திருச்சி விமானத்தில் என்ன பிரச்னை? பயணிகள் நிலை என்ன? 8 கேள்விகளும் பதில்களும்

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்கப்பட்டது. ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக, அதன் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்பதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக எழும் சில முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் என்ன நடந்தது?
வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், புறப்பட்டதும் சில நிமிடங்களில் உள்ளே செல்ல வேண்டிய விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. எனவே, விமானத்தை ஷார்ஜா செல்லாமல் மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்களும் மருத்துவக் குழுக்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
விமானம் தரையிறங்குவதற்கு ஏற்ப அதன் எடையை குறைப்பதற்காக எரிபொருளைக் குறைக்கும் பொருட்டு, வானத்திலேயே, 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்த பின்னர் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

1. பயணிகளின் நிலை என்ன?
வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பயணிகள் ஒரு வாரத்திற்குள் சார்ஜா செல்லலாம் அல்லது மாற்று விமானத்தில் நள்ளிரவில் சார்ஜா செல்லலாம் என்றும் பயணத்தை ரத்து செய்ய விரும்பினால் முழு கட்டண தொகையும் திருப்பித் தரப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 109 பயணிகள் மாற்று விமானத்தில் சார்ஜா செல்ல சம்மதித்தனர். மீதமுள்ள 35 பேரில் அசௌகரியம் மற்றும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக சிலர் பயணத்தை ரத்துசெய்தனர், சிலர் வேறு தேதிக்கு தங்களது பயணத்தை தள்ளி வைத்தனர்.
2. ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?
திருச்சி - ஷார்ஜா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அந்த விமான சேவையை அளிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விளக்கம் அளித்தது.
"திருச்சி - ஷார்ஜா விமானம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிவோம். விமானச் சிப்பந்திகளால் எந்தவொரு நெருக்கடி நிலையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
"தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டவுடன், அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக வானில் குறிப்பிட்ட பரப்பில் பலமுறை விமானம் வட்டமடித்தது. அவசரமாகத் தரையிறங்க வசதியாக, விமான நிலைய ஓடுபாதையின் நீளத்தைக் கருத்தில் கொண்டு விமானத்தின் எரிபொருளையும், எடையையும் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்," என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டது.
3. ஹைட்ராலிக் அமைப்பு என்றால் என்ன?
விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பு குறித்து, போயிங் 737 ரக முன்னாள் விமானி பயிற்சியாளரும் (instructor pilot ) விமான பாதுகாப்பு ஆலோசகருமான மோகன் ரங்கநாதன் பிபிசி தமிழிடம் பேசினார்.
“ஒரு விமானத்தில் இரண்டு ஹைட்ராலிக் அமைப்புகள் இருக்கும். போயிங் 737 விமானத்தில் ஒவ்வொன்றிலும் இந்த ஹைட்ராலிக் அமைப்புகள் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், ஹைட்ராலிக் அமைப்பில் பிரச்னை ஏற்படும்போது அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற விமான பாகங்களிலும் பிரச்னை ஏற்படும். இதனால், விமானத்தின் இயக்கத்தில் சில தடைகள் ஏற்படலாம்,” என்கிறார், மோகன் ரங்கநாதன்.

பட மூலாதாரம், Getty Images
விமானத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்பாக ஹைட்ராலிக் அமைப்பு உள்ளது. குறிப்பாக, லேண்டிங் கியரை நீட்டிக்கவும் மீண்டும் அதனை பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கும் ஹைட்ராலிக் அமைப்பு துணைபுரிகிறது. விமானத்தை மெதுவாகத் தரையிறக்குவதில் இந்த அமைப்பு உதவிகரமாக உள்ளது. விமானத்தின் சக்கரம் தரையில் நிறுத்தப்படுவதற்காக உதவும் 'வீல் பிரேக்', உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளில் ஹைட்ராலிக் அமைப்பு பங்கு வகிக்கிறது.
4. ஹைட்ராலிக் அமைப்பில் என்ன பிரச்னை ஏற்பட்டது?
“இந்தக் குறிப்பிட்ட விமானம் புறப்பட்ட பின்னர், எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அதன் பின்னர், விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பு ‘ஏ’யில் செயலிழப்பு தொடர்பான எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. சிஸ்டம் ‘ஏ’யில் கோளாறு ஏற்பட்டால், ‘லேண்டிங் கியரை’ நீட்டிக்க வேண்டும். அதனை நாம்தான் (manually) செய்ய வேண்டும், தானாக நடக்காது. இந்த விமானத்தில் ஹைட்ராலிக் அமைப்பின் வால்வில் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லவில்லை,” என்றார், பிபிசியிடம் பேசிய மோகன் ரங்கநாதன்.
5. சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி ராம், ‘‘விமானம் ‘டேக் ஆஃப்’ ஆக ஆரம்பித்ததும் முதலில் நடப்பது, அதன் சக்கரங்கள் உள்ளே செல்வதுதான். வெறும் 100 அடி உயரத்தில் பறக்கும் போதே சக்கரங்கள் உள்ளே போவதற்கான தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் துவக்கி விடுவோம். இது சில நிமிடங்களில் நடந்து விடும். அதற்கு மேலும் சக்கரங்கள் உள்ளே செல்லாதபட்சத்தில் விமானத்தை இயக்காமல் கீழே மீண்டும் இறக்கி விட வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், "விமானம் வானில் பறக்கையில் அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் விமானம் சீராக பறப்பதில் சிக்கல் ஏற்படும். காற்றின் எதிர்ப்பு சக்தி காரணமாக, விமானம் இழுக்கப்படுவதால் விமானம் தொடர்ந்து பறக்க அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால், விமானம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவே எரிபொருள் தீரும் நிலை நேரிடும்," என்றார்.
"இந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டியே, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கச் செய்யப்படும். இதுவே, சென்னை - மதுரை, சென்னை - கோவை போன்ற குறுகிய தூர விமானம் என்றால் பெரியளவில் பிரச்னை இன்றி விமானத்தை சேருமிடம் நோக்கி இயக்கிவிடலாம். ஆனால், திருச்சி - ஷார்ஜா போன்ற தொலைதூர விமானங்களில் அது சாத்தியமில்லை என்பதால் ஆபத்தை தவிர்க்க வேண்டிய இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.
6. விமானம் வானிலேயே வட்டமடித்தது ஏன்?
“ஒரு விமானம் தரையிறங்கும் போது அது ஒரு குறிப்பிட்ட எடையில் இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட விமானத்தின் எடை, தரையிறங்கும்போது இருக்க வேண்டிய எடையைவிட அதிகமாக இருந்ததால், அதிலுள்ள எரிபொருளை எரிக்க வேண்டும். இதனால், அதே இடத்தில் விமானத்தை வட்டமடிக்க நேரிட்டுள்ளது. இதனால், விமானத்தின் எடை தரையிறங்கும் போது இருக்க வேண்டிய எடைக்கு வரும்,” என விவரிக்கிறார், முன்னாள் விமானி மோகன் ரங்கநாதன்.

பட மூலாதாரம், https://www.flightaware.com
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் விவரித்த முன்னாள் விமானப்படை அதிகாரி ராம், "ஷார்ஜாவுக்கு திருச்சியிலிருந்து 1500 ‘நாட்டிக்கல் மைல்’ (2800 கி.மீ.,) இருக்கும் என்பதால், முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அதனால் பெருமளவில் எரிபொருளைத் தீர்த்தபின்பே, விமானத்தை இறக்குவதற்கு முயற்சி செய்வார்கள்.’’ என்று கூறினார்.
7. விமானிகளுக்கு ஏற்படும் சவால்கள் என்ன?
விமானத்தில் ஏற்பட்டக் கோளாறைக் கண்டறிந்து, பயணிகளைப் பாதுகாப்புடன் தரையிறக்கியதற்காக அந்த விமானத்தின் விமானிகள் இக்ரோம் ரிஃப்தலி மற்றும் மைத்ரேயி இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவர்களது செயல்பாடு குறித்துப் பேசிய மோகன் ரங்கநாதன், “விமானத்தில் ஒரு ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்டுள்ள செயலிழப்புடன் விமானத்தை தரையிறக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், இந்த விஷயத்தில் எந்த அவசர எச்சரிக்கையும் பயணிகளுக்கு விடுக்கப்படவில்லை. ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக, புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரையிறங்குவதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த தொழில்நுட்ப பிரச்னை அவ்வளவு பெரிதல்ல எனக்கூறிய அவர், “இது தவறுதான். ஆனால், ‘மே டே’ (விமானத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய உடனடி நிகழ்வு ஏற்படலாம் என்பதற்கான எச்சரிக்கை அழைப்பு) அழைப்பு விடுக்கப்பட்டால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட வேண்டும்,” என்றார்.
இந்தச் செயலிழப்பு குறித்து விமானிகளுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டிருக்கும் என்பதால், இத்தகைய சூழலில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை விமானிகள் எடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.
8. ‘பெல்லி லேண்டிங்’ முறையில் விமானம் தரையிறக்கப்பட்டதா?
இத்தகைய சூழல்களில் ‘பெல்லி லேண்டிங்’ எனும் முறையில் விமானம் தரையிறக்கப்படும். அதாவது, விமானத்தின் அடிப்பகுதி அல்லது உடற் பகுதியினை முதன்மை தரையிறக்கும் சாதனமாகப் பயன்படுத்தும் போது லேண்டிங் கியர் முழுமையாக நீட்டிக்கப்படாமலேயே விமானம் தரையிறக்கப்படும்.
ஆனால், திருச்சி சம்பவத்தில் ‘பெல்லி லேண்டிங்’ முறைப்படி தரையிறக்கப்படவில்லை என்கிறார், மோகன் ரங்கநாதன். “இது ‘பெல்லி லேண்டிங்’ அல்ல. லேண்டிங் கியரை நீட்டிக்க முடியாமல் போகும் போதுதான் ‘பெல்லி லேண்டிங்’ முறையில் விமானம் தரையிறக்கப்படும்," என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












