இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் ஆலை மூடப்பட்டதால் பதற்றத்தில் மக்கள் - கள நிலவரம்

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, தாட்லாகாட் சிமெண்ட் ஆலை
    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தாட்லாகாட் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக பதற்றமான அமைதி நிலவுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு பெரிய சிமெண்ட் ஆலை டிசம்பர் 15 அன்று திடீரென மூடப்பட்டது.

2022 செப்டம்பரில் இந்த ஆலையை அதானி குழுமம் வாங்கியது. அதே நேரத்தில் அந்த நிறுவனம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பர்மானாவில் இயங்கும் மற்றொரு சிமெண்ட் ஆலையையும் வாங்கியது.

சரக்குகளின் போக்குவரத்து செலவு காரணமாக இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அதனால் இந்த இரண்டு ஆலைகளையும் மூடுவதாகவும் இந்தக் கையகப்படுத்துதல் நடந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிறுவனம் அறிவித்தது.

அடுத்த அறிவுறுத்தல் வரை பணிக்கு வர வேண்டாம் என்று டிசம்பர் 14 ஆம்தேதி மாலை ஊழியர்களிடம் நிறுவனம் கூறியது.

சிமெண்ட் ஆலையை மூடும் முடிவு திடீரென எடுக்கப்பட்டதால் டிசம்பர் 15ஆம் தேதி காலை வேலைக்குச் சென்றபோதுதான் பல ஊழியர்களுக்கு இது தெரியவந்ததாக தாட்லாகாட் மக்கள் கூறுகின்றனர்

சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. புதிய அரசு அமைந்து சில நாட்களே ஆன நிலையில், இமாச்சல பிரதேச மக்கள் பலரும் இந்த நிகழ்வை அரசியலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர்.

1990களில், தாட்லாகாட் மற்றும் பர்மானா ஆகிய பகுதிகளில் இந்த சிமெண்ட் ஆலைகள் கட்டப்பட்டபோது, ​​நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, மகேஷ் குமார்

ஆயிரக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியானது

நிலத்தை இழந்தவர்களில் சிலருக்கு இந்த ஆலைகளில் வேலை கிடைத்தது. ஆனால் இந்த சிமெண்ட் ஆலைகளில் வேலை கிடைக்காமலும் பலர் இருந்தனர்.

வேலை கிடைக்காதவர்கள் இந்த ஆலைகளுடன் போக்குவரத்துத் தொழிலில் இணைந்தனர். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தப் பகுதிகளின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இந்த சிமெண்ட் ஆலைகளை நம்பியிருக்கும் ஒரு சூழ்நிலை உருவானது. ஏனெனில் இங்கு வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லை.

இன்று இந்தத் தொழிற்சாலைகள் பூட்டப்பட்ட நிலையில் ​​இங்குள்ள மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

தாட்லாகாட் மற்றும் பர்மானாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுமார் 2,000 இமாச்சல் மக்கள் பணிபுரிந்து வந்ததாக இமாச்சல பிரதேச அரசு கூறுகிறது.

இந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் 10,000 லாரிகளுடன் இந்த்த் தொழிற்சாலைகளின் சரக்குப் போக்குவரத்துக்காக இணைந்துள்ள உள்ளூர் மக்கள் என்று அரசு கூறுகிறது.

இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் காரணமாக, டஜன் கணக்கான உணவகங்கள், டிரக் உதிரி பாகம் விற்கும் கடைகள் மற்றும் லாரி பழுதுபார்க்கும் பணிமனைகள் இயங்கி வந்தன. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்தனர்.

இன்று இவர்கள் அனைவரின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த சிமெண்ட் ஆலைகளில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகள் இன்று சாலையில் வெறுமனே நிற்கின்றன.

"இந்த ஆலைக்காக மக்கள் லாரிகளை வாங்கியுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சிமெண்ட் வெளியே போகும்போது எங்கள் வாகனங்கள் அதைக் கொண்டு செல்லும் அல்லது வெளியில் இருந்து வந்தால் எங்கள் வாகனங்கள் கொண்டு வரும். ஆனால் இப்போது ஆலை மூடப்பட்டுள்ளது. வாகனங்கள் வெறுமனே நிற்கின்றன,” என்று தாட்லாகாட்டில் வசிக்கும் மகேஷ்குமார் கூறினார்.

“இப்போது ஆலை மூடப்பட்டு பல நாட்களாகிவிட்டன. மக்கள் தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் இந்த வாகனங்களில் முதலீடு செய்துள்ளதால் இப்போது என்ன செய்வது என்று பதற்றத்தில் உள்ளனர். இந்தப் பகுதியின் பெரும்பாலான வணிகம் இந்த நிறுவனத்தையே சார்ந்துள்ளது. இது செயல்பட்டால்தான் பொதுமக்களின் வியாபாரமும் நடக்கும்,'' என்றார் அவர்.

​​"இங்கிருந்து பஞ்சாப் செல்லும் அனைத்து வாகனங்களும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்களும், இந்த நிறுவனம் மூடப்பட்டதால் முடங்கிப் போயுள்ளன. அவை எல்லாமே மூடப்படுகின்றன,” என்று மகேஷ் குமார் குறிப்பிட்டார். .

டயர் பஞ்சர் போடுபவர், டீ விற்பவர், பீடி-சிகரெட் விற்பவர் என்று எல்லோருடைய தொழிலும் அழிந்து போய்விட்டன. அவர்கள் வேலை தேடி அங்கும் இங்கும் அலையத் தொடங்கியுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு,  தாட்லாகாட் சிமெண்ட் ஆலை

இமாச்சல் அரசு என்ன சொல்கிறது?

உள்ளூர் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இமாச்சல பிரதேச அரசு கூறுகிறது.

"உள்ளூர் இமாச்சல் மக்களுக்கு உதவுவதே எங்கள் முன்னுரிமை. போக்குவரத்து எங்கள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையிலான திட்டத்தை உருவாக்குவோம் என்று நாங்கள் ஏற்கெனவே அதானியிடம் கூறியுள்ளோம். ஏனென்றால் இந்த சிமெண்ட் ஆலைகள் கட்டப்பட்டபோது இந்த மக்கள் தங்கள் நிலத்தை இழந்துள்ளனர்,” என்று இமாச்சல பிரதேச முதன்மைச் செயலர் (தொழில் மற்றும் போக்குவரத்து) ஆர். டி. நஸீம் கூறினார்,

தற்போதைய சூழ்நிலையில் தாட்லாகாட்டில் உள்ள சிமெண்ட் ஆலை மூடப்பட்டதால், இந்தத் தொழிற்சாலையில் பணி வழங்கப்பட்ட இமாச்சல் மக்கள் பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாட்லாகாட் மற்றும் ககல் சிமெண்ட் ஆலைகளின் பல ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நிறுவனம் அவர்களின் இடமாற்றத்தைத் தொடங்கியது என்று அதானி குழுமம் கூறுகிறது.

சிமெண்ட் ஆலைகள் மூடப்படுவதால் ​​ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்வது அவசியமாகிவிட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு சிமெண்ட் ஆலைகளிலும் உள்ள 143 ஊழியர்கள் அருகிலுள்ள அதானி சிமெண்ட் ஆலைகளுக்கு மாற்றப்படுவதாக அதானி குழுமம் கூறுகிறது.

சில ஊழியர்கள் நாலாகர், ரோபார் மற்றும் படிண்டாவில் உள்ள க்ரைண்டிங் ஆலைகளுக்கும், சிலர் மார்வார், முண்ட்வா, ரபாடியாவாஸ் மற்றும் லகேடியில் உள்ள ஒருங்கிணைந்த ஆலைகளுக்கும் மாற்றப்படுகிறார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

உற்பத்தி, பராமரிப்பு மற்றும் தரம் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் மீண்டும் பணியமர்த்தப்படுவதாக அதானி குழுமம் கூறுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, ஆர் டி நஸீம், இமாச்சல பிரதேசத்தின் முதன்மைச் செயலர் (தொழில் மற்றும் போக்குவரத்து)

சர்ச்சைக்கான காரணம் என்ன?

இத்தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு முன், சரக்கு ஏற்றிச் செல்ல லாரி உரிமையாளர்கள், மலைப் பகுதிகளில், ஒரு கிலோ மீட்டருக்கு, டன் ஒன்றுக்கு, 10.58 ரூபாயும், சமவெளிப் பகுதிகளில் டன்னுக்கு, 5.29 ரூபாயும் வசூலித்தனர்.

மலைப்பாங்கான பகுதிகளில் இதை ஒரு கிலோ மீட்டருக்கு டன் ஒன்றுக்கு 6 ரூபாயாக குறைக்க வேண்டும் என்கிறது அதானி குழுமம்.

அதானி குழுமத்திடம் இருந்து அவர்களின் தரப்பை அறிய பிபிசி முயன்றது.

