You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போகி பண்டிகையால் நிலைகுலைந்த சென்னை: காற்று மாசுபாடு ஏற்படுத்திய பாதிப்புகள்
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தகவலின்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டின் சராசரி அளவு 378 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக சென்னை ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 770 ஆகவும், அரும்பாக்கத்தில் 501 ஆகவும் இருந்தது.
காற்று மாசு காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமானங்கள் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது.
பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெரியாமல் சிரமப்பட்டனர்.
சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பாக சென்னையில் உள்ள ஒன்பது காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 8 மணிக்கு பெருங்குடியில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 289 ஆக இருந்தது.
அதேபோல, மணலி பகுதியில் காற்று மாசுக் குறியீடு 272 ஆகவும், எண்ணூர் காந்தி நகர் பகுதியில் 232 ஆகவும், அரும்பாக்கத்தில் 216 ஆகவும், ராயபுரத்தில் 207 ஆகவும், கொடுங்கையூரில் 156 ஆகவும் இருந்தது.
ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மிகக் குறைந்த இடங்களிலேயே காற்றுமாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டடங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணித்தால்தான் துல்லியமாக காற்று மாசுபாட்டைக் கண்டறிய முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
காற்று மாசைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனமான ஏ.க்யூ.ஐ(AQI) தரவுகளின்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக காற்றுத்தரக் குறியீடு 770 ஆக இருந்தது. மேலும், பெருங்குடி பகுதியில் 609, பொத்தேரியில் 534, ஆலந்தூர் பகுதியில் 511, அரும்பாக்கத்தில் 501 என காற்றின் மாசுபாட்டு அளவு பதிவாகியுள்ளது.
காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில் அவற்றின் தன்மையை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி,
- காற்றுத் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம்
- 51-100 வரை இருந்தால், அது திருப்திகரமானது
- 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக உள்ளது
- அதுவே 201-300 வரை இருந்தால், அது மிக மோசமான காற்றுத்தரத்தை குறிக்கும்.
- காற்றின் தரம் 301-400 இருந்தால், காற்று மாசு மிகக் கடுமையாக மோசமாக உள்ளதாகக் குறிக்கும்
- 401-500 வரை இருந்தால், காற்று மாசு அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும்
கடந்த ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்த காற்று மாசு
கடந்த 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு போகி பண்டிகை அன்று சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்ப்பட்டுள்ள எட்டு காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களிலும், காற்றுத் தரக் குறியீடு 100இல் இருந்து 200க்குள் தான் பாதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆலந்தூர் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 197 ஆக பதிவாகியிருந்தது. தனியார் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள்படி, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத் தரக் குறியீடு 277 ஆகவும், அண்ணா நகரில் 135 ஆகவும் பதிவாகியிருந்தது.
ஆனால் இதுவே 2022இல், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுமே காற்று மாசுத் தரக்குறியீடு 50 முதல் 100க்குள் தான் இருந்துள்ளது. அதில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரம் பகுதியில் 91 ஆகவும் பதிவாகியிருந்தது.
காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டும் சென்னை விமான நிலையத்தில் 60 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்த ஆண்டு எத்தனை விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின, தாமதமாகப் புறப்பட்டன என்ற தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.
பண்ணாட்டு விமானங்களான, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் எந்த விமானங்களும் புறப்படாமல், அனைத்து விமானங்களும் தாமதமாக காலை 9 மணிக்கு மேல் கிளம்பின.
காற்று மாசு எப்போது குறையும்?
பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்துள்ளதால், இது மாசுத் துகள் அதிக நேரம் காற்றில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன்.
"இந்த குளிர்ந்த தன்மை விலகி, வெயில் வரத் தொடங்கும்போது, காற்று மாசு குறையும். ஆனால், மக்கள் மீண்டும் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினால், காற்று மேலும் மாசடையும்,” என்றார் அவர்.
மேலும், போகி பண்டிகைகளுக்கு முன்பே மக்கள் எரிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், அதை மீறி பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் போகி கொண்டாடுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், ஒருவர் பழையப் பொருட்களை எரிப்பதால், அது அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோருகிறோம்,” என்றார்.
போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசு எதிர்பார்க்காத ஒன்றுதான் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இன்று காலை முதல் பதிவான காற்றுத் தரக் குறியீட்டை வைத்துப் பார்த்தாலே, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது தெரிகிறது.
ஆனால், இதுவரை பதிவானதிலேயே இது அதிகமான அளவா என்பதை முழுமையான தரவுகளை ஆராய்ந்துதான் சொல்ல முடியும்,” என்றார்.
போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் கேட்டோம்.
ஆனால், இதுபோல் தனிநபர்கள் காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித விதிகளும் இல்லையெனத் தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டால் என்ன உடல் உபாதைகள் ஏற்படும்?
காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள சூழலில் முன்னதாகவே சுவாசக் கோளாறு உள்ளவர்களும், இதய நோய் பாதிப்பில் உள்ளவர்களும் கூடுமானவரை வெளியே செல்வதைட்ப தவிர்க்க வேண்டும் என இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“பெரும்பாலும் கரும்புகையாக இருக்கும் மாசுபட்ட காற்றில் நுண் துகள்களின் அளவு அதிகமாக இருக்கும். அவை நாம் சுவாசிக்கும் மூக்கின் வழியாக உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிகச் சிறிய அளவிலான நுண் துகள்கள் எளிமையாக நாம் சுவாசிக்கும் போதே உள்ளே சென்றுவிடும்.
நீண்ட நேரம் இப்படியான காற்று மாசுபட்டுள்ள சூழலில் இருந்தால், மூச்சுத் திணறல் மற்றும் நீண்டகால சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்,” என்றார்.
அதேபோல குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் காற்று மாசு பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் துணி உள்ளிட்டவையை எரித்ததால் ஏற்பட்டிருக்கும். இந்தப் புகையால், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் உள்ளது. அதேபோல, அவர்களின் தோல்கள் மிகவும் இலகுவாக இருப்பதால், தோல் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)