அலுவலக வேலை ஏன் சோர்வை தருகிறது? - பின்னணியில் உள்ள ஆபத்தான காரணம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாரியா கோர்வெட்
- பதவி, பிபிசி வொர்க்லைஃப்
1970களின் முற்பகுதியில் பர்னவுட் (burnout) என்ற முற்றிலும் சோர்வடைந்த நிலையால் நீங்கள் அவதிப்படுவதாக யாரிடமாவது சொன்னால், சிலர் புருவங்களை உயர்த்தியிருக்கலாம்.
ஏனென்றால் இந்த வார்த்தை அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகளை விவரிக்க அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனினும், ஜெர்மன்-அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ஃபிராய்டன்பெர்கர் 1974ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கான மருத்துவமனையில் பர்னவுட் பிரச்னையை முதன்முதலில் கண்டறிந்தபோது, அதை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான பிரச்னையாக சுருக்கிச் சிந்திக்கவில்லை.
அதிகப்படியான பணி காரணமாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய தன்னார்வலர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர். பலர் தாழ்வு மனப்பான்மை அடைந்து உணர்ச்சிரீதியாக சோர்வடையத் தொடங்கினர். இதனால் தங்கள் நோயாளிகளிடம் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.
இந்த ஆபத்தான நிலையை தொடர்ச்சியான அதிக வேலை காரணமாக ஏற்படும் சோர்வு நிலை என்று ஃபிராய்டன்பெர்கர் வரையறுத்தார். அதை விவரிக்க பர்னவுட் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
இன்று வேலை காரணமாக ஏற்படும் சோர்வு உலகளாவிய ஒன்றாகிவிட்டது. 2018ஆம் ஆண்டில் பிரிட்டனில் மட்டும் 5,95,000 பேர் பணியிட அழுத்தம் காரணமாக (workplace stress) பாதிக்கப்பட்டனர்.
விளையாட்டு வீரர்கள் , யு ட்யூப் பிரபலங்கள், தொழில்முனைவோர் எனப் பலரும் இந்த நிலையால் பாதிக்கப்படுகின்றனர். இறுதியில், ஃபிராய்டன்பெர்கரே இந்த நிலையால் பாதிக்கப்பட்டார்.
சமீபத்திய சர்வதேச நோய்களின் கையேட்டில் இந்தப் பிரச்னை அங்கீகரிக்கப்படும் என்று கடந்த மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதில் முறையாகக் கையாளப்படாத நாள்பட்ட பணியிட அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய் என்று இந்தப் பிரச்னை விவரிக்கப்படும்.
சோர்வை உணர்தல், வேலையில் ஆர்வம் இல்லாமல் இருத்தல், வேலையில் மோசமான செயல்திறன் என பர்னவுட் மூன்று கூறுகளைக் கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சோர்வை உணர்தல்

பட மூலாதாரம், Getty Images
ஏறக்குறைய நீங்கள் சோர்வடைந்துவிட்ட நிலையை எப்படிக் கண்டறிவது?
"முற்றிலும் சோர்வடைந்த நிலைக்கு முந்தைய பல அறிகுறிகள் மனச்சோர்வு அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும்," என்கிறார் அயர்லாந்தின் கவுண்டி டப்ளினில் உள்ள உளவியல் சிகிச்சை நிபுணரும் தி பர்னவுட் சொல்யூஷன் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான சியோபன் முர்ரே.
அதிகம் மது அருந்துதல், அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வது போன்ற தவறான பழக்கங்கள் அதிகரிக்கும் என்றும் முர்ரே கூறுகிறார்.
மேலும், இரவு நன்றாகத் தூங்கினாலும், காலை 10 மணிக்கே படுக்கைக்குச் செல்லும் நேரம் குறித்து எண்ணிக் கொண்டிருப்பது, உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்ய ஆற்றல் இல்லாமல் இருப்பது என எப்போதும் சோர்வு உணர்வு இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இது மாதிரியான உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கும்படி முர்ரே அறிவுறுத்துகிறார்.
மனச்சோர்வு, முற்றிலும் சோர்வடைந்த நிலை ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை. இந்த இரண்டையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள மருத்துவ நிபுணரின் உதவியைப் பெறுவது முக்கியம். ஏனென்றால் மனச்சோர்வுக்கு பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வதுதான் முற்றிலும் சோர்வடைந்த நிலையை எதிர்கொள்ளச் சிறந்த வழி.
நீங்கள் உண்மையிலேயே முற்றிலும் சோர்வடைந்த நிலையில் இருக்கிறீர்களா அல்லது வெறுமனே ஒரு சவாலான மாதத்தை எதிர்கொள்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? "உண்மையில் அழுத்தமான சூழல் அவசியமானது, கவலைதான் நம்மை சிறப்பாகச் செயல்பட வைக்கும். ஆனால், அழுத்தமான சூழலுக்கும் கவலைக்கும் நாம் தொடர்ந்து உள்ளாகும்போது அது முற்றிலும் சோர்வடைந்த நிலையை நோக்கி நம்மைத் தள்ளுகிறது," என்கிறார் முர்ரே.
சான்றாக, நீங்கள் செய்யும் பெரிய திட்டத்தை (project) எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி நினைக்கும்போது நீங்கள் மிகவும் அழுத்தமாக உணர்வது இயல்பானது. ஒருவேளை அது உங்களை இரவில் தூங்கவிடாமலும் செய்யலாம்.
"அதற்கான வேலை முடிந்த பிறகும் அது உங்களுக்கு அமைதியின்மையைத் தந்தால் நீங்கள் முற்றிலும் சோர்வடைந்த நிலையில் உள்ளீர்களா என்பது குறித்து யோசிக்க வேண்டும்," என்கிறார் முர்ரே.
உங்கள் வேலைக்கு அதிக மதிப்பு இல்லை என்பது போன்ற உணர்வு, சமூக கடமைகளைத் தவிர்த்தல், எளிதில் ஏமாற்றத்திற்கு உள்ளாதல் போன்ற நம்பிக்கையற்ற நிலை, ஆகியவை முற்றிலும் சோர்வடைந்த நிலையை நீங்கள் நெருங்குகிறீர்கள் என்பதற்கான மற்ற அறிகுறிகள்.
உங்கள் வேலையின் தரம் குறையத் தொடங்குவது முற்றிலும் சோர்வடைந்த நிலையின் இறுதி அறிகுறி என்கிறார் லண்டனை சேர்ந்த உளவியல் நிபுணர் ஜாக்கி பிரான்சிஸ் வாக்கர்.
"இது நான் அல்ல! நான் இப்படி இருக்கமாட்டேன், நான் பொதுவாக இதையெல்லாம் செய்வேன் என்று சொல்வார்கள். ஆனால் உடல் ரீதியான சோர்வு நிலையில் இருந்தால், அவர்களிடம் இயல்பான திறன்கள் இருப்பதில்லை," என்கிறார் வாக்கர்.
இது அறிவியலுக்கு மாறாகத் தெரிந்தாலும், முற்றிலும் சோர்வடைந்த நிலையை அளவிட வடிவமைக்கப்பட்ட சோதனையான மஸ்லாக் பர்னவுட் இன்வென்டரி (எம்பிஐ) உதவுகிறது. இது சோர்வு, நம்பிக்கையற்ற தன்மை, வேலையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் ஆகியவற்றை அளவிட பயன்படுத்தப்படுகிறது.
1981ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த சோதனை, பல ஆய்வுகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முற்றிலும் சோர்வடைதலுக்கு முந்தைய நிலையில் உள்ளீர்களா?
முற்றிலும் சோர்வடைந்த நிலையை அடைவதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிவதே.
வாக்கர் மூன்று படிகள் கொண்ட ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளார். அதில் ஒரு நபரால் என்ன முடியும் என்பதற்கும், மற்றவர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் நினைப்பதற்கும் இடையே ஏன் பொருந்தாத தன்மை உள்ளது என்பதைக் கண்டறிவதும் அடங்கும்.
"இதற்கு சில நேரங்களில் மிகவும் சரியானவராக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது காரணமாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் நினைப்பது போல் நாம் இல்லை என்பதை மறைக்க கடினமாக முயற்சிக்கும் இம்போஸ்டர் சிண்ட்ரோம் (தன்னைக் குறைத்து மதிப்பிடும் நிலை) காரணமாக இருக்கலாம்" என்கிறார் வாக்கர்.
எனினும், சில நேரங்களில் பணிச்சூழல் பிரச்னைக்குரியதாக உள்ளது. 7,500 அமெரிக்க ஊழியர்களிடம் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், வேலையில் நியாயமற்ற முறையில் நடத்துதல், சமாளிக்க முடியாத பணிச்சுமை மற்றும் ஒரு நபரின் வேலை என்ன என்பது பற்றிய தெளிவின்மை ஆகியவை முற்றிலும் சோர்வடைந்த நிலைக்கு வழிவகுப்பது தெரியவந்தது. மேலாளரின் ஆதரவின்மை மற்றும் நியாயமற்ற நேர அழுத்தம் ஆகியவை காரணமாகவும் ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகியது தெரியவந்தது.
"நிறுவனத்தின் கொள்கைகள் ஊழியரின் சொந்தக் கொள்கைகளுடன் தீவிரமாக முரண்படுவது மற்றொரு சிக்கலாக இருக்கலாம். நம்பாத ஒன்றைச் செய்வது அவர்களிடம் அதிருப்தி உணர்வை உருவாக்குகிறது`` என்கிறார் வாக்கர்.
சில நேரங்களில் அவரது வாடிக்கையாளர்கள் அலுவலக வேலைகளுக்கு வெளியே மனப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கின்றனர். ஆனால், மிக அரிதாகவே நிறுவனங்களை மாற்றுவது அல்லது புதிய வேலைகளை தேர்ந்தெடுப்பது போன்ற தீவிரமான மாற்றங்களைச் செய்ய முடிவு செய்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
உங்களை சோர்வடைய வைப்பதற்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்களுக்கு நீங்களே கணிவாக இருங்கள் என்கிறார் முர்ரே.
முற்றிலும் சோர்வடைவதற்கான முக்கியக் காரணம் அனைத்தையும் விரும்பும் இன்றைய கலாச்சாரம் என்கிறார் முர்ரே.
"ஆரோக்கியமான சமூக வாழ்க்கை, ஒரு பெரிய திட்டத்தை முடிப்பது, தனிப்பட்ட உடற்பயிற்சி இலக்குகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைவது பெரும்பாலும் சாத்தியமில்லை. தேவையான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், உங்களைப் பற்றி அதிகம் எதிர்பார்ப்பு கொண்டிராமல் இருப்பதும் முக்கியம்," என்றும் முர்ரே கூறுகிறார்.
முற்றிலும் சோர்வடைந்த நிலையை நோக்கி நீங்கள் செல்கிறீர்கள் என்றால் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதிலிருந்து உங்களை விடுவியுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












