கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்த்த பிரான்ஸ் - முழுவிவரம்

கருக்கலைப்பு உரிமையை தனது அரசியலமைப்பில் வெளிப்படையாக உள்ளடக்கிய உலகின் முதல் நாடாகியுள்ளது, பிரான்ஸ்.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் சுதந்திரமாக கருக்கலைப்பு செய்வதற்காக 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசியலமைப்பைத் திருத்த வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின்போது, நாட்டின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில், 780 பேர் பெண்கள் கருக்கலைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர், 72 பேர் எதிராக வாக்களித்தனர்.

வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்.

அதிபர் எமானுவேல் மக்ரோங் இந்த நடவடிக்கையை "பிரெஞ்சு பெருமை" என்று குறிப்பிட்டார். இது உலகத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியது.

இருப்பினும் கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் வத்திக்கானைப் போலவே இந்தத் திருத்தத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பு 1975 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக உள்ளது. ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சுமார் 85% பொது மக்கள் கருக்கலைப்பு உரிமையை பாதுகாக்க அரசியலைப்பில் திருத்தம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பல நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் இனப்பெருக்க உரிமைகளை உள்ளடக்கியிருந்தாலும், கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை என உத்தரவாதம் அளித்த முதல் நாடு பிரான்ஸ்.

இது நவீன பிரான்சின் அரசியலமைப்பில் ஏற்கொள்ளப்பட்டுள்ள 25-ஆவது திருத்தமாகும். மேலும், 2008க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தமாகும்.

சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் "என் உடல், என் விருப்பம்" என்ற வாசகம் ஒளிரச்செய்து கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

வாக்கெடுப்புக்கு முன், பிரதமர் கேப்ரியல் அட்டல் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு உரிமை "ஆபத்தில் உள்ளது" , "முடிவெடுப்பவர்களின் தயவில்" உள்ளது என்று கூறினார்.

"நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம்: உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது, உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது," என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் வலதுசாரிகளின் எதிர்ப்புக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், அதிபர் மக்ரோங் அரசியலமைப்பை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

கருக்கலைப்பு விமர்சகர்கள் இந்த திருத்தம் தேவையற்றது என்று கூறுகிறார்கள், மேலும் அதிபர் தனது இடதுசாரி நற்சான்றிதழ்களை அதிகரிக்க இந்த காரணத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின், 1975 முதல் அந்தச் சட்டம் ஒன்பது முறை புதுப்பிக்கப்பட்டது - ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்புக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் - சட்டங்களின் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிக்கும் அமைப்பு - ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை.

கடந்த 2001 ஆம் ஆண்டில் வந்த தீர்ப்பில், 1789-ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனத்தில் பொதிந்துள்ள சுதந்திரக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, கருக்கலைப்புக்கு பிரான்ஸ் அரசியலமைப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.

பல சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பு ஏற்கெனவே அரசியலமைப்பு உரிமை என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் 2022-இல் உச்ச நீதிமன்றம் சார்பில் கருக்கலைப்பு உரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புச் சட்டத்திற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு வழக்க வேண்டி, தற்போது இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து, அதனை அரசியலைமப்பு உரிமையாக்குவதற்கு முன், மாநிலங்கள் தாங்களாவே, கருக்கலைப்பை தடை செய்ய முடிந்துள்ளது. அது பெண்களின் கருக்கலைப்பு உரிமையை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், தற்போது பிரான்ஸின் அரசியலமைப்பில் கருக்கலைப்பை உள்ளடக்கிய நடவடிக்கை பலதரப்பட்ட மக்களால் வரவேற்கப்படுகிறது.

"இந்த உரிமை (கருக்கலைப்பு) அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், பிரான்ஸ் அந்த ஆபத்தில் இல்லை என்று நினைக்க எங்களுக்கு இப்போது வரை எந்தச் சான்றும் இல்லை" என்று ஃபாண்டேஷன் டெஸ் ஃபெம்ம்ஸ் உரிமைக் குழுவைச் சேர்ந்த லாரா ஸ்லிமானி கூறினார்.

"ஒரு பெண்ணிய ஆர்வலராகவும், ஒரு பெண்ணாகவும் நிறைய உணர்ச்சிகள் உள்ளன," என்று அவர் கூறினார்.

பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்ட கவலைகளை எதிரொலிக்கும் வகையில், "ஒரு மனித உயிரைப் பறிக்க எந்த 'உரிமையும்' இருக்க முடியாது" என்று வத்திகான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)