

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

154 என்ற இலக்கை சேஸ் செய்கிறது இந்தியா.

முதல் பந்திலேயே விக்கெட் போகிறது. ஆனால், எந்த இடத்திலும் தங்கள் அதிரடியைக் குறைக்காமல், நியூசிலாந்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் விளையாடி பத்தே ஓவர்களில் இலக்கை எட்டியது இந்தியா.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என ஏற்கெனவே வென்றுவிட்டது இந்தியா.

இது, தொடர்ச்சியாக இந்தியா பெற்றுள்ள 11வது டி20 தொடர் வெற்றி. தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை இதன்மூலம் சமன் செய்திருக்கிறது இந்திய அணி. 10 ஓவர்களுக்குள் சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய இலக்கு இதுதான். இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரும் நேற்றைய ஆட்டத்தில்தான் வந்தது.

இந்தியாவின் இந்த சாதனை சேஸின் முக்கிய அங்கமாக இருந்தவர் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. 20 பந்துகளில் 340 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 68 ரன்கள் எடுத்தார் அபிஷேக். அவரும் தன் பங்குக்கு சில தனிநபர் சாதனைகளைப் படைத்தார்.

14 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இந்தியர் ஒருவரின் இரண்டாவது அதிவேக டி20 அரைசதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல், சர்வதேச டி20 போட்டிகளில் 9 முறை 25 பந்துகளுக்கும் குறைவாகவே அவர் அரை சதம் கடந்துள்ளார். இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் - அவர் அடித்திருப்பதே மொத்தம் பத்து 50+ ஸ்கோர்கள் தான். அதில் 9 முறை 25 பந்துகளுக்குள்ளாகவே அவர் அரைசதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

முதல் பந்திலேயே சிக்ஸர்

கௌஹாத்தியில் நடந்த இந்தப் போட்டியில், தன்னுடைய அதிரடியை முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டார் அபிஷேக். இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்திக்க தயாரானார் அபிஷேக். பந்து வீசத் தயாராக இருந்தது ஜேக்கப் டஃபி. இரண்டாவது போட்டியில் அபிஷேக் ஷர்மாவை 'கோல்டன் டக்' ஆக்கி வெளியேற்றியவர் அவர். ஆனால், சற்றும் யோசிக்காமல் முதல் பந்திலேயே இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்தார் அபிஷேக்.

அபிஷேக் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக ஆடிவரும் அணுகுமுறையைப் பார்க்கும்போது, அவர் முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடுவதாகத்தான் வல்லுநர்கள் பலருமே பேசுவார்கள். நேற்று அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தபோது, அந்த வாதத்துக்கு அது வலுசேர்ப்பது போலத்தான் இருந்தது. ஆனால், அப்படியான எண்ணத்தோடு களம் காண்பதில்லை என்கிறார் அபிஷேக்.

இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய அபிஷேக் ஷர்மா, "முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆடுவதில்லை. களத்தில் இருக்கும்போது என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி செய்கிறேன். அந்த நேரத்தில், என்னை முதல் பந்திலேயே விக்கெட் எடுக்கவேண்டும் என்றால் பௌலர் என்ன யோசித்து, எப்படிப் போடுவார் என்று நான் கணிக்கிட்டு, அதற்கு ஏற்ப ஆடுகிறேன்" என்றார் அவர்.

டஃபியின் பந்தில் அவர் அந்த சிக்ஸர் அடித்தது அப்படித்தான் இருந்தது. கடந்த போட்டியில், அவரது கால்காப்பை நோக்கி வந்த பந்தை நின்றுகொண்டே அடித்து ஸ்கொயர் லெக் திசையில் கேட்சானார் அபிஷேக். ஆனால், இம்முறை அவர் சில அடிகள் இறங்கி வரவே, அவர் கைகளை பலமாகச் சுழற்றுவதற்கான ஒரு வெளி கிடைத்துவிட்டது. அதனால், பந்து பவுண்டரி எல்லையையும் கடந்துவிட்டது. அதுவும் அந்தப் பந்து 88 மீட்டர் சென்று விழுந்தது.

அபிஷேக் கடைபிடிக்கும் புது டெக்னிக்

அபிஷேக்கின் அதிரடி ஆரம்பம் முதலே பார்த்து வருவது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் தற்போது அந்த பந்துகளை அடிக்கும் முறை கவனம் பெற்றிருக்கிறது. அந்த முதல் பந்தைப் போலவே, பல பந்துகளுக்கு அவர் தனக்கான வெளியை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட்டில் 'making room' என்பார்கள். பேட்டை சுழற்றுவதற்கு ஒரு வெளியை ஏற்படுத்த பேட்டர்கள் நகர்வார்கள். அதை தற்போது அபிஷேக் அதிகமாகவே செய்கிறார்.

நேற்றைய போட்டியில் பல பந்துகளை அவர் அப்படித்தான் ஆடினார். தனக்கான வெளியை உருவாக்கிக் கொண்டு, ஸ்டம்ப் லைனில் வந்து பந்துகளையுமே கூட அவர் ஆஃப் சைடில் கவர், எக்ஸ்டிரா கவர், மிட் ஆன் திசைகளில் பவுண்டரிகள் அடித்தார்.

இந்த விஷயம் அபிஷேக் தன்னுடைய ஆட்டத்தில் சமீபத்தில் கொண்டுவந்திருக்கும் 'அப்கிரேட்' என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு, இத்தகைய பந்துகளில் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று அவர் அவுட் ஆகியிருக்கிறார். அது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால், தற்போது அவர் நன்கு தனக்கான வெளியை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் தன் விக்கெட்டையும் பாதுகாத்துக்கொள்கிறார்.

கைல் ஜேமீசன் வீசிய மூன்றாவது ஓவரில் அதை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. மிடில் ஸ்டம்ப் லைனில், யார்க்கர் லென்த்தில் வந்த பந்தை, நன்கு லெக் சைட் விலகிச் சென்று ஃபுல் டாஸாக வாங்கி, கவர் திசையில் பவுண்டரி அடித்தார்.

அடுத்த பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே லோ ஃபுல் டாஸாக வந்தது. அதை, இன்னும் லெக் திசையில் விலகிச் சென்று பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்தார். பொதுவாக பேட்டர்கள் லெக் சைடில் அடிக்கக் கூடிய பந்துகளை அநாயசமாக ஆஃப் சைடில் அடித்துக்கொண்டிருந்தார் அபிஷேக்.

அவருடைய இந்த ஆட்டமுறை குறித்து கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷா போக்ளே, "முன்பு அபிஷேக் ஷர்மாவுக்கு உடலுக்கு சற்று வெளியே பவுன்சராக வீசினால் கொஞ்சம் தடுமாறுவார் என்று அனலிடிக்ஸ் கூறியது. ஆனால், அவர் இப்போது ஆடும் விதத்தில், நகர்ந்து வந்து அந்தப் பந்துகளையும் பவுண்டரிகள் ஆக்குகிறாரே... இதற்கு மேல் பௌலர்கள் அவருக்கு எப்படிப் பந்துவீசுவது" என்றார்.

நியூசிலாந்து பௌலர்கள் அப்படியான பௌன்சர்களை முயற்சி செய்தும் கூட பலன் கிடைக்கவில்லை. அவை சற்று லைனில் பிசக, அவற்றையும் சற்று ஆஃப் சைட் நகர்ந்து லெக் சைடில் சிக்ஸர்கள் ஆக்கினார் அபிஷேக்.

ஒரு டாட் பால் கூட இல்லை

அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் இன்னொரு சிறப்பான விஷயம், அவர் சந்தித்த 20 பந்துகளில் ஒரு டாட் பால் கூட இல்லை. ஒவ்வொரு பந்திலுமே அவர் ரன் எடுத்தார். மொத்தம் 7 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தார் அவர். 6 ஒற்றை ரன், 2 இரட்டை ரன்

அபிஷேக் ஷர்மாவின் 20 பந்துகளில் எடுக்கப்பட்ட ரன்கள் முறையே 6 1 4 2 4 6 4 2 6 1 4 1 4 6 1 4 6 4 1 1 எனும் வகையில் இருந்தது.

அவருடைய அணுகுமுறையும், அவருடைய ஷாட் தேர்வும் ஒவ்வொரு பந்திலுமே அவருக்கு ரன்களை எடுத்துக் கொடுத்தது. குறிப்பாக, முதல் 18 பந்துகளில் அவர் தொடர்ந்து இரண்டு பந்துகளில் பவுண்டரி அடிக்காமல் விடவில்லை. அதாவது, ஒரு பந்தில் ஒற்றை அல்லது இரட்டை ரன் வந்தால், அடுத்த பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. அவருடைய கடைசி இரண்டு பந்துகள் மட்டுமே தொடர்ச்சியாக பவுண்டரி வராத இரு பந்துகள். அந்த அளவுக்கு பவுண்டரிகளும், சிக்ஸர்களாகவும் விளாசினார் அவர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள் படி, ஆண்கள் டி20ஐ கிரிக்கெட்டில் டாட் பால்களே ஆடாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது அபிஷேக் ஷர்மாவின் இந்த இன்னிங்ஸில் தான். இதற்கு முன் அந்த சாதனை கனடாவின் ஹர்ஷ் தாகெர் (18 பந்துகளில் 53* ரன்கள்) வசம் இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு