You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விலகல் - இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசுவது என்ன?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்தியாவில் போட்டிகளை விளையாட வங்கதேசம் மறுத்தது. இந்த நிலையில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை இந்தத் தொடரில் ஐசிசி சேர்ந்துள்ளது.
இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு வெளியில் போட்டிகளை நடத்துமாறு ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை வைத்திருந்தது. ஐசிசி இந்த வார தொடக்கத்தில் வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
வங்கதேசம் தங்களின் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு பதிலாக இலங்கையில் நடத்த வேண்டும் என கோரியிருந்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து மாற்றப்பட்டத்தை தொடர்ந்து, ஐசிசியின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன.
உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம் வைத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆதரவு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் வங்கதேச அணி இந்தத் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"ஒரு முன்னாள் சர்வதேச வீரராக, ஐசிசியின் சமமற்ற அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது" என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அப்ரிடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஷாஹித் அப்ரிடி கூறியது என்ன?
"2025ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக இந்தியா சுட்டிக்காட்டிய பாதுகாப்பு காரணங்களை ஐசிசி ஏற்றுக் கொண்டது. ஆனால், அதே அணுகுமுறையை வங்கதேச விவகாரத்தில் செயல்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது" என ஷாஹித் அப்ரிடி எழுதியுள்ளார்.
மேலும் "சமத்துவமும் நியாயமும் உலகக் கிரிக்கெட்டின் அடித்தளமாகும். வங்கதேசமும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களும் மரியாதைக்குரியவர்கள். இதில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூனிஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கருத்தில், "கிரிக்கெட்டை நேசிக்கும் வங்கதேசம் போன்ற நாடு, தீர்க்கப்படாத பாதுகாப்பு கவலைகளால் கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் "இதேபோன்ற சூழல் முன்பு வந்த போது, நடுநிலையான இடத்தில் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது. நாடுகளுக்குத் தகுந்தவாறு விதிகளை மாற்ற முடியாது. ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலாக செயல்பட வேண்டும். எந்த ஒரு கிரிக்கெட் வாரியத்தின் நலனுக்காகவும் செயல்படக்கூடாது. நியாயமும் நிலைத்தன்மையும்தான் உலகக் கிரிக்கெட்டின் அடித்தளங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி மீது பாகுபாடு குற்றச்சாட்டு
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், எக்ஸ் தளத்தில், "ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வங்கதேசம் விலக்கப்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாகத்தில் அரசியல் அதிகமாகவும், உண்மையான கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் குறைவாகவும் இருப்பது விளையாட்டிற்கு ஆபத்தானது. முஸ்தஃபிசூர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு பொருத்தமற்றது மற்றும் தீவிர வலதுசாரிகளின் அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "வங்கதேசத்தின் 'பதில் நடவடிக்கை; என்பது உணர்ச்சி அடிப்படையிலானது. தர்க்கம் இல்லாத ஒன்றாக இருக்கிறது. ஐசிசி, பிசிசிஐயின் கரம் போல செயல்பட்டது. இந்த விவகாரத்தை புத்திசாலித்தனத்துடன் அணுகியிருந்தால், இந்த பிரச்னை அமைதியாக தீர்க்கப்பட்டிருக்கலாம்." என்று எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பதற்றமும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது.
2026 ஐபிஎல் தொடருக்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முஸ்தஃபிசூர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு வாங்கியிருந்தது.
"வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட கூடிய அவமதிப்பு எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என முஸ்தஃபிசூர் நீக்கப்பட்டது குறித்து, வங்கதேச இடைக்கால அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறினார்
இதனைத் தொடர்ந்து, வங்கதேசம் தனது நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பைத் தடை செய்தது.
ஜனவரி 4ஆம் தேதி, வங்கதேச கிரிக்கெட் வாரியம், அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு செல்லாது என ஐசிசிக்கு கடிதம் எழுதியது.
இந்த விவகாரத்தில், சனிக்கிழமையன்று டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டு, அதன் இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
சமூக வலைத்தளத்தில் என்ன விவாதிக்கப்பட்டது ?
இந்த விவகாரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
"வங்கதேச அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடாததால் யாருக்கு இழப்பு? ஐசிசிக்கா, அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கா?" என்று ஆகாஷ் சோப்ரா எழுதியுள்ளார். இந்த சர்ச்சையை, பெரிய அளவிலான நிதி இழப்புகளுடன் ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக ஒப்பிட்டுள்ளார்.
இலங்கை பத்திரிகையாளர் டேனியல் அலெக்சாண்டர், இன்ஸ்டாகிராமில், "இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்றால், போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி மாற்றுகிறது. ஆனால், வங்கதேச அணி இந்தியாவுக்கு செல்ல விரும்பவில்லை என்றால், அந்த அணியே மாற்றப்படுகிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ?" என்று பதிவிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் பார்த்தா எம்.என் எக்ஸ் தளத்தில், "ஐசிசி, பிசிசிஐயின் பொம்மை என்பதே இப்போது தெளிவாகிறது. பிசிசிஐ பாஜகவின் நீட்சியாக செயல்படுவதால், வங்கதேசம் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது" என்று அவர் எழுதியுள்ளார்.
"உள்நாட்டில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரரை ஐபிஎலில் இருந்து தடை செய்ததன் மூலம் இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டது." என்று பார்த்தா குறிப்பிட்டுள்ளார்.
2023 உலகக் கோப்பையை மேற்கோள் காட்டிய பார்த்தா எம்.என்., "ஒரு உலகளாவிய போட்டியை சரியான முறையில் நடத்துவதில் இந்தியா தோல்வியடைந்ததையே அந்த தொடர் காட்டியது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர்களும் ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தில் இருந்த கூட்டமும் கட்டுப்பாடின்றி நடந்தது" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்ததால், சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் சில ஆட்டங்கள் துபைக்கு மாற்றப்பட்டன. இப்போது, டி20 உலகக் கோப்பை தவறான காரணங்களுக்காக செய்திகளில் இடம் பெறுகிறது." என்று பார்த்தா எழுதியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு