You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலூரில் அரை நிர்வாண ராகிங்: சஸ்பெண்ட் ஆன ஏழு பேர் மீது போலீஸில் புகார் - முழு விவரம்
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, ஏற்கெனவே இருந்த மாணவர்கள் 'ராகிங்' செய்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலான நிலையில், ஏழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பாகாயத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் படித்துவருகின்றனர். இவர்களில் பலர் இங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்குள்ள விடுதி மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. "The Walking Race" எனப் பெயரிடப்பட்டு, அக்டோபர் 9ஆம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில் பல கேலிவதைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்கள் சிலர் அரை நிர்வாணமாக நடந்துசெல்லும்போது அவர்கள் மீது தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாயை வைத்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. சிலர் பின்னோக்கி நடந்து செல்கிறார்கள். சிலர் தேங்கியிருக்கும் மழை நீரில் தண்டால் எடுக்கிறார்கள். இரு மாணவர்களை கட்டிப்பிடிக்கச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மருத்துவர், இது தொடர்பாக ரெடிட் தளத்தில் பதிவாகியிருந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரியின் இயக்குநர் விக்ரம் மேத்யூஸிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். "கல்லூரியில் பகடிவதை நடந்ததாக கல்லூரி நிர்வாகத்துக்கு முகவரி, பெயர் இல்லாமல் மின்னஞ்சல் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு புகார் வந்தது.
அதில் 7 மாணவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 7 பேரையும் இடைநீக்கம் செய்துள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு பேராசிரியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளோம்.
ஏற்கெனவே கல்லூரியில் உள்ள பகடிவதை தடுப்பு குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. இந்த அறிக்கைகள் வந்த பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பகடிவதையை எந்த விதத்திலும் ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என விக்ரம் மேத்யூஸ் தெரிவித்தார்.
தற்போது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாக அந்த வீடியோவிலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய இயலவில்லை.
கல்லூரியில் புதிய மாணவர்கள் திங்கட்கிழமைதான் சேர்ந்தார்கள் என்பதால், தற்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக கல்லூரி முதல்வர் சார்பில் வேலூர் காவல்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
"எங்களிடம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். புகார் இன்னும் வரவில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.
2016ஆம் ஆண்டில் இதே நவம்பர் மாதம், இந்தக் கல்லூரி விடுதியின் மாணவர்கள் குரங்கு ஒன்றை பிடித்து அதை துன்புறுத்தி கொன்றதாக நான்கு மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்