You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இசை நிகழ்ச்சியால் நில அதிர்வு போன்ற உணர்வு' - யார் இந்த டிராவிஸ் ஸ்காட்?
- எழுதியவர், ஜெ.பஷீர் அஹமது
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகின் மிகப் பிரபலமான ஹிப் ஹாப் கலைஞர்களில் ஒருவரும் பத்து முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான டிராவிஸ் ஸ்காட் இந்தியா வருகிறார். டெல்லியில் அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் சர்கஸ் மேக்ஸிமஸ் எனும் தனது இசை நிகழ்ச்சியை டிராவிஸ் நடத்த இருக்கிறார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான டிக்கெட் விற்பனை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கியது. அனைத்து டிக்கெட்களும் மூன்று மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக, இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை பார்ட்னர் 'புக் மை ஷோ' (Book My Show) பிபிசியிடம் தெரிவித்தது.
இவ்வளவு சீக்கிரம் டிக்கெட் விற்பனை நடந்திருப்பது, இந்திய ரசிகர்கள் டிராவிஸ் ஸ்காட்டை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது என புக் மை ஷோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏன் இவர் மீது இந்திய ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்? இதற்கு முன் அவர் அப்படி என்ன செய்தார்? இவரது இசை நிகழ்ச்சியால் இத்தாலியில் நிலஅதிர்வு போன்ற குழப்பம் உருவானது எப்படி? என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இசை நிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய நுகர்வோர் தளம்
சர்வதேச கலைஞர்கள் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. எட் ஷீரன், கோல்ட்ப்ளே, கிரீன் டே, சிகரெட்ஸ் ஆஃப்டர் செக்ஸ் (இசைக்குழு), ஆலன் வாக்கர் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் இதற்கு முன்பாக இந்தியாவில் நடந்து முடிந்துள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் பிறந்த 34 வயதான டிராவிஸ் ஸ்காட் தற்போது இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பது இந்திய ரசிகர்கள் சர்வதேச கலைஞர்களின் இசை மற்றும் பாடல்கள் மீது அதிக விருப்பம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
இசை நிகழ்ச்சியால் உணரப்பட்ட அதிர்வு
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி டிராவிஸ் ஸ்காட்டின் இசைநிகழ்ச்சி ஒன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், "சுமார் 60,000 பங்கேற்பாளர்கள் மிகவும் தீவிரமாக குதித்ததால், சில உள்ளூர்வாசிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நினைத்து பீதியடைந்தனர்." என நியூயார்க் டைம்ஸ் அப்போது செய்தி வெளியிட்டது.
இத்தாலியில் நிலநடுக்கத்தின் அளவைக் கணக்கிடும் நிறுவனம் (Italian National Institute of Geophysics and Volcanology) தனது இணையதளத்தில், "இரவு ஒன்பதரை மணிக்குப் பிறகு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறி ரோம் நகர மக்கள் பலரும் தங்களிடம் தகவல் கேட்டனர்" என அப்போது தெரிவித்தது.
நில அதிர்வு நிபுணர், இசை நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறை அவர்கள் குதித்த போது ஏற்பட்ட தாக்கம் "1.3 அளவிலான நிலநடுக்கத்துக்கு" சமம் என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
அவர் அந்த பதிவில், "70 கிலோ எடையுள்ள 60,000 பேர், தரையில் இருந்து 0.15 மீ உயரம் குதிக்கும் போது, ஒவ்வொரு குதிப்பிலும் E = 6.2 MJ ஆற்றல் வெளிப்படுகிறது. இது 1.3 அளவிலான நிலநடுக்கத்துக்கு சமம்" என்று விளக்கினார்.
என்னென்ன பாடல்களை அவர் பாடலாம்?
இதற்கு முன், 2021ஆம் ஆண்டில், டெக்சாஸ், ஹூஸ்டனில் நடந்த அவரது ஆஸ்ட்ரோவேர்ல்ட் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 ரசிகர்கள் இறந்தனர்.
அக்டோபரில் டிராவிஸ் ஸ்காட் இந்தியா வருவது பல ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெற உள்ள மிகப்பெரிய அளவிலான ஹிப்-ஹாப் இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர், அவரின் மிகப் பிரபலமான சிக்கோ மோட் (Sicko Mode), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps), ஹையெஸ்ட் இன் தி ரூம் (Highest in the Room) மற்றும் ஃபெயின் (FE!N) உள்ளிட்ட பாடல்களையும், யுடோபியா (Utopia) ஆல்பத்தின் பாடல்களையும் அவர் பாடலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து புக் மை ஷோ லைவ் ஈவன்ட்ஸின் தலைமை வணிக அதிகாரியான (Chief Business Officer, Live Events, BookMyShow) நமன் புகாலியா, பிபிசியிடம் பேசினார்.
அப்போது, "புதுவிதமான, அசாதாரணமான விஷயங்களைச் செய்வதில் டிராவிஸ் ஸ்காட் மிகவும் பிரபலமானவர். வாண வேடிக்கைகள் உள்ளிட்ட புதுவிதமான பல யுக்திகள் அவரது நிகழ்ச்சிகளில் நிறைந்திருக்கும். இந்தியா இதுவரை பார்த்திடாத வகையில் மேடை வடிவமைப்பு, ஒளி அமைப்பு அவரது சர்கஸ் மேக்ஸிமஸ் நிகழ்ச்சியில் அமையும். அதிரடி, பரவசம் நிறைந்த சூழ்நிலையில் (adrenaline-charged atmosphere chanting) ரசிகர்கள் அனைவரும் ஒரு சேர இணைந்து பாடும் சூழலை இந்த இசை நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்" என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு