You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் இந்த இஸ்லாமியர் நரேந்திர மோதியிடம் ‘மயங்கியது’ எப்படி?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக, பெங்களூரில் இருந்து
கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மண் மேலாண்மை நிபுணருமான அப்துல் சலாம் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட, பா.ஜ.க வாய்ப்பளிக்காததால், அப்துல் சலாமிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருப்பது மிகவும் முக்கியமானது. இதனால், பா.ஜ.க பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
இந்த விமர்சனங்கள் குறித்து பேசிய பா.ஜ.க-வினர், பா.ஜ.க முஸ்லிம் சமூகத்தின் ஓட்டுகளை பெறவில்லை, எனவே முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவது சரியானதாக கருதப்படவில்லை என்று கூறினர்.
கொள்கையை மாற்றிய பா.ஜ.க
கடந்த 2021-ஆம் ஆண்டு மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.பி.அப்துல்லக்குட்டிக்கு சீட்டு கொடுத்து பா.ஜ.க தனது கொள்கையை மாற்றிக்கொண்டது.
அந்த தேர்தலில் அப்துல்லக்குட்டி 69,935 வாக்குகள் பெற்றார். இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு திரூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் சலாம் போட்டியிட்டார். அப்போது சலாம் 9,097 (5.33%) வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அப்துல் சலாமுக்கு பா.ஜ.க சீட்டு வழங்கிய கேரள தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸுக்கும், அதன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அங்கம் வகிக்கும் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடது ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கும் சவால் விடும் பா.ஜ.க-வின் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.
தற்போது, பா.ஜ.க தனது முதல் பட்டியலில் அப்துல் சலாம் பெயரை அறிவித்துள்ளது.
பிபிசி சார்பில் சலாமைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் அவரிடமே கேட்டபோது, “அவருடைய எண்ணை நான் உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் பி.எல்.சந்தோஷ் (பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளர்), நரேந்திர மோதிஜி மற்றும் ஜேபி நட்டாஜி ஆகியோரை அழைத்துக் கேளுங்கள். அவர் என்னில் எதையோ பார்த்திருக்க வேண்டும், அல்லது தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பது ஒரு காரணியாகவும் இருக்கலாம்," என்றார்.
71 வயதான அப்துல் சலாமிற்கு ஒரு சகோதரியும், ஒன்பது சகோதரர்களும் உள்ளனர்.
மண் மேலாண்மை துறையில் முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்பு, அப்துல் சலாம், தினமும் ஒன்பது கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
பயிர் ஊட்டச்சத்து மற்றும் முந்திரி பயிர் குறித்து ஆய்வுக்கு பிறகு, ஆசிரியர் பணி செய்யத் துவங்கினார்.
இதற்குப் பிறகு அவர் துறைத் தலைவர் முதல் அசோசியேட் டீன் வரையிலான பதவிகளில் பணியாற்றினார்.
குவைத் மற்றும் சுரினாம் நாடுகளில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் 153 ஆய்வுக்கட்டுரைகளையும் 13 நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் 2011 முதல் 2015 வரை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
'மோதி என்னை மயக்கிவிட்டார்'
ஆனால் பிரதமர் மோதியைப் புகழ்வதில் சலாம் மற்ற பா.ஜ.க-வினருக்குச் சற்றும் சளைக்காதவர்.
"அவர் என்னை மயக்கி விட்டார்," என்று அவர் கூறுகிறார்.
இதற்கான காரணத்தை விளக்கிய அவர், “உலகமே மோதியைச் சுற்றி வருகிறது. இதுவே அவரது ஆளுமை, சிந்தனை, மற்றும் பணியின் பலம். எல்லோரையும் அழைத்துச் செல்லும் உணர்வு அவருக்கு உண்டு. அவர் முழு நாட்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக அவர் குஜராத்தில் இருந்து டெல்லி வரை சென்ற அவரது அரசியல் பயணத்தை ," என்றார்.
மோதியின் இஸ்லாமிய-விரோத பிம்பம் குறித்து பேசிய அப்துல் சலாம், “இது மோதிக்கு எதிரானவர்களால் புனையப்பட்ட கதை. இதெல்லாம் போலியானது. எந்த ஒரு சம்பவத்திற்கும் அவர் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதை. நீங்கள் நடுநிலையாக இருப்பவர்களிடம் பேசுங்கள், பின், உண்மைகளை மனதில் வைத்துக்கொண்டு பகுப்பாய்வு செய்து பாருங்கள்," என்றார்.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவர் செய்த சாதனைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் (ஐ.யூ.எம்.எல்) குறைபாடுகள் குறித்து மலப்புரம் மக்கள் அறிந்திருப்பதாக சலாம் கூறுகிறார்.
“மதரஸாக்களில் கற்பிக்கப்படுவது மக்களின் மனதைச் சிதைத்துவிட்டது. பெற்றோரை சொர்க்கத்திற்கு அனுப்புவது முதல் பல விஷயங்களுக்கு மனம் விஷமாகிறது. இதனால் பலர் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். நான் பாரபட்சமற்றவன் என்பதைக் காட்டுவதுதான் என் வேலை,” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது எனது வேலை ஏழைகளின் மனதில் அவர்களின் தலைவர்களால் நிரப்பப்பட்ட இருளை அகற்றி மோதி ஒளியால் நிரப்புவதாகும். நாம் அனைவரும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் என்று திருக்குர்ஆனில் எழுதப்பட்டுள்ளதை படிப்படியாக நான் உங்களுக்கு கூறுவேன்.
"அவர்களை வணங்குங்கள். அவர்களை நம்புங்கள். ஹஜ் செல்லுங்கள், நோன்பு கடைபிடியுங்கள், இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றுங்கள். இவை அனைத்தும் உலகளாவிய மனித நேயத்தையும் அனைத்து மக்களையும் நம்முடையவர்களாக ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கற்பிக்கின்றன," என்றார்.
சலாம் உள்ளூர் மதகுருக்களைக் கண்டிக்கிறார்.
“உள்ளூர் முல்லாக்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காஃபிர் என்றால் என்ன? நீ இஸ்லாத்தை ஏற்கும் வரை நீங்களும் காஃபிர்தான். அவர்கள் காஃபிர்களாகவே இருக்கட்டும். மோதியின் வெளிச்சத்தில் இந்த அறியாமை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதே எனது உண்மையான வேலை. அல்லாஹ், குரான், பைபிள் மற்றும் பகவத் கீதையை நம்புவதே எனது மந்திரம். எல்லா மத நூல்களையும் பார்த்தால், எல்லா இடங்களிலும் மனிதநேயம், அன்பு, அக்கறை என்று போதித்திருப்பதைக் காணலாம். மோதியும் இதை நம்புகிறார்," என்றார்.
"மோதியை விட சிறந்த மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் இந்துவாக இருப்பார். சனாதன தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர். இவை அனைத்தும் குர்ஆனிலும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். சில முல்லாக்கள் அசல் குர்ஆனைத் திரித்து இளைஞர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்," என்றார்.
பிரதமர் மோதியுடனான சந்திப்பை விவரிக்கும் சலாம், “அவர் சிரிக்கவில்லை, ஆனால் என்னுடன் கைகுலுக்கினார். அவரது உள்ளங்கையின் மென்மையை இன்னும் என்னால் உணர முடிகிறது. நான் ஒரு கதகதப்பான உணர்வை உணர்ந்தேன்,” என்கிறார்.
ஐ.யூ.எம்.எல்-இன் கோட்டையான மலப்புரத்தில் சவால் விடுவது மிகவும் கடினம் என்பதை சலாம் அறிவார்.
“ஒரு நாள் திடீரென்று நீங்கள் ஆலமரத்துடன் சண்டையிடலாம். வளர்ச்சியின் மாதிரியைக் காட்டுவதன் மூலம் நீங்கள் அதை படிப்படியாக பிடுங்க வேண்டும்," என்றார்.
இதுகுறித்து ஐ.யு.எம்.எல் எம்.பி முகமது பஷீரிடம் கேட்டபோது, "இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது நல்லது," என்றார் அவர்.
பா.ஜ.க இழப்பதற்கு ஒன்றுமில்லை
அரசியல் விமர்சகரும், கேரள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஜே பிரபாஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "சலாமின் வேட்புமனு என்பது அடையாள அரசியல்தான். ஏனெனில் பா.ஜ.க-விடம் இழப்பதற்கு என்று எதுவும் இல்லை. கட்சி பீகார் அல்லது குஜராத்தில் யாரையாவது நிறுத்தினால், அவர்கள் வெற்றி பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால், இங்கே அவர்கள் ஒரே கல்லில் மூன்று விஷயங்களை அடிக்கப் பார்க்கிறார்கள்," என்றார்.
“இதன் மூலம், முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை என்ற விமர்சனத்தை பா.ஜ.க சமாளிக்க விரும்புகிறது. இரண்டாவது விஷயம், இந்த வேட்பாளர் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறப் போவதில்லை, அதனால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதே சமயம் இஸ்லாமிய வாக்காளர்களின் மனதையும் பிடிக்க முயற்சிக்கிறார்கள். கட்சிக்கு அது பலனளிக்குமா இல்லையா என்பதை அறிய நீண்ட கால பரிசோதனையாக இதை மேற்கொள்ளலாம்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமிய-விரோத பிம்பத்தை மட்டுப்படுத்த பா.ஜ.க முயல்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால் எங்களைப் போன்ற கல்வியாளர்களுக்கு அரசியல் பிம்பம் இல்லை," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)