You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகமது அஸ்ஃபான்: இந்திய இளைஞர் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி யுக்ரேன் போரில் பலி - முழு பின்னணி
ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் வேலை தேடிக் கொண்டிருந்தார், இந்தத் தேடல் அவரை ரஷ்ய ராணுவத்திற்கு அழைத்துச் சென்றது. அவருக்கு வேலையும் கிடைத்தது, ஆனால் அந்த வேலையே அவரது வாழ்க்கையின் முடிவாக அமைந்துவிட்டது.
அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் முகமது அஸ்ஃபானின் மரணத்தை உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை சமூக ஊடகங்களில், "இந்திய குடிமகன் முகமது அஸ்ஃபானின் துயர மரணம் பற்றி அறிந்தோம். அவரது குடும்பத்தினருடனும் ரஷ்ய நிர்வாகத்துடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," எனக் கூறியது.
முன்னதாக, இஸ்ரேலில் ஹெஸ்புலா தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இதே தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
ரஷ்ய ராணுவத்தில் குறைந்தது 20 இந்திய குடிமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கைக்குப் பிறகு, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
பிப்ரவரி 29 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது, "சுமார் 20 இந்தியர்கள், நாடு திரும்ப உதவி கோரி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளனர்," என்று கூறியுள்ளது.
அஸ்ஃபான் பற்றிக் கிடைத்த தகவல்கள் என்ன?
ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது அஸ்ஃபான். இவருக்கு அஸ்மா ஷிரீன் என்ற மனைவியும் ஒரு சிறு குழந்தையும் உள்ளனர். அஸ்ஃபானுக்கு வயது 30.
என்டிடிவி சேனல் அஸ்ஃபானின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளது. அஸ்ஃபான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக என்டிடிவி செய்தி கூறுகிறது.
முகமது அஸ்ஃபானின் சகோதரர் முகமது இம்ரான் பைனான்சியல் டைம்ஸிடம், பாபா விலாக்ஸ் என்ற யூடியூபரின் வீடியோக்களை பார்த்து தனது சகோதரர் இதில் சிக்கியதாகக் கூறினார்.
மாஸ்கோவில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புகள் இருப்பதாகவும், வேலையில் சேர்ந்தால் ஓராண்டில் ரஷ்ய குடியுரிமை கிடைக்கும் என்றும் பாபா விலாக்ஸ் யூடியூபர் கூறியதாக இம்ரான் கூறுகிறார்.
"கடந்த ஆண்டு செப்டம்பரில், ரஷ்யாவில் டெலிவரி பாய் வேலைகள் குறித்த வீடியோ ஒன்று பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. மற்றொரு வீடியோவில், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களுக்கான வேலைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டது.
பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் சுற்றித் திரியும் இந்த யூடியூபர், தனது வீடியோக்களில் ரஷ்யாவின் வானிலையைப் புகழ்ந்து பேசி, ரஷ்ய ராணுவத்தில் ரூபாய் 1 லட்சம் மாத சம்பளத்தில் வேலைகள் இருப்பதாகக் கூறுகிறார். மூன்று மாத பயிற்சியும், தங்குமிடம் மற்றும் உணவும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்." முகமது இம்ரானின் கூற்றுப்படி, இதுபோன்ற வீடியோக்களால்தான் அஸ்ஃபான் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்கள்
தனது சகோதரனைக் கண்டுபிடிக்க இந்த வாரம் ரஷ்யா செல்ல நினைத்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முகமது இம்ரான் கூறியுள்ளார்.
"முகமது அஸ்ஃபான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தம் அவருக்குக் கையெழுத்திட வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதத்தில் யுக்ரேன் எல்லைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அஸ்ஃபானுடன் பணிபுரிபவர்கள் ஜனவரி மாதம் தொலைபேசியில் அழைத்து அவருக்கு காலில் குண்டடி பட்டதாகத் தெரிவித்தனர்," என்று இம்ரான் கூறுகிறார்.
அஸ்ஃபானை தவிர, ரஷ்யாவுக்குச் சென்ற பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த சில இளைஞர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு தங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். தவறாக வழிநடத்தப்பட்டு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
புகைப்பட ஏஜென்சியான கெட்டியின் கூற்றுப்படி, கடந்த மாதம் அஸ்ஃபானின் குடும்பத்தினர் அவரது புகைப்படத்துடன் உதவி கோரினர். அஸ்ஃபானை சீக்கிரமாக ரஷ்யாவில் இருந்து மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
ரஷ்ய வேலைக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, துபாயில் அலுவலகம் வைத்திருக்கும் ஒரு முகவர் வேலைக்கு ஈடாக ஒவ்வொரு இளைஞரிடம் இருந்தும் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக முகமது இம்ரான் கூறியுள்ளார்.
ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியிலும் முகமது இம்ரானின் அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலை பார்த்தோம். இந்த சேனலுக்கு சுமார் மூன்று லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ரஷ்ய வேலை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ 26 செப்டம்பர் 2023 அன்று பதிவேற்றப்பட்டது.
இந்த சேனல்களில் வேறு பல நாடுகளைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டு, அங்குள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முகமது அஸ்ஃபானின் மரணச் செய்திக்குப் பிறகு இந்த சேனலில் எந்த அப்டேட்டும் இல்லை. சேனலில் கடைசியாக ஜனவரி மாதம் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் ரஷ்யாவை அடைந்த பிறகு முகவரைத் தொடர்புகொண்டு, தனக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகப் புகாரளித்துள்ளார். இது வேலையின் ஒரு பகுதி என்று முகவர் அஸ்ஃபானிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர்கள் ரஷ்யா-யுக்ரேன் போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என முகமது இம்ரான் கூறுகிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் உயிருடன் இருப்பதாக முகவர்கள் கூறுவதாகவும், ஆனால் அஸ்ஃபான் இறந்துவிட்டதாக தூதரகம் கூறுவதாகவும் முகமது இம்ரான் தெரிவித்துள்ளார்.
ஒவைசி தரப்பினர் வைத்த வேண்டுகோள்
முகமது அஸ்ஃபானின் மறைவுக்கு அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளது.
"இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு ஒவைசி ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்திய இளைஞர்கள் எப்படி வலுக்கட்டாயமாக போருக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் கூறினார். முகமது அஸ்ஃபானின் உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்," என ஏஐஎம்ஐஎம் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
சில இந்தியர்களின் குடும்பங்கள் தன்னைச் சந்தித்ததாகவும், தங்கள் அன்புக்குரியவர்கள் ரஷ்யா- யுக்ரேன் போருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டதைப் பற்றி அவர்கள் தன்னிடம் கூறியதாகவும், பிப்ரவரி 21 அன்று ஒவைசி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
அப்போது ரஷ்ய அரசுடன் பேசி இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒவைசி வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் இருந்து இரண்டு பிரிவுகளாக ரஷ்யாவிற்கு இளைஞர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஒவைசி கூறியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளாக தொடரும் ரஷ்யா- யுக்ரேன் போர்
ரஷ்யா, யுக்ரேன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக பல செய்திகள் கூறின. சமீபத்தில் ரஷ்யா- யுக்ரேன் போரில் ரஷ்ய வீரர்களுடன், இந்திய இளைஞர்ளும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
ரஷ்யாவில் சிக்கியுள்ள நபர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவில் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலைகள் வழங்கப்படும் என்று முகவர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இந்த நெட்வொர்க்கில் உள்ள இரண்டு முகவர்கள் ரஷ்யாவிலும், இருவர் இந்தியாவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நான்கு முகவர்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஃபைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்துள்ளார். இந்த ஃபைசல் கான் 'பாபா விலாக்ஸ்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இந்த முகவர்கள் மொத்தம் 35 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். முதலில் மூன்று பேர் சென்னையில் இருந்து ஷார்ஜாவிற்கு 9 நவம்பர் 2023 அன்று அனுப்பப்பட்டனர்.
ஷார்ஜாவில் இருந்து அவர்கள் நவம்பர் 12 அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். நவம்பர் 16 அன்று, ஃபைசல் கானின் குழு ஆறு இந்தியர்களையும் பின்னர் ஏழு இந்தியர்களையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் ராணுவ வீரர்களாக அல்லாமல் உதவியாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது.
அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அவர்கள் 24 டிசம்பர் 2023 அன்று ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
'பாபா விலாக்ஸ்' சேனலின் விளக்கம் என்ன?
ஃபைசல் கான் பிபிசியிடம் பேசினார். "இது பொது வேலைகள் அல்ல, ராணுவத்தில் உதவியாளர் பதவிக்கான வேலைகள் என இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.
"இது ராணுவ உதவியாளர் பணி என்று வேலை தேடுபவர்களிடம் நான் கூறியிருந்தேன். எனது யூடியூப் சேனலில் முன்பு வெளியிட்ட வீடியோவை நீங்கள் பார்க்கலாம். இது ராணுவ உதவியாளர் பணி என்று ரஷ்ய அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தோம். நான் இந்தத் துறையில் ஏழு ஆண்டுகளாக இருக்கிறேன். இதுவரை நான் சுமார் இரண்டாயிரம் பேருக்கு வெவ்வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்," என்கிறார் பைசல் கான்.
வேலைக்காக ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி கண்டுபிடித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான், தெலங்கானாவில் உள்ள நாராயண்பேட்டையைச் சேர்ந்த சுஃபியான், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அர்பன் அகமது, காஷ்மீரை சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தை சேர்ந்த ஹமீல் மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவை சேர்ந்த சையத் ஹுசைன், சமீர் அகமது மற்றும் அப்துல் நயீம் ஆகியோர் ரஷ்யா சென்றுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)