You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
12 வயதிலேயே ஆபாசப் படம் பார்க்கும் 2கே கிட்ஸ் - தடுப்பது எப்படி? என ஐகோர்ட் யோசனை
ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை நேரில் ஆஜராகச் சொல்லி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது ஆபாசப் படம் பார்ப்பதை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பார்க்கவில்லை என்றார். மேலும், ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அந்த இளைஞரை மனநல ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்திய நீதிபதி, அவர் ஆபாசப்பட அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம்
இதைத் தொடர்ந்து, ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல அதை மற்றவர்களுக்குப் பகிர்வதே குற்றம் எனக் கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இப்போதைய பதின்பருவ இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் 2கே தலைமுறையினர் அதைப் பார்க்கப் பழகி விடுவதாகக் கூறிய நீதிபதி, சமீபத்திய தரவுகள் 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாகவே பத்து சிறுவர்களில் 9 பேர் ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பாகவே 10 சிறுமிகளில் 6 பேர் ஆபாசப் படம் பார்க்கப் பழகி விடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
"12 வயதிலேயே ஆபாசப் படம் பார்க்கும் 2கே கிட்ஸ்"
“ஓர் ஆண் ஆபாசப் படம் பார்க்க முதலில் பழகுவது தனது 12 வயதில்தான். 12 வயது முதல் 17 வயது வரையுள்ள பதின்பருவ சிறுவர்கள்தான் ஆபாசப்படங்களுக்கு அடிமையாகும் அபாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். சுமார் 71% பதின்பருவத்தினர் தங்கள் பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையிலான ஆன்லைன் செயல்களைச் செய்துவிட்டு மறைக்கிறார்கள்,” என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
அதிகமாகி வரும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு, 2கே கிட்ஸ் மத்தியில் இந்தப் பழக்கத்தை அதிகரித்துள்ளதாகவும் இதைப் பற்றி சமூகம் அவர்களைக் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆபாசப்பட அடிமைத்தனத்தில் இருந்து விடுபட உதவ வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
“இதுகுறித்த கற்பித்தல் பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும். ஏனெனில், அங்கிருந்தே ஆபாசப் படம் போன்றவற்றுடனான அவர்களது அறிமுகம் தொடங்கிவிடுகிறது,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம், மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)