ஷெரீப் உஸ்மான் ஹாதி: இவரது மறைவால் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி
- பதவி, பிபிசி
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய இளைஞர் இயக்கத்தின் ஒரு முக்கியத் தலைவரின் மறைவைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளது.
ஷெரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் 2024-ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படும் தேதியை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தேர்தலில் ஹாதி ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
வியாழக்கிழமை அவரது மரணம் குறித்த செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வங்கதேச தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்தில் போராடுவதற்காகத் திரண்டனர்.
பின்னர், போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகியவற்றின் அலுவலகங்களைச் சேதப்படுத்தினர். இதில் ஒரு கட்டடத்திற்கு தீ வைக்கப்பட்டது.
"நூற்றுக்கணக்கான மக்கள் இங்கே திரண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்" என்று பிபிசி பங்களா சேவையிடம் ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டன. அதே சமயம், கட்டடத்திற்குள் சிக்கியிருந்த செய்தியாளர்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
32 வயதான ஹாதி, 'இன்குலாப் மஞ்சா' (Inqilab Mancha) என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவராகவும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் அளித்துள்ள அண்டை நாடான இந்தியாவை வெளிப்படையாக விமர்சிப்பவராகவும் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அரசியல் கட்சிகள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளன. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென இடைக்கால அரசாங்கத்தை அவை வலியுறுத்தியுள்ளன.
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் முஹம்மது யூனுஸ், "ஹாதியின் மரணம், தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு" என்று விவரித்தார்.
அவர் வியாழக்கிழமை அன்று ஆற்றிய ஒரு தொலைக்காட்சி உரையில், "பயம், பயங்கரவாதம் அல்லது ரத்தக் களரி மூலம் நாட்டின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தை நிறுத்த முடியாது" என்று கூறினார்.
சனிக்கிழமை (டிசம்பர் 20) தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என இடைக்கால அரசாங்கம் அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
ஹாதி சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே, "இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல்" என்றும், "சதிகாரர்களின் நோக்கம் தேர்தலைத் திசைதிருப்புவதாகும்" என்றும் யூனுஸ் கூறினார்.
"தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட எந்த வகையான வன்முறையும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த மரணம் நாட்டின் அரசியல் சூழலில் ஒரு கவலையளிக்கும் சம்பவமாகும்." என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பல நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாரக்கணக்கில் நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அந்நிகழ்வுகள் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தன.
ஷேக் ஹசீனா, போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கொடிய ஆயுத பலத்தைப் பயன்படுத்த அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவருக்கு கடந்த நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தப் போராட்டங்களின் போது 1,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












