விடுமுறையில் ஊழியரை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் - ட்ரீம்11 நிறுவனம் எச்சரிக்கை ஏன்?

IPL dream11 leave

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நவீன உலகில் வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கான வசதி, வாய்ப்புகள் பெருகிவிட்டாலும் மனிதர்கள், வேலை - குடும்பம் என இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இன்பச் சுற்றுலா மட்டுமல்லாமல், வீட்டிலிருந்தபடியே கூட குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்கான பொழுதுபோக்கு சாதனங்களை விஞ்ஞானம் நமக்குக் கொடுத்திருந்தாலும், அதே விஞ்ஞானம் தந்த தகவல் தொடர்புக் கருவிகள் நம் மகிழ்ச்சிக்கு பல நேரங்களில் இடையூறாக வந்து நிற்கின்றன.

விடுமுறையில் உங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் சீர்குலைக்க, நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து வரும் ஒரு செய்தியோ, தகவலோ போதும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான டிரீம்11 (Dream11) புதிய முயற்சியைக் கைக்கொண்டுள்ளது. ஊழியர்களின் மகிழ்ச்சியான தருணங்களில் அலுவலகம் குறுக்கிடாமல் தடுக்க டிரீம்11 அன்பிளக் (Dream11 Unplug) என்ற பெயரில் அந்நிறுவனம் புதிய கொள்கையையே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ட்ரீம்11 நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு வாரம் வீதம் அலுவலகப் பணிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுபட்டு, வாழ்க்கையை விரும்பியபடி முழுமையாக வாழலாம். ஒரு வார காலம் குடும்பம், உறவுகள், நண்பர்களுடன் ஊர் சுற்றலாம்; பழங்கதைகளைப் பேசி மகிழலாம்; வாழ்க்கையை கொண்டாடித் தீர்க்கலாம். அலுவலகமோ, அலுவலகப் பணியோ எந்த வகையிலும் குறுக்கே வராது.

டிரீம்11 நிறுவனத்தின் வேலை கட்டமைப்பில் இருந்து ஒரு வார காலம் முற்றிலுமாக விடுவிக்கப்படும் ஊழியர் அலுவல்ரீதியான அத்தனை தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு விடுவார். அலுவலக தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் குழுக்கள் இருந்தும் கூட அவருக்கு தற்காலிக விடுதலை கிடைக்கும்.

ஊழியரின் ஒரு வார விடுப்பு காலத்தில் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்போ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ் அப் தகவலோ, ஸ்லாக் போன்ற சமூக வலைதளம் வாயிலாகவோ எந்தவொரு செய்தியும் அவரைச் சென்றடையாது. அந்த நேரத்தில் அவரை தொடர்பு கொள்ளும் சக பணியாளர் யாராக இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று டிரீம் 11 நிறுவனம் எச்சரித்துள்ளது.

IPL dream11 leave

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

டிரீம் 11 நிறுவனத்தை நிறுவிய அதன் உரிமையாளர்கள் முதல் கடைசியாக பணியில் சேர்ந்த ஊழியர் வரை அனைவருமே ஆண்டுக்கு ஒரு வாரம் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

ஊழியர்கள் ஒரு வார காலம் அலுவலகப் பணியில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, அன்புக்குரியவர்களுடன் தனிப்பட்ட வாழ்க்கையை விரும்பியபடி அனுபவிப்பது அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிந்தனை, வேலைத் திறனை வளமாக்கும்; அது அலுவலகப் பணியில் நேர்மறை தாக்கங்களை உண்டாக்கும் என்று டிரீம்11 நிறுவனம் நம்புகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நிறுவனம் எந்தவொரு தனிபரையும் சார்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: