You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெரி கிறிஸ்துமஸ்: விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் ஜோடி தமிழ் ரசிகர்களை வசீகரித்ததா?
விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகிருக்கும் படம் மெரி கிறுஸ்துமஸ். நாடு முழுவதும் இப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் கடந்த வெள்ளிகிழமை வெளியானது.
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், கடந்த 2018இல் ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ‘அந்தாதூண்’ படத்தை இயக்கினார். அப்படம், அந்த ஆண்டு வெளியான படங்களில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் எப்படி இருக்கிறது?
படம் எப்படி?
கிறுஸ்துமஸ் தினத்தின் இரவு, படத்தின் கதாநாயகனான ஆல்பர்ட் (விஜய் சேதுபதி), மரியாவை(கத்ரீனா கைஃப்) அவரது 6 வயJ குழந்தையுடன் சந்திக்கிறார். அங்கு ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, தங்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட பின் அன்று இரவு மரியாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு நடனமாடுகின்றனர். பின், மீண்டும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது, மரியாவின் கணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு பின் இருவரும் என்ன செய்கின்றனர்? மரியாவின் கணவரை கொன்றது யார்? என்ற கேள்விக்கான விடையே மீதிப்படம். 1960 ஆம் ஆண்டில், ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதிய ‘எ பேர்ட் இன் எ கேஜ்’ பிரெஞ்சு நாவலைத் தழுவியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் குறித்து விமர்சித்துள்ள ஹிந்து தமிழ் திசை நாளிதழ், தமிழ் படத்தில் வசனங்கள் மிக அந்நியமாக இருப்பதாக எழுதியுள்ளது.
“ஹிந்தியில் வசனங்கள் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை தமிழ்ப்படுத்தும்போது தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றபடி மாற்றுவதே சரியாக இருக்கும். ஆனால், ஒரு சில வசனங்களைத் தவிர, பெரும்பாலானவை ஹிந்தியிலிருந்து அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட்டில் போகிற போக்கில் மொழிபெயர்த்தது போல் இருக்கிறது.தமிழுக்காக சில காட்சிகளை பிரத்யேகமாக எடுத்தும் கூட ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வே படம் முழுக்க இருந்தது,” என ஹிந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
படத்தில் கத்ரீனாவின் நடிப்பு எப்படி இருக்கு?
படத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், பிரித்தமின் பாடல்களும், பி ஜார்ஜின் பின்னணி இசையும், நீலகண்டனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாக ஹிந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
இந்த படம் தொடர்பாக விமர்சனம் வெளியிட்டுள்ள தினமணி நாளிதழ், ஒரு நாவலுக்குரிய காட்சி அமைப்புகளுடன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
வசனம் குறித்து எழுதியுள்ள தினமணி நாளிதழ், “க்ளோஸ் அப் காட்சிகளில் தமிழில் வசனம் பேசியிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்,” எனக் கூறியுள்ளது.
மேலும், படத்தில் கரடி கதை சொல்லும் ராதிகாவின் இடங்கள் ரசிக்க வைத்ததாகவும், குழந்தையாக நடித்திருந்த சிறுமியிடம் கிளைமேக்ஸ் காட்சிகளின் சூட்சமத்தை வைத்திருந்தது பாராட்டப்பட்ட வேண்டிய காட்சி என்றும் தினமணி எழுதியுள்ளது.
ஒளிப்பதிவாளர் குறித்து எழுதியுள்ள தினமணி, “ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு விண்டேஜ் பாணியிலான இசையால் கவர்த்திருக்கிறார் பின்னணி இசையமைப்பாளர் டேனியல் ஜார்ஜ். பாடல்களுக்கு இசையமைத்துள்ள ப்ரீத்தமும் நியாயம் செய்திருக்கிறார்,” என கூறியுள்ளது.
இந்தப்படம் குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ், இதுவரை திரையில் பார்த்திடாத தம்பதிகளாக விஜய் சேதுபதியும் காத்ரினாவும் இருக்கிறார்கள் என எழுதியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், காத்ரினாவை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் என விமர்சித்துள்ளது.
“அனைவருக்கும் தெரிந்ததைப் போல, காத்ரினா தன்னைப் பற்றிய உணர்வுகளுடன் மிகவும் கவனமாக நடிக்கக் கூடியவர். அதனால், அவருக்கு கேமரா முன் சில மனத்தடைகள் இருக்கும். பல நேரங்களில் அதனை உடைக்க அவரே முயன்றிருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் எந்த சிரமமுமின்றி, மிக நேர்த்தியாக அவரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்,” என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.
விஜய் சேதுபதி எந்த மெனக்கெடலும் இல்லாமல் நடித்திருந்தாலும், அதுவே கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது என்றும், இயல்பான நடிப்பில், மிகவும் வசீகரமான நடனத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)