You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை
- எழுதியவர், ஹேமா ராகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார்.
இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின் மீது இருந்த பற்று மற்றும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபாடு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த வாழ்க்கையில் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று பல நேரம் நினைத்து வருந்தியிருக்கிறேன். இன்னும் படித்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். இனி அவ்வளவு தான் நம் வாழ்க்கை நினைத்திருந்த நேரத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கான போசியோ போட்டியில் நான் தங்கப்பதக்கம் வென்றேன். அந்த நொடி மீதம் இருக்கும் வாழ்வை வாழ்வதற்கான உந்து சக்தியை கொடுத்திருக்கிறது “ என புன்னகைக்கிறார் ரூபா வைரபிரகாஷ்.
ரூபாவின் குடும்பம்
ரூபாவின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண்கள். அவர் தான் ஐந்தாவது பெண். இவருக்கு இரண்டு அண்ணன்களும் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே இந்த உயரம் குறைபாடு இருக்கின்றது .
ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்த குறைபாட்டை நினைத்து அவர் வருந்தி விடக் கூடாது என்று கவனமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ரூபா.
“சிறுவயதிலிருந்தே நான் என்ன கேட்டாலும் என்னுடைய வீட்டில் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள். நான் எங்கும் செல்ல முடியவில்லை என்று என்னை அவர்கள் நினைக்க வைத்ததில்லை. அதனால் பெரிதாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் தான் என்னுடைய பள்ளிப்பருவம் கழிந்தது. நான் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன். எனக்கு அப்போது படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் வரவில்லை. ஏனென்றால் நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் இல்லை. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எதுவும் பள்ளியில் ஏற்படுத்தாத காரணத்தினால் அதற்கு பிறகு என்னால் படிக்க முடியவில்லை” என்று தனது மழையை நினைவு கூர்கிறார் அவர்.
ஆனால் “இன்று நான் கல்வியின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறேன். என் உறவினர்கள் என் உறவினர் வீட்டு பிள்ளைகள் அவர்களுடைய வீட்டுப்பாடத்தை எழுதும் போது நானும் அவர்களுடன் இருந்து கவனித்தேன். அதனால் எனக்கு இருந்த அறிவை வைத்து சிறு சிறு எழுத்துக்களை நான் எழுதப் படிக்க தெரிந்து கொண்டேன்” என்கிறார் ரூபா.
தானாகவே கற்றுக்கொண்ட ரூபா
ரூபா பள்ளிக்கு சென்று ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணத்தினால் கதைகள் கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுத்துக்கூட்டி படித்திருக்கிறார். கணிப்பொறியின் மீது அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.
அதனால் இணையம் வந்த புதிதில் கணிப்பொறியை எப்படி இயக்குவது என தன்னுடைய நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு தனக்கு தேவையான தகவல்களை கூகுளில் சிறு சிறு வார்த்தைகளாக டைப் செய்து அதன் மூலமாக எழுத படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எனக்கு இணையம் மிகவும் உதவிகரமாக இருந்தது. எனக்கு உயரம் குறைவாக இருப்பதின் காரணமாக என்னால் மற்றவரின் உதவி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. என்னுடைய கைகளும் கால்களும் உயரம் மிக குறைவாக இருப்பதால் எனக்கு நேராக கைபேசி மற்றும் கணிப்பொறி இருந்தால் மட்டுமே என்னால் அவற்றை இயக்க முடியும். அதனால் எப்போதும் எனக்கு ஒருவரின் துணை இருக்க வேண்டி இருந்தது.”
“இணையம் வந்த புதிதில் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கூகுளை பயன்படுத்த தொடங்கினேன். அதற்கு பிறகு தொடர்ந்து எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட சிறு சிறு வார்த்தைகள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கினேன். அதிலிருந்து பல்வேறு தகவல்களையும் நான் தெரிந்து கொள்ள தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தை மிகவும் உபயோகமாக மாற்றியது. கூகுள் மூலம் ஷேர் மார்க்கெட் எப்படி இயங்குகிறது என்பதை கற்றுக்கொண்டு அதையும் நான் ஒரு முறை முயன்று பார்த்திருக்கிறேன். பணத்தையும் அதில் முதலீடு செய்து இருக்கிறேன்” என்கிறார் ரூபா.
வாழ்க்கைப் பாதையை மாற்றிய சந்திப்பு
தான் உயரம் குறைவாக பிறந்து விட்டாலும் இந்த உலகில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று ரூபா பலமுறை எண்ணியிருக்கிறார். அப்படி அவர் நினைத்திருக்கும் நேரத்தில் தான் அவருடைய நண்பராக இருந்த மோகன் என்பவரை சந்தித்திருக்கிறார் .அவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.
இருவரும் சேர்ந்து தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது பற்றிய விழிப்புணர்வை தங்களுடைய அறக்கட்டளையின் மூலம் ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது தொடர்பான மருத்துவ முகாமையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
“இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராக அழைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சவாலாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை நான் எப்படி சந்தித்து என்னுடைய வாழ்க்கையையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்பதை நான் செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் உணர்த்தி இருக்கின்றேன். பலரும் உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது என்றும், எங்களுடைய வாழ்க்கைக்கு அது வழிகாட்டுதலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ரூபா.
தன்னம்பிக்கை அளிக்கும் ரூபா
“பல நேரங்களில் எனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் கூறிவிட்டு இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் வழி கேட்பார்கள். நானும் எனக்கு தெரிந்தவற்றை சொல்லுவேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் நான் ஒரு காலகட்டம் முன்பாக வரை என்னால் முடியுமா என்று இருந்த நிலை மாறி இன்றைக்கு என்னை பார்த்து பல பேர் நம்பிக்கையோடு தங்களுடைய வாழ்க்கையில் செயல்படுவதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்கிறார் ரூபா.
மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் தங்கப் பதக்கம்
எப்போதும் தேடலை மட்டுமே துணையாக கொண்ட ரூபா அதன் பலனையும் அடைந்துள்ளார். உயரம் குறைவாக இருப்பதினால் நடக்க முடியாது ஓட முடியாது என்பதை மாற்றி மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அவர் முடிவு செய்தார்.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இறுதிப்போட்டியில் அவருடைய அணி தங்கப் பதக்கம் வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ரூபாவிற்கு கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து பேசுகையில் “மாற்றுத் திறனாளியான நீ என்ன செய்ய முடியும் , உன்னால் என்ன சாதிக்க முடியும் இறுதி வரை நான்கு சுவருக்குள் தான் உன்னுடைய வாழ்க்கை கழியும் என பல பேர் என்னை பற்றி நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் தகர்த்தெறிய விரும்பினேன். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா போட்டியில் பங்கேற்க முடிவு செய்து அதற்கான தொடர்ந்து பயிற்சியை எடுத்தேன். பயிற்சியின் விளைவாக 2019 ஆம் ஆண்டு என்னுடைய அணி தங்கப் பதக்கம் வென்றது” என்கிறார் ரூபா.
இப்போதும் கூட தனக்கு பல ஆசைகள் இருப்பதாக கூறும் அவர், நிறைய இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும், அதிக மக்களை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதற்காக ஒவ்வொரு அடியாக நிதானமாக, அதேசமயம் பலமாக எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)