'ஒரு மணிநேரத்தில் இரண்டு தாக்குதல்' - காஷ்மீரில் இருந்து வெளியேறும் தமிழர்கள் நேரில் பார்த்தது என்ன?

காஷ்மீரில் இருந்து வெளியேறும் தமிழர்கள் நேரில் பார்த்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும் மக்கள்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவும் பாகிஸ்தானும் நிலம், வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதலை நிறுத்தியுள்ளதாக, இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீரில் தங்கிப் படிக்கும் வெளிமாநில மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாக தகவல் பரவியது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியவில்லை என்ற போதும், தங்களுக்கு கிடைத்த வாய்மொழி அறிவுரைகளின் அடிப்படையில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதாக தமிழ்நாட்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் அறிவித்த பிறகு காஷ்மீரில் என்ன நிலவரம்?

காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள ''பயங்கரவாத இலக்குகள்'' மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது.

இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக, ஜம்மு, பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியதாக இந்தியா குற்றம் சுமத்தியது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது என இரு நாடுகளிடையே முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதேநேரம், காஷ்மீரில் நிலவிய பதற்றம் காரணமாக அங்கு படிக்கும் வெளிமாநில மாணவர்கள் சனிக்கிழமை காலை (மே 10) முதலே தங்களின் சொந்த மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், போலிச் செய்திகள், பொய்யான செய்திகள்,

அடுத்தடுத்து கேட்ட தாக்குதல் சத்தம்

"சனிக்கிழமை காலை சுமார் 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே தாக்குதல் நடந்த சத்தத்தைக் கேட்க முடிந்தது. சுமார் 7.20 மணிக்கு டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வந்தது. இதையெல்லாம் கவனித்த பிறகு வளாகத்தைவிட்டு வெளியேறுவது என முடிவு செய்தோம்" எனக் கூறுகிறார், சுபாஷ் குப்புசாமி.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த நன்மங்கலத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீநகரில் மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய சுபாஷ் குப்புசாமி, "போர் காரணமாக ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலை 44 மூடப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சாலை திறக்கப்பட்டது. காலையில் இருந்தே வெளிமாநில மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறியபடியே உள்ளனர்" எனக் கூறினார்.

"தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை" எனக் கூறும் சுபாஷ் குப்புசாமி, "கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சுமார் 25 வாகனங்களுக்கும் மேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நான் உள்பட அனைவரும் சொந்த பாதுகாப்பில் தான் டெல்லி சென்று கொண்டிருக்கிறோம்" என்கிறார்.

"சொந்த ஊருக்குப் போவது நல்லது என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் செல்லும் வழியில் (என்எச் 44) சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) ஆகியவற்றைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் எல்லைப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் செல்லும் வழியில் உள்ள ராம்பன் (Ramban) பகுதியில் கடந்த 10 நாட்களாகவே மழையும் நிலச்சரிவும் ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தாக்குதல் அச்சத்தால், ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும் ஒரு குடும்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும் ஒரு குடும்பம்

மாணவர்கள் அச்சப்பட்டது ஏன்?

காஷ்மீரில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி (NIT), என்.ஐ.எஃப்.டி (National institute of fashion technology), ஸ்கிம்ஸ் (Sher-i-Kashmir Institute of Medical Sciences) உள்பட பல்வேறு கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் படிப்பதாகக் கூறுகிறார், தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பேராசிரியராக பணிபுரியும் தினேஷ்குமார்.

"இவ்வளவு மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள் என்பதே தற்போது தான் தெரியவருகிறது. மருத்துவம், பொறியியல் தவிர வேளாண்மை பிரிவுகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்" என்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், தற்போது ஸ்ரீநகரில் வசித்து வருகிறார், "நான் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் விமான நிலையம் உள்ளது. இவ்வளவு நாள் ஜம்முவில் தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகரில் தாக்குதல் நடந்தவுடன் மாணவர்கள் சற்று அச்சப்பட்டனர்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"மாணவர்களில் சிலருக்கு இங்கிருந்து கிளம்புவதற்கு விருப்பம் இல்லை. ஆனால், அவர்களின் பெற்றோர் அச்சப்படுவதால் கிளம்புகின்றனர். நான் நான்கு ஆண்டுகளாக இருப்பதால் தாக்குதல் சத்தம் புதிது இல்லை. ஆனால், மாணவர்களுக்குப் புதிதாக இருந்தது" எனவும் அவர் தெரிவித்தார்.

'இயல்பு நிலைக்குத் திரும்பிய காஷ்மீர்'

ஜம்மு காஷ்மீர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பேராசிரியர் தினேஷ்குமார்

இந்தியா, பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் வந்துவிட்டதால் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக தினேஷ்குமார் தெரிவித்தார். " காலையில் இருந்தே வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறியபடியே இருந்தனர். சாலைகளில் இயல்பு நிலை நீடித்தது. சண்டை நிறுத்தம் அறிவித்த உடன் மக்கள் வழக்கம்போல வெளியில் வரத் தொடங்கிவிட்டனர்" என்கிறார்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரும் ஜம்முவும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததாகக் கூறும் சுபாஷ் குப்புசாமி, "சென்னை வரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக கூட்டி வருவதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனுக்கு வந்த பிறகு சொந்த ஊர் திரும்ப வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு ஏற்பாடு

தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு ஏற்பாடு

பட மூலாதாரம், Getty Images

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரில் படித்து வரும் தமிழ்நாட்டுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து அரசு தரப்பில் செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ' தமிழ்நாட்டைச் சேர்ந்த 52 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்து வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதையடுத்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான காஷ்மீரை சொந்த ஊராகக் கொண்ட அப்தாப் ரசூல் ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் பேசி தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குத் தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் அவர்களை அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்வதற்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான உதவி எண்களையும் (1800 309 3793 (இந்தியாவுக்குள்), +918069009900 (வெளிநாடு), +918069009901 தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

"பத்து நாட்களுக்கு முன்பே புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், என்.ஐ.டிக்கு வந்து அனைவரையும் சந்தித்துப் பேசினார். மருத்துவம், பொறியியல், வேளாண்மை என பல்வேறு பிரிவுகளில் படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸாப் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதனால் சொந்த மாநிலங்களுக்குக் கூட்டிச் செல்லும் பணி எளிதானது" எனக் கூறுகிறார், தினேஷ்குமார்.

என்.ஐ.டியில் பொறியியல் படிக்கும் ஜனனி என்ற மாணவியிடம் பிபிசி தமிழ் பேசியது. "சாலை பயணத்தில் குகைக்குள் சென்று கொண்டிருக்கிறேன். தற்போது இதுகுறித்துப் பேசுவது கடினம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"ஊடக செய்திகளும் ஒரு காரணம்"

"பெற்றோர் பயந்துவிட்டதால் திரும்ப அழைத்தனர்"

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, "பெற்றோர் பயந்துவிட்டதால் திரும்ப அழைத்தனர்" - சுபாஷ் குப்புசாமி

"விமான நிலையம் அருகில் தாக்குதல் சத்தம் கேட்டது, புதிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். சாலை பயணத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால், அவர்கள் சற்று மனஉளைச்சலில் உள்ளனர்" எனக் கூறுகிறார், சுபாஷ் குப்புசாமி.

இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் சற்று கவலையளித்ததாகக் கூறும் அவர், "வெளியில் குண்டு போடுவதை வீடியோ எடுத்து அனுப்ப முடியுமா என்றெல்லாம் சில ஊடகங்கள் கேட்கின்றன. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால், வெளியில் வந்து நிலவரத்தைக் கூறுமாறு கேட்கின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த செய்திகளால் தமிழ்நாட்டில் உள்ள உறவினர்கள் பயப்படுகின்றனர். காஷ்மீரில் கல்லூரி வளாகத்தைவிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு இதுபோன்ற செய்திகளே காரணமாக இருந்தது" எனவும் அவர் கூறினார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு