பிரபலங்களின் மரணத்தை தமிழ்நாட்டு ஊடகங்கள் கையாளும் விதம் ஏன் சர்ச்சையாகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சமீபத்தில் நடிகர் ஒருவரின் மகள் இறந்த விவகாரத்தை தமிழக ஊடகங்கள் கையாண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தற்கொலைகள் மற்றும் பிரபலங்கள் மரணம் ஆகியவற்றின்போது இறுதிச் சடங்குகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் அளிக்கும் விதம் சரியாக இருக்கிறதா?
செவ்வாய்க் கிழமையன்று தமிழக நடிகர் ஒருவரின் மகள் தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டன.
ஆனால், அதற்குப் பிறகு அந்த மரணம் குறித்த செய்தியைச் சேகரிப்பதில் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
இறந்தவரின் சடலம் சென்ற வாகனம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபோது அதனைத் துரத்திச் சென்று நேரலை செய்தது, துக்கம் விசாரிக்க வந்து, அழுதபடியே திரும்புபவர்களிடமிருந்து துரத்தித் துரத்தி பேட்டிகளை எடுக்க முயன்றது, இறுதிச் சடங்கை இறுதிவரை காட்சிப்படுத்த முயன்றது என ஊடகங்களின் செயல்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின.
அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு நடந்த தேவாலயத்தின் வெளியிலிருந்து அதனைக் காட்சிப் படுத்த முயன்ற காட்சியை வெளியிட்ட செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஷாலின் மரிய லாரன்ஸ், "இப்போதும் அந்தப் பெண்ணை அமைதியாக விட மாட்டீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

பட மூலாதாரம், Shalin Maria Lawrence
"இன்றைய துக்க நிகழ்வை பெரும்பான்மை ஊடகங்கள் கையாண்ட விதம் கேவலம். மக்கள் இதுதான் கேட்கிறார்கள் என்பதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. மனிதநேயம் எல்லாம் வேண்டாம், சிறு துளி கண்ணியம் போதும்," என சமூக நீதி என்ற ட்விட்டர் ஐடி விமர்சித்தது.

பட மூலாதாரம், Social Justice: சமூகநீதி
பத்திரிகையாளரான அதிஷா இந்த நிகழ்வு குறித்து மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். "ஊடகவியலாளர்களுக்கு இது வெறும் செய்தியாகவோ அல்லது காணொலியாகவோ இருக்கலாம். ஆனால் யாரோ ஒரு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பை பற்றி எழுதுகிறோம் என்கிற பொறுப்பு நமக்கெல்லாம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். இறந்து போன குழந்தையும் ஒரு மனிதர்தான், மாபெரும் துயரத்தையும் வலியையும் அனுபவித்திருக்கிறார் என்பதை உணரவேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர், “இறந்து போனவர் அல்லது பாதிக்கப்பட்டவர் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் வெறும் பெயராக உருவமாக இன்னார் மகள்/மகனென கருதாமல் சக உயிராக எண்ணவேண்டும். இதெல்லாம் அடிப்படையான மனிதாபிமான உணர்வு. யாரும் கற்றுத்தர தேவையற்றது. இதுவே அறமுள்ள ஊடகத்தினர் செய்யக்கூடியது," என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Athisha
பிரபலங்களின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சையாகும் ஊடகங்களின் செயல்பாடு
பிரபலங்களின் இறப்பை தமிழக ஊடகங்கள் கையாளும்விதம் குறித்து விமர்சனங்கள் எழுவது இது முதல் முறையல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டில் திரைக்கலைஞர் மனோரமா மரணமடைந்தபோது, அவரது இறுதிச் சடங்குகள் குறித்த செய்தி சேகரிக்கப்பட்டவிதம் மிக மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நடிகர் விவேக்கின் மகன் மரணமடைந்தபோது, ஊடகங்கள் யாரும் அது குறித்து செய்தி சேகரிக்க வரவேண்டாம் என அறிக்கைவிடுக்கும் அளவுக்கு மனோரமாவின் மரணத்தை ஊடகங்கள் துரத்தியிருந்தன.
இதற்குப் பிறகு ஒவ்வொரு திரைப்பிரபலம் இறக்கும்போதும் ஊடகங்கள் இறுதிச் சடங்கில் செய்தி சேகரிக்க நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. குறிப்பாக, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகர் விவேக் ஆகியோரின் இறுதிச் சடங்குகளும் இதேபோல ஊடகங்களால் மிக மோசமான முறையில் கையாளப்பட்டன.
இரு வாரங்களுக்கு முன்பாக நடிகர் மாரிமுத்து இறந்தபோது, அவரது இறுதிச் சடங்குகளை காட்சிப்படுத்திய விதமும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஒரு கட்டத்தில், சில சேனல்களை, யூடியூபே தடை செய்யும் அளவுக்கு காட்சிக் கோணங்கள் இருந்தன.

தற்கொலை செய்திகளில் ஊடகங்கள் எப்படி நடந்துகொள்கின்றன?
பொதுவாக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இறக்கும்போது அது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பொதுமக்களுக்கு இருப்பது இயல்பானதுதான். பெரும் தலைவர்களின் மரணங்கள் நடக்கும்போது, அந்தத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சிகள், இறுதிச் சடங்குகள் போன்றவை ஓரளவுக்கு சரியான வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பொது வாழ்வில் அவர்களது பங்களிப்பு குறித்த செய்தித் தொகுப்புகள் ஒளிபரப்பாகின்றன.
மிகப் பெரிய திரைப் பிரபலங்கள் இறக்கும்போது அவர்களது திரையுலக பங்களிப்புக் குறித்த தொகுப்புகள் ஒளிபரப்பாகின்றன. ஆனால், திரைப் பிரலங்களின் உறவினர்கள் இறக்கும்போது இது போன்ற தொகுப்புகளுக்கு வாய்ப்பில்லாமல் போகும் நிலையில், இறுதிச் சடங்களை நீளமாக காட்டுவதை ஒரே வழியாக இருக்கிறது.
குறிப்பாக, பிரபலங்களோ அவர்களது குடும்பத்தினரோ தற்கொலை செய்துகொண்டால் அதற்கான காரணம் குறித்தும் தற்கொலை நடந்த விதம் குறித்தும் விரிவான தொகுப்புகள் வெளியாகின்றன.
"உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மரணம் என்பது தாங்க முடியாத விஷயம். அந்த மரணத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவது அவர்களுக்கு மிகப் பெரிய துயரமாக மாறுகிறது. மேலும் உயிரிழந்த நபரின் கௌரவம் சீர்குலைகிறது. அவர்கள் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையே வீணாக்கப்படுகிறது,” என்கிறார் லயோலா கல்லூரியின் சமூகப் பணித் துறை பேராசிரியரான கிளாட்சன் சேவியர்.
மேலும் பேசிய அவர், “குறிப்பாக தற்கொலைகள் நடக்கும்போது, ஊடகங்கள் நடந்துகொள்ளும்விதம் மிக அருவெருக்கத்தக்க வகையில் இருக்கிறது. தற்கொலைகள் மிகச் சிக்கலானவை. அதற்கு ஏதேதோ காரணங்கள் இருக்கும். அவற்றை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு நிறுத்திவிடுவது நல்லது. மாறாக, உறவினர்கள், சுற்றியிருப்பவர்கள் ஆகியோரைத் துரத்துவது தவறு. இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது," என்கிறார் லயோலா கல்லூரியின் சமூகப் பணித் துறை பேராசிரியரான கிளாட்சன் சேவியர்.

சமூக வலைத்தளங்களால் மாறிப்போன ஊடகங்களின் போக்கு
சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு ஊடகங்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டதே இதெற்கெல்லாம் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
"மரணங்களையும் தற்கொலைகளையும் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் சமூக வலைதளங்களின் வருகைக்கு பிறகு எதுவுமே அர்த்தமில்லாமல் போய்விட்டன. இந்த விதிமுறைகள் எல்லாமே பாரம்பரிய ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், ஒரு விஷயம் சமூக வலைதளத்தில் வெளியான பிறகு, தங்களுக்கென விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இவர்களும் செயல்படுகிறார்கள். கேட்டால், அதுதான் சமூகவலைதளங்களில் வந்துவிட்டதே என்கிறார்கள். நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், எல்லோரும்தானே செய்கிறார்கள் என்கிறார்கள். தங்களது மோசமான செயல்பாடுகளை ஊடகங்கள் நியாயப்படுத்துவதால் எதிலும் அர்த்தமில்லாமல் போகிறது," என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
கிரிக்கெட்டில் ஒரு பந்தில் ஏதாவது நடந்துவிடலாம். ஆகவே ஒவ்வொரு பந்தும் முக்கியம். ஆனால், மரணங்கள் அப்படியல்ல. இருந்தபோதும் ஊடகங்கள் அப்படித்தான் கையாளுகின்றன என்கிறார் கிளாட்சன் சேவியர். "துக்கம் விசாரிக்க வரும் உறவினர்களதைத் துரத்துவது மிகப் பெரிய தவறு. இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது கிரிக்கெட் மேட்ச் அல்ல.
தற்கொலை போன்ற விஷயங்களில் இதுபோலச் செய்யும்போது, ஏற்கனவே கடுமையான சூழலில் இருப்பவர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
‘ஊடகங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் அல்ல’
சமீபத்திய நிகழ்வில் திரைக்கலைஞரின் மகள் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டபோது, பல ஊடகங்கள் அவரது புகைப்படத்தையும் சேர்த்தே வெளியிட்டன. இறந்தவர் 18 வயதுக்குட்பட்ட குழந்தை என்றபோதிலும் அவரது தற்கொலைக்கான காரணம் துருவித்துருவி ஆராயப்பட்டது.
எல்லா துயரத்தையும்விட மோசமான துயரம் புத்திர சோகம்தான். அந்த வலியை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது மிக முக்கியமானது. அந்தத் தருணத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லையென்றால் நாம் மனிதர்களே இல்லை என்று ஆகிறது என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
பாரம்பரிய ஊடகங்களைப் பொறுத்தவரை, தாம் சமூகவலைதள பக்கங்கள் இல்லை என்ற புரிதல் வேண்டும் என்கிறார் அவர். "சமீபத்தில் மாணவர்களிடம் புலனாய்வு இதழியல் பற்றி பாடம் எடுத்தபோது ஒரு விஷயம் புரிந்தது. அவர்கள் புலனாய்வு இதழியல் என்றாலே கேமராவை ஒளித்துவைத்து எடுக்கும் 'ஸ்டிங் ஆபரேஷன்' என்றுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆவணங்களை ஆராய்வது பற்றிய பொறுமையே அவர்களிடம் இல்லை. சமூக வலைதளங்களின் தாக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. ஊடகங்களுக்கு இது மிகப் பெரிய சவாலான காலகட்டம்," என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
---
(மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-2464000 [24 மணி நேரம்]
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 [24 மணி நேரம்])
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












