இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அமெரிக்காவால் சாத்தியமானது எப்படி? அது நீடிக்குமா?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், ANI/Getty Images

படக்குறிப்பு, சண்டை நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளுமே அதை உறுதி செய்துள்ளன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், "அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில், "அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியா தொடர்ச்சியாக தயங்காமல் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இனியும் தொடரும்." என பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், தங்கள் நாடு சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் முயற்சிகளின் வாயிலாக இந்த சண்டை நிறுத்தம் சாத்தியமானதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

இஷாக் தார் கூறுகையில், "முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கான ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இவற்றில், துருக்கி, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அடங்குவர்." என்றார். பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சரும் முக்கிய பங்கை வகித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சண்டை நிறுத்த அறிவிப்புக்கு சில மணிநேரத்துக்கு முன்பு கூட இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை நிகழ்த்தின; இரு நாடுகளிடமுமே அணு ஆயுதங்கள் உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் மற்றொரு நாட்டின் விமானப்படைத் தளங்களைத் தாக்கியதாக பரஸ்பரம் கூறின.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 6-ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்களை நடத்தியது. "துல்லியமானது, நன்கு திட்டமிடப்பட்டது" என தன் நடவடிக்கையை இந்தியா விவரித்தது.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது, இருநாடுகளும் பரஸ்பரம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தின. இருநாடுகளும் எதிர் தரப்பின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக கூறிக்கொண்டன.

இந்தியா தங்களது 3 விமானப்படைத் தளங்களுக்கு சேதம் விளைவித்ததாக, சனிக்கிழமை பாகிஸ்தான் கூறியது.

பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இந்தியாவும் உறுதி செய்தது.

காலையில் தாக்குதல், மாலையில் சண்டை நிறுத்தம்

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கராச்சியில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்

சனிக்கிழமை காலையில் இந்தியாவில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் உட்பட பல நகரங்களில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. இந்தியா மீது பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

"இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு மிக நெருக்கமாக வந்துள்ளதாக" சர்வதேச மற்றும் தெற்காசிய விவகாரங்கள் நிபுணரான மைக்கேல் குகல்மேன் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார்.

ஆனால், அனைத்துவிதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்தன. வேகமாக சூழல் மாறிவருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு நிபுணர் பிரவீன் சாஹ்னி கூறுகையில், "சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி ராணுவ தளபதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தியா இனி எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் போர் செயலாகவே கருதும் என்ற செய்தி வந்த போது, இந்த விவகாரத்தில் இந்தியா மேலும் எதையும் விரும்பவில்லை என்பது தெளிவானது." என்றார்.

சனிக்கிழமை காலையில் பாகிஸ்தானின் பதில் தாக்குதலுக்கு பிறகு குகல்மேன் எழுதுகையில், "பாகிஸ்தான் அணுசக்தி நாடாக ஆனதற்கு அடுத்த ஆண்டான 1999-ல், கார்கில் போருக்குப் பிறகு இத்தகைய சூழல் எழுந்துள்ளது. அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்த மிகப்பெரிய சோதனையாக இருக்கும். சர்வதேச மத்தியஸ்தர்கள் தற்போது துரிதமாக செயலாற்றுவார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்பு நிபுணரும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் ஆய்வு மாணவருமான ஸ்மிரிதி எஸ் பட்நாய்க் கூறுகையில், "இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல் என்ற கட்டத்தை அடைந்துள்ளன. இதற்குப் பிறகும், நிலைமை தீவிரமானால், முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்படும், ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை. இப்படியான சூழலில், இரு நாடுகளும் முழு அளவிலான போர் தங்கள் நலனுக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொண்டுள்ளன." என்றார்.

களச்சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடினார் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ

சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடிய அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனும் பேசினார்.

இருநாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

பாதுகாப்பு நிபுணரும் இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "இரு நாடுகளும் சண்டையை தொடர விரும்பவில்லை. பாகிஸ்தானுக்கு எல்லா வழிகளிலும் உதவிய அமெரிக்கா, இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்துள்ளது. மறுபுறம், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒத்த நலன்களைக் கொண்டுள்ளன. அப்படியான சூழலில், சண்டை நிறுத்தம் செயல்பாட்டில் இருப்பதில் சிக்கல் இருக்காது," என்றார்.

அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றே பிரவீன் சாஹ்னியும் நம்புகிறார்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "அமெரிக்கா தங்களுக்கு முக்கியம் என்பதாலேயே இரு நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. போரை நிறுத்தியது அமெரிக்கா தான். சண்டை நிறுத்தத்தைப் பொருத்தவரையில், அது நீடிக்கும். ஆனால், இரு நாடுகளும் மே 6-ஆம் தேதிக்கு முன்பு இருந்த அதே சூழலில் தான் தொடர்ந்து இருக்கும்." என்றார்.

"இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது, ஆனால் களச்சூழலில் எந்தவித மாற்றமும் இருக்காது. வருங்காலத்தில் இருநாடுகளிடமிருந்தும் பகைமை உணர்வுடன் கூடிய கருத்துகளை அதிகம் எதிர்பார்க்கலாம்." என்பது அவரது கணிப்பு.

சண்டை நிறுத்தம் நீடிக்குமா?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்

சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு மணிநேரங்களில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எதன் அடிப்படையில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இல்லை.

இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறிய ஸ்மிரிதி பட்நாயக், எனினும் எதன் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்தே இது இருக்கும் என கூறினார்.

பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் இதிலிருந்து பின்வாங்கினால், அவ்வாறு செய்வதற்கு இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சண்டை நிறுத்தம் ஏற்பட்டதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அதிக தகவல்கள் இல்லை. ஆனால், இரு நாடுகளும் இதிலிருந்து முன்னோக்கி செல்வது எப்படி என்பதை யோசிப்பதற்கான வாய்ப்பை இந்த சண்டை நிறுத்தம் வழங்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "மே 12-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது சூழல் இன்னும் தெளிவாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடைய கடினமான நிலைப்பாட்டில் இந்தியா சமரசம் செய்யாது. இரு நாடுகளும் ஆக்ரோஷமாக இருப்பது குறித்து சர்வதேச சமூகங்கள் கவலை கொண்டுள்ளன. இதை மேலும் நீடிப்பது தங்களுக்கு நல்லதல்ல என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தான் பதற்றத்தைக் குறைத்தால், இந்தியாவும் மேற்கொண்டு எதையும் செய்யாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது" என்றார்.

பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு நாடுகளுக்கிடையேயான பதற்றச் சூழலில் கர்னல் சோஃபியா குரேஷி, ஊடக சந்திப்புகளில் இந்திய ராணுவம் சார்பாக விளக்கினார்

சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, "பாகிஸ்தான் ராணுவம் முன்னோக்கி துருப்புகளை நிறுத்துவதாக தெரிவிக்கிறது, இது நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்திய ஆயுதப் படைகள் முழு எச்சரிக்கையுடன் உள்ளன. பாகிஸ்தானும் இதே முறையில் நடந்துகொண்டால், பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்பதை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன." என்றார்.

நிலைமையை மேலும் மோசமாக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "நிலைமையை மேலும் மோசமாக்குவது தங்கள் நோக்கம் அல்ல என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறியுள்ளார்" என்றார்.

"இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது - நாங்கள் பழிதீர்ப்போம் என இந்தியா கூறியது, அதைத்தான் தற்போது செய்துள்ளது. அதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் ராணுவம் முடிவெடுத்தது, அங்கிருந்துதான் நிலைமை மேலும் மோசமானது. மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் எதிர்வினையாற்றி இருக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது." என்று அவர் கூறினார்.

இரு நாடுகளும் விரும்புவது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் அரசியலிலும் அந்நாட்டு ராணுவம் தலையிடுகிறது

இந்த சூழலில் இருந்து மரியாதையான முறையில் வெளியேறுவது எப்படி என்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய பிரச்னை என, ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் மேலும் சண்டையிட விரும்பவில்லை என்பது இதுவரையிலான சமிக்ஞையாக உள்ளது. முழு அளவிலான போரில் ஈடுபடுவதை இரு நாடுகளும் விரும்பவில்லை. இந்த சூழலில் இருந்து 'மரியாதையான முறையில் வெளியேற' இரு நாடுகளும் விரும்புகின்றன" என்றார்.

ஸ்மிரிதி எஸ் பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் அந்த நாட்டின் அரசியலில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது. பாகிஸ்தான் பட்ஜெட்டில் அதிகளவு அதன் ராணுவத்துக்கு செலவு செய்யப்படுகிறது. அப்படியான சுழலில், ராணுவம் செயலாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் உணர்வாக உள்ளது. அப்படியான சூழலில், தாங்கள் எதிர்வினையாற்றி இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்திருக்கலாம்" என கூறினார்.

இதனிடையே, இப்படியான சூழலில் தாங்கள் மரியாதைக்குரிய முறையில் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக இரு நாடுகளும் தங்கள் மக்களுக்குக் கூறலாம்.

பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்த சூழலில் இருந்து வெளியேறுவது குறித்து கூற வேண்டுமானால், இரு நாடுகளும் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளதாக உணரலாம். இந்தியா பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தியது, அதேசமயம் இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இரு நாடுகளும் தாங்கள் என்ன சாதித்தோம் என்பதை தங்கள் நாட்டு மக்களுக்குக் கூறலாம்." என்றார்.

'நாங்கள் பழிதீர்த்தோம்'

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் சனிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் மீது எங்கிருந்து தாக்குதல்கள் நடத்தியதோ அந்த ராணுவ தளங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இந்தியாவுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம், அப்பாவி மக்களின் இறப்புக்கு பழிதீர்த்துள்ளோம்." என்றார்.

எதிர்கால சூழல் குறித்து பேசிய ஜீவன் ராஜ்புரோஹித், பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுமா என்பதுதான் முக்கியமான கேள்வி என்றார்.

ராஜ்புரோஹித் கூறுகையில், "பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெறும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது என்பது இந்தியாவின் தெளிவான நிலைப்பாடாகும்." என்றார்.

"பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறதா என்பதுதான் இப்போதிருக்கும் முக்கிய கேள்வி. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எதிர்கால உறவின் அடிப்படையாக இது இருக்கும்." என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு