You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவை தேர்தல் பற்றி கவலை தெரிவித்த ஐ.நா உயர் ஆணையர் - கொந்தளித்த இந்திய அரசு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் தேர்தல் அனுபவத்திலிருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், அதைப் பின்பற்ற விரும்புவதாகவும் இந்திய அரசு அதுகுறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் 55வது கூட்டத்தொடரின்போது இந்தியாவின் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த அமர்வில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், உலகின் பல பகுதிகளில் போரை நிறுத்துவதற்கான அமைதி முயற்சிகள் குறித்து, மக்கள் சமூகங்கள் செழிக்க ‘வெளிப்படைத்தன்மை’ அவசியம் என்பது குறித்தும் பேசினார்.
குடிமக்களுக்கான வெளிப்படைத்தன்மை கொண்ட சூழலைப் பற்றிப் பேசிய அவர், பல நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் தனது உரையில் கூறியது என்ன?
ரஷ்யா, இரான், செனகல், கானா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான தலைமை அதிகாரி வோல்கர் டர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் இந்தியாவையும் குறிப்பிட்டுள்ளார்.
டர்க் இதுகுறித்துப் பேசியபோது, “96 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் தேர்தல் தனித்துவமானது. இந்த நாட்டின் மதச்சார்பின்மை, ஜன்நாயக மரபுகள், மற்றும் அதன் பெரிய பன்முகத்தன்மையை அவர் பாராட்டினார். ஆனால், அவர் சில கவலைகளையும் வெளிப்படுத்தினார்.”
குடிமக்களின் உரிமைகள் மீதான ‘அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்’, அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்களின் ‘இலக்கு’ மற்றும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ‘வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பாகுபாடு’ குறித்து டர்க் கவலை தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாக, அனைவருடைய அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வதற்கான வெளிப்படையான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம் எனவும் டர்க் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் இதன்போது வரவேற்றுள்ளார். கடந்த மாதம், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து, அவை அரசமைப்புக்கு விரோதமானது என்றும், தேர்தல் பத்திரங்களை விற்க அதிகாரம் பெற்ற ஒரே வங்கியான எஸ்பிஐக்கு, ஏப்ரல் 12, 2019 முதல் தற்போது வரையிலான அவற்றை வாங்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை அளிக்கவும் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும் என்றும் இந்தக் கண்ணோட்டத்தில் 2024 ஒரு முக்கிய தேர்தல் ஆண்டு எனவும் டர்க் குறிப்பிட்டார்.
வோல்கர் டர்க்கின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அரிந்தம் பக்சி, இந்த அமர்வின்போது இந்தியாவின் தரப்பை முன்வைத்து, டர்க்கின் அறிக்கையைத் தாம் கவனத்தில் எடுத்ததாகக் கூறினார்.
வோல்கர் டர்க்கின் அறிக்கை ‘தேவையற்றது’ எனக் கூறிய அவர், அவரது கருத்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அரிந்தம் பக்சி, “எந்தவொரு ஜனநாயகத்திலும் விவாதம் இயல்பானது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தங்கள் முடிவுகளைப் பிரசாரங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். பன்முகத்தன்மை, பன்மைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியக் கொள்கையின் ஒரு பகுதி மற்றும் அரசமைப்பு மதிப்புகளிலும் அது பொதிந்துள்ளது,” என்றார்.
“இதற்காக, வலுவான நீதித்துறையும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் சுதந்திரமான அமைப்புகளும் உள்ளன. இந்த மதிப்புகள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மொத்த பூமியும் ஒரே குடும்பம் என்ற நாகரிகத்தின் மதிப்பிலிருந்து வருகிறது,” என்று பக்சி கூறினார்.
கோவிட்-10 பேரிடரைக் கையாள்வதில் அதன் நட்பு நாடுகளுக்கு உதவுவதுல் இந்தியாவின் இந்த அர்ப்பணிப்பு பிரதிபலித்தது எனக் கூறிய அவர், நெருக்கடி காலங்களில் உதவத் தயாராக உள்ள நாடு இந்தியா என்றார்.
“இன்று உலகம் மோதல்களாலும் போராலும் சூழப்பட்டிருக்கும்போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில், இந்திய மக்கள் தங்கள் விருப்பங்களுக்குக் குரல் கொடுக்கும் என்று அவர்கள் நம்பும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்குத் தங்கள் வாக்கை சுதந்திரமாகப் பயன்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை,” என்றும் பக்சி கூறினார்.
பாகிஸ்தான் பற்றி வோல்கர் டர்க் என்ன கூறினார்?
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல்களைக் குறிப்பிடும் டர்க், இந்தத் தேர்தலை ஏராளமான வாக்காளர்களை வரவேற்றதுடன், ஜனநாயகத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் மக்கள் விரும்புவதை இது காட்டுவதாகக் கூறினார்.
“எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை சமூக உறுப்பினர்கள், பிறரை தன்னிச்சையாக காவலில் வைப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் முறையிடுகிறேன்,” என்று டர்க் கூறினார். பல வாரங்களாக அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்காதது போன்ற விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி வேட்பாளர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு அவர் கவலை தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இருந்து பல தடுப்புக் காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
“எந்தவிதமான அரசியல் வன்முறையையும் நான் கண்டிக்கிறேன், அனைத்து வழக்குகளையும் விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)