You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: பைடன் - டிரம்ப் வார்த்தைப் போர், நிக்கி ஹேலி விலகல்
இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார். அமெரிக்க அதிபராகும் அவரது கனவு வேட்பாளராகும் முன்பே தகர்ந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் இருந்து விலக நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் அவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சவால் விடுத்தார், ஆனால் அவரால் அதில் வெல்ல முடியவில்லை.
ஹேலி விலகியது 2024ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலின் துவக்கமாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகள் முன்பு நடந்தது போலவே, முன்னாள் அதிபர் டிரம்புக்கும், இந்நாள் அதிபர் ஜோ பைடனுக்கும் இடையே போட்டி நிகழவிருக்கிறது.
நிக்கி ஹேலியின் ஆதரவாளர்கள் டிரம்பை ஆதரிப்பார்களா?
நிக்கி ஹேலி திரட்டியிருந்த டிரம்ப் எதிர்ப்பாளர்களின் கூட்டணியால் டிரம்பின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. ‘சூப்பர் செவ்வாய்’ என்றழைக்கப்படும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த முதல்கட்ட வாக்குப் பதிவுகளில் டிரம்ப் வென்றதையடுத்து அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
நிக்கி ஹேலியை ஆதரித்தவர்களை மூன்று வகையில் பிரிக்கலாம்: டிரம்ப் எதிர்ப்பாளர்கள், சார்பற்றவர்கள், குடியரசுக் கட்சி விசுவாசிகள்.
இதில் முதல் பிரிவினர், டிரம்பை எதிர்ப்பதற்காக மட்டுமே நிக்கி ஹேலியை ஆதரித்ததாகக் கூறுகின்றனர். இதுபோன்ற வாக்காளர்கள், தங்கள் பக்கம் திரும்புவர் என்று ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
சில மாகாணங்களில் நடந்த முதல்கட்டத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஹேலியின் ஆதரவாளர்களில் 21% பேர்தான், அவரது விலகலுக்குப் பின் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் இந்த வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் நிக்கி ஹேலியின் மீது அந்தரங்கத் தாக்குதல்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
நிக்கி ஹேலி போட்டியிலிருந்து விலகியதும்கூட டிரம்ப் முதலில் அவரைத் தாக்கித்தான் பேசினார். அதன் பின்னரே ஹேலியின் ஆதரவாளர்களைத் தன்னை ஆதரிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
டிரம்பிற்கு எதிராக இருக்கும் சவால்கள் என்ன?
ஆனால் ஒரு கருத்துக்கணிப்பின்படி, 19% அமெரிக்க வாக்காளர்கள் டிரம்ப், பைடன் ஆகிய இருவரையும் வெறுக்கின்றனர். இதனால், இவர்கள் வாக்களிக்காமலே இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றங்கள், யுக்ரேன், காஸா ஆகிய இடங்களில் நிகழும் சம்பவங்கள், அல்லது டிரம்ப், பைடன் ஆகியோர் சங்கடப்படும் வகையில் செய்யும் குளறுபடிகள் ஆகியவை எப்பக்கமும் சார்பற்ற வாக்காளர்களின் முடிவை மாற்றக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
மேலும், டிரம்பின் மீது இருக்கும் வழக்குகளும் அவருக்குப் பின்னடைவாக அமையக்கூடும். அவருக்கு எதிராக இருக்கும் நான்கு குற்ற வழக்குகளில் ஏதேனும் ஒன்றில்கூட அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் வாக்குகளை இழப்பார், என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பைடன் – டிரம்ப் இடையே முற்றும் வார்த்தைப் போர்
இந்நிலையில் டிரம்ப், ஜோ பைடனை தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். ‘எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும்’ பைடனோடு விவாதிக்கத் தயார் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் நலனுக்காக அவர் இந்த விவாதத்திற்கு பைடனை அழைப்பதாகக் கூறியுள்ளார்.
அத்தோடு, 81 வயதான பைடன், மிகவும் வயதானவர் என்றும், மறதியால் அவதிப்படுபவர் என்றும், அதனால் அவரால் தன்னோடு விவாதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.
பதிலுக்கு, 77 வயதான டிரம்ப் முதுமையால் மனச்சிதைவு அடைந்துவிட்டதாக பைடன் கூறியுள்ளார். பைடனின் தேர்தல் பிரசாரக் குழு, டிரம்ப் விளம்பரத்திற்காகவே இதையெல்லாம் செய்து வருவதாகக் கூறியிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)