அதற்குப் பதிலளித்த அதானி குழுமம், "ககல் மற்றும் தார்லாகாட்டில் உள்ள எங்களின் ஆலைகள் நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தற்போதுள்ள சந்தை விலையை விட மிக அதிகமாக சரக்குக் கட்டணத்தைக் கோரும் லாரி தொழிற்சங்கங்களின் பிடிவாதமான நிலைப்பாடு எங்கள் செயல்பாட்டை சாத்தியமற்றதாக ஆக்கிவிட்டது. எனவே 2022 டிசம்பர் 15ஆம் தேதி முதல் இரண்டு ஆலைகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று தெரிவித்தது.

"தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்தை இமாச்சல பிரதேச அரசால் அமைக்கப்பட்ட நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க கிலோமீட்டருக்கு டன் ஒன்றுக்கு 6 ரூபாயாகக் குறைக்குமாறு லாரி உரிமையாளர்களிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்," என்றும் அதானி குழுமம் கூறியது.

உள்ளூர் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்ற டிரான்ஸ்போர்ட்டர்களை போட்டி விலையில் வேலை செய்ய அனுமதிப்பதில்லை என்றும் இது சுதந்திர சந்தையின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்றும் அதானி குழுமம் தெரிவித்தது. போக்குவரத்துக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் லாரிகளை கொண்டுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

சிமெண்ட் ஆலைகள் மூடப்பட்ட சில நாட்களிலேயே இமாச்சல பிரதேச அரசு இந்தப் பிரச்னையைத் தீர்க்க தீவிர முயற்சிகளைத் தொடங்கியது.

உள்ளூர் நிர்வாகத்திற்கோ அல்லது மாநில அரசுக்கோ தெரிவிக்காமல் இந்த சிமென்ட் ஆலைகளை மூடுவதற்கு ஒருதலைப்பட்சமான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்று கேட்டு இமாச்சல பிரதேசத்தின் தொழில்கள் துறை, அதானி குழுமத்திற்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸை அனுப்பியுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அதானி குழுமம் மற்றும் இமாச்சல பிரதேச அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே கடந்த சில நாட்களாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இந்த பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

“மாநிலத்தில் புதிய அரசு அமைந்த இந்த நேரத்தில் ஆலைகளை மூடும் முடிவை அதானி குழுமம் எடுத்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஊழியர்களை மட்டுமல்லாமல் இந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், உணவகம் நடத்துவோர் என்று அனைவரையும் பாதித்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களில் மக்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர். இந்த சிமெண்ட் தொழிற்சாலைகளுக்காக நிலத்தைக் கொடுத்ததால் இவர்கள் அதை இழந்தனர். மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தின் விலை எவ்வளவு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியும். அது விலைமதிப்பற்றது,” என்று இமாச்சல பிரதேசத்தின் முதன்மைச் செயலர் (தொழில் மற்றும் போக்குவரத்து) ஆர்.டி.நஸீம் கூறினார்.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, பிரேம் லால் டாக்கூர்

'எல்லா வகையான பயிர்களும் இந்த நிலத்தில் விளைந்தன'

அப்பகுதி மக்கள் இன்றும் அந்த நிலங்களை நினைவு கூர்கின்றனர்.

சிமெண்ட் ஆலை கட்டப்பட்டபோது நிலம் கையகப்படுத்தலில் நிலத்தை இழந்த நூற்றுக்கணக்கான மக்களில் தாட்லாகாட்டில் வசிக்கும் பிரேம் லால் டாக்கூரும் ஒருவர்.

"இந்த நிலங்களில் எல்லா வகை பயிர்களும் விளைந்தன. இது மிகவும் அழகான நிலமாக இருந்தது. சோளம், கோதுமை, பச்சை பட்டாணி , பருப்பு வகைகள் என்று எல்லாமே இதில் விளைந்தன. அப்படிப்பட்ட நிலம் இது. நல்ல நிலத்தைக் கொடுத்துவிட்டோமே என்று எண்ணி இன்றும் வருந்துகிறேன்,” என்று சிமெண்ட் ஆலையைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

"எங்கள் நிலத்தில் பயிர்களைப் பயிரிட்டால், அது எவ்வளவு வெயில் அடித்தாலும் காய்ந்து போகாது. நல்ல விளைச்சல் தரும்," என்கிறார் தாட்லாகாட்டில் வசிக்கும் துளசி ராம் தாக்கூர். 

1990களில் சிமெண்ட் ஆலைகள் கட்டவும், மலைகளில் உள்ள சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்கவும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, துளசி ராம் டாக்கூர்

"இங்கே எங்களிடம் உள்ள சுண்ணாம்