You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோவில் கதவுகளை செய்யும் தமிழர்கள் - முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி செய்வது எப்படி?
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகின்றன.
அதேநேரம், கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்து சுமார் 2கி.மீ தொலைவில் ஒரு தற்காலிக தச்சுப்பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசப்படும் அந்த மாநிலத்தின் ஒரு சிறு நகரத்தில் உட்புறமாக அமைந்திருக்கும் இந்தப் பட்டறையில் நுழைந்தால் தமிழ் பேச்சு காதில் விழுகிறது.
அங்கிருக்கும் சுமார் 20 பணியாளர்கள் மரப் பலகைகளை அறுப்பது, அதைச் சமனாக்குவது, அவற்றில் வரைபடங்களை வரைந்து செதுக்கிச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கதவுகளாக்குவது என பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் சிற்பக் கலைக்குப் பெயர்போன தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு மரத்தில் கலை வேலைப்பாடுகள் செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். அயோத்தி ராமர் கோவிலுக்கான கதவுகள் செய்யும் பணியில் இவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மர வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தை நடத்துபவர் ரமேஷ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் மரத்தில் கலை வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஜனவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் கோவில் திறப்புக்காகப் பணிகளை விரைந்து முடிக்கும் பரபரப்புக்கு மத்தியில், அயோத்தி கோவிலுக்குக் கதவுகள் செய்யும் பணி தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதையும், தனது கலை பின்புலத்தைப் பற்றியும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ரமேஷ்.
ராமர் கோவில் கதவு செய்யும் பணி தமிழர்களுக்கு கிடைத்தது எப்படி?
மாமல்லபுரம் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் அதே ஊரில் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கூறுகிறார் ரமேஷ். கடந்த 2000ஆம் ஆண்டு கர்நாடகாவின் தலைக்காவேரி என்ற இடத்தில் இருக்கும் கோவிலின் மர வேலைப்பாடுகளைப் புணரமைக்கும் பணி கிடைத்ததாகவும், அதிலிருந்துதான் கோவிலுக்கான அலங்கார, சிற்ப மர வேலைப்பாடுகள் செய்யும் பணி துவங்கியதாகவும் கூறுகிறார்.
காலப்போக்கில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பல கோவில்களுக்கான மரவேலைப்பாடுகள், தேர்கள் போன்றவற்றைச் செய்ததன் மூலம் அதில் தனது நிபுணத்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டதாகக் கூறுகிறார். சிறிதாகத் துவங்கிய தன் நிறுவனத்தில் தற்போது 75 பேர் வேலை செய்வதாகத் தெரிவித்தார் ரமேஷ்.
இந்நிலையில் ராமர் கோவில் கட்டப்படும் செய்தியறிந்து, அப்பணியை முன்னெடுக்கும் ‘ராம ஜென்மபூம் தீர்த்தக்ஷேத்திர’ அறக்கட்டளையினரிடம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேரில் சென்று தங்கள் பணியைப் பற்றி எடுத்துச் சொல்லி, ராமர் கோவிலுக்கான கதவுகள் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னதாகக் கூறுகிறார்.
“அவர்கள் முதலில் ராமர் கோவிலின் திட்டப் படத்தைக் கொடுத்து அதன் மினியேச்சர் (சிறிய வடிவம்) செய்து தரமுடியுமா என்று கேட்டார்கள். நாங்கள் 160 அடி உயரமுள்ள அக்கோவிலை 8 அடி மாதிரியாக மரத்தில் உருவாக்கிக் கொடுத்தோம். அந்த வேலைப்பாடுகளைப் பார்த்தபின் கதவுகள் செய்யும் பணியை எங்களுக்குக் கொடுத்தனர்,” என்கிறார்.
இந்தக் கோவில் பணி கிடைப்பதற்கு, ஹைதராபாதை சேர்ந்த தனது நண்பர், மர வியாபாரியான சரத் பாபுவும் தனக்கு உதவியாக இருந்ததாகக் கூறுகிறார்.
முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி கதவு செய்வது எப்படி?
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த வேலைகள் நடந்து வருகிறது. இது, கோவில் நுழைவாயிலில் இருந்து கருவறை வரை பொருத்தப்பட, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 48 கதவுகளை 7 மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய மிகச் சவாலான பணி என்கிறார் ரமேஷ்.
“நாங்கள் 2023ஆம் ஆண்டு மே மாதம், அயோத்திக்கு முதன்முதலில் வந்து பட்டறை அமைத்தோம். அப்போது 405 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருந்தது. இப்போது ஜனவரி மாதம் வெறும் 14 டிகிரிதான். காலநிலையின் இந்த மிகப்பெரிய வேறுபாட்டிற்கு இடையே இந்தப் பணிகளைச் செய்து வருகிறோம்,” என்கிறார்.
மகாராஷ்டிராவின் பாலசார் என்னும் இடத்தில் இருந்து வரும் தேக்கு மரத்தால் செய்யப்படும் இந்தக் கதவுகள் ஒவ்வொன்றும் சுமார் 800 கிலோ எடை கொண்டவை.
கோவிலின் பிரதான கட்டட வடிவமைப்பாளர் ஆஷிஷ் சோம்புரா தருகின்ற 2D வரைபடங்களின் அடிப்படையில், தங்கள் சிற்பக்கலைப் பயிற்சியின் மூலம் முப்பரிமாண வடிவங்களைச் செதுக்கி உருவாக்குவதாகக் கூறுகிறார்.
தங்கள் பணியாளர்கள் அயோத்திக்கு வந்த புதிதில் வெப்பநிலை, மொழி ஆகியவற்றால் சற்று சிரமப்பட்டாலும், போகப் போக அவர்கள் அந்த இடத்திற்குப் பழக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.
‘முதலில் தச்சு வேலையை கௌரவக் குறைவாக நினைத்தோம்’
இந்தப் பணியாளர்களில் ஒருவர் 46 வயதான சிவகுமார். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர், தாங்கள் கடந்த ஆண்டு முதன்முதலில் அயோத்திக்கு வேலை செய்ய வந்தபோது அங்கிருந்த மக்கள் தங்களிடம் அவ்வளவாகக் கலந்து பழகவில்லை என்றார்.
“ஆனால் நாங்கள் அனைவரும் கன்னியாகுமரியிலிருந்து வருவதை அறிந்தபின் எங்களிடம் அன்பாகப் பழகத் தொடங்கினர். கன்னியாகுமரியை அவர்கள் இந்தியாவின் துவக்கப்புள்ளியாகப் பார்க்கின்றனர்,” என்கிறார் சிவகுமார்.
மேலும் பேசிய அவர், தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கதவுகள் செய்யும் இந்த வேலையைச் செய்து வருவதாகவும், கால நெருக்கடியால் சில நேரம் இரவும்கூட வேலை செய்து பணியை காலக்கெடுவுக்குள் முடித்து வருவதாகவும் கூறுகிறார்.
“முதலில் எல்லாம், நாங்கள் செய்யும் வேலை வெறும் தச்சு வேலை தானே என்று தரக்குறைவாக நினைத்தோம். ஆனால் இப்போது இந்தப் பணியில் இருக்கும் எங்களை அனைவரும் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். எங்களுக்குப் பெருமையாக உள்ளது,” என்கிறார்.
மாட்டுவண்டிகள் செய்வதிலிருந்து கோவில் கலைக்கு...
சிற்பக்கலையின் மீது தனக்கு ஈடுபாடு வந்ததைப் பற்றிப் பேசிய ரமேஷ், தனது குடும்பத்தினர் வழிவழியாக மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள் ஆகியவற்றுக்கான அச்சுகள், சக்கரங்கள் ஆகியவற்றைச் செய்து வந்ததாகக் கூறுகிறார்.
“அந்தச் சக்கரங்கள், அச்சுகள் ஆகியவற்றில்கூட அவர்கள் சிறிய அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர். சிறுவயதில் அதையெல்லாம் பார்த்துதான் வளர்ந்தேன்,” என்கிறார்.
சிற்பக்கலை, பாரம்பரியக் கட்டுமானம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்கும் ரமேஷ், தனக்குக் கீழ் வேலை செய்யும் இளம் பணியாளர்களுக்கு இந்தக் கலையின் நுணுக்கங்களைத் தாமே கற்றுக் கொடுத்து தயார் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
தற்போது அவர்கள் செய்து கொடுக்கும் மரக் கதவுகளின்மீது தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகள் பொருத்தப்பட்டு அது கட்டப்பட்டு வரும் கோவிலில் பொருத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வரக்கூடிய இந்தக் கோவிலின் நுழைவுக் கதவுகளைச் செய்து கொடுத்தது தமிழர்கள்தான் என்பதில் தனக்குப் பெருமை, என்கிறார் ரமேஷ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)