வடசென்னை என்றாலே வன்முறையா? போலி பிம்பத்தை உடைக்கப் போராடும் இளைஞர்கள்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

’ஐ லவ் ஃபுட்பால், நோ பிரேக் அப்’. இது 2022ஆம் ஆண்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள். 2022, நவம்பர் மாதம் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருடைய காலின் ஜவ்வு விலகி அந்தக் காலையே அகற்றும் நிலை ஏற்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சையின்போது, "மருத்துவர்களின் கவனக் குறைவால்” காலில் கட்டு இறுக்கமாகப் போடப்பட்ட நிலையில் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் பிரியா.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியாவின் மரணம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கால்பந்து விளையாட்டுக்காக அறியப்படும் வட சென்னையில் இளம் வீராங்கனையின் மரணம் பலரது மனதையும் தாக்கியது.

அவரது பதக்கங்கள், கோப்பைகள், புகைப்படத்தில் உறைந்திருக்கும் பிரியாவின் முகம், நோட்டுப் புத்தகங்கள், உறவினர்களின் அழுகை என பிரியாவின் உடல் புதைக்கப்படுவது வரை எல்லாவற்றையும் தன் புகைப்படங்கள் வாயிலாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார், 20 வயதான ரசியா பானு. இவர் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர் மட்டுமல்ல, வட சென்னையைச் சேர்ந்த இமான், நவீன், நந்தினி, திரிஷா, விக்னேஷ்வரி, ரசியா, வினோதினி, சக்திவேல் என எட்டு இளைஞர்கள், வட சென்னை குறித்த பொதுவான பிம்பங்களை மாற்றும் விதத்தில் அம்மக்களின் வாழ்வியலை புகைப்படங்களாக காட்சிப்படுத்தியுள்ளனர். இவர்களுள் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.

அவர்களுக்குக் கடந்த ஒராண்டுக்கும் மேலாக புகைப்பட கலைஞர் எம். பழனிக்குமார் பயிற்சி அளித்து வந்தார். தமிழ்நாட்டில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்களைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருவதன் மூலம் அறியப்படுபவர் பழனிக்குமார்.

வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலை மூலமாக வட சென்னையைச் சேர்ந்த இளம் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாயிலாக வட சென்னை வாழ்வியலை சொல்வதுதான் இந்தப் புகைப்படங்களின் நோக்கம் என்கிறார் பழனிக்குமார்.

”வட சென்னையைச் சேர்ந்தவர்களே அவர்களின் கதைகளை சொல்லும்போது ஒரு மாற்றம் உருவாகும். விளிம்புநிலை மக்கள் மீதான பார்வை மாற வேண்டும் என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் நோக்கம். இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு என்ன தேவை என்பது நமக்குப் புரியும்,” என்கிறார் பழனிக்குமார்.

எட்டு பேரின் புகைப்படங்கள் அனைத்தும் ’எங்கள் தெருக்கள், எங்கள் கதைகள்’ என்னும் பெயரில் இன்றும் நாளையும் (ஜன. 21, 22) அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புகைப்படக் கண்காட்சியை ‘வியாசை தோழர்கள்’ என்னும் அமைப்பு நடத்துகிறது. ஓர் அறைக்குள் அந்த புகைப்படங்கள் மாட்டப்படாமல் பாடசாலை வளாகத்திலும் மக்கள் வசிக்கும் தெருக்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தெருவை கடக்கும் யாரும் அந்தப் புகைப்படங்களை கவனிக்காமல் செல்ல முடியாது.

கண்காட்சியில், புகைப்படங்கள் எடுத்தவர்களே ஏன் அதை புகைப்படமாக எடுத்தோம் என்பதை மக்களுக்கு விவரிக்கின்றனர்.

ரசியா, தான் எடுத்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் புகைப்படங்கள் குறித்து மக்களுக்கு விவரித்தார்.

“நன்றாக கால்பந்து விளையாடுவார் பிரியா, நன்றாக பரதநாட்டியமும் ஆடுவார். இரண்டுக்கும் ஆணிவேரே கால்தான், ஆனால் அதுவே அவருக்கு மருத்துவர்களின் ‘கவனக் குறைவால்’ போய்விட்டது,” என்றார் ரசியா.

அந்தப் புகைப்படங்களை எடுத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் ரசியா. ”எங்கள் பகுதியில் இம்மாதிரி ஏதேனும் பிரச்னை நடந்தால் நாங்கள் நேரடியாகச் சென்று பார்ப்போம். புகைப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நேரம் அது. அதனால் தயக்கம் இருந்தது. எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து எடுத்தேன். ஏனெனில், அவர் என் தங்கை போன்றவர்,” என்கிறார் ரசியா.

தான் புகைப்படங்கள் எடுக்கும்போது மதுபோதையில் இருந்தவர்கள் தன்னிடம் செல்போன் எண் கேட்டதாகவும் ‘என்னையும் போட்டோ எடு’ என்று கேட்டதாகவும் கூறுகிறார் ரசியா.

”பிரியா இறந்தபோது நான் சுடுகாடு வரை சென்றது ஆரம்பத்தில் அம்மாவுக்குத் தெரியாது. பிரியாவை புதைக்கும் வரை சுடுகாட்டில் இருந்தேன். மற்ற சமாதிகளில் ஏறி நின்று புகைப்படம் எடுத்தேன். அப்போது அங்கிருந்த சிலர் என்னைப் பயமுறுத்தினர். இருந்தாலும் புகைப்படங்கள் எடுத்தேன். ஏனெனில், அதுதான் என்னுடைய கருவி,” என்கிறார் ரசியா.

அதேபோன்று, 11ஆம் வகுப்பு படித்து வரும் விக்னேஷ்வரி தன்னுடைய தாய், சகோதரி என தன் குடும்பத்தையே புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார்.

அவருடைய தாய் கோமதி, தன்னுடைய 10 வயதில் இருந்தே மர ஆணி அடிக்கும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தொழிலை ‘கட்டை அடிப்பது’ என அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

“ஆயிரம் குச்சிகள் சேர்ந்ததுதான் ஒரு கிலோ. காலின் கட்டை விரலில் வைத்துதான் மர ஆணியை அடிக்க வேண்டும். அதனால் அம்மாவுக்குக் கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இப்போது கருப்பையையும் எடுத்துவிட்டதால் இன்னும் சிரமம். எங்களுக்கு எல்லாமே அம்மாதான்,” எனக் கூறுகிறார் விக்னேஷ்வரி.

இந்த வேலையில் காலை 8 மணிக்கு அமர்ந்தால் மாலை வரை செய்ய வேண்டும். இந்தத் தொழிலில் ஒருநாளுக்கு 200 ரூபாய் வருமானம் வரும் என்கின்றனர். காலை முதலே தெருக்களில் வீடுகளின் வாசலில் அமர்ந்து பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

“வடசென்னை என்றாலே ’வெட்டு, குத்து’ என்று சொல்வார்கள். எங்களின் வட சென்னை மக்கள் அப்படியல்ல, இப்படி உழைக்கும் மக்கள் இங்குள்ளனர் என்பதைக் காண்பிக்கத்தான் நான் இவர்களைப் புகைப்படம் எடுத்தேன்,” என்கிறார் விக்னேஷ்வரி.

”இந்த அளவுக்கு புகைப்படங்கள் உணர்வுப்பூர்வமாக வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இயல்பாகக் கடந்துபோகும் விஷயத்தில் என்ன இருக்கிறது என அவர்களுக்குத் தெரியாது. புகைப்படமாக வரும்போதுதான் வேறு மாதிரியான உணர்வுகள் இருக்கும்,” என்கிறார் பழனிக்குமார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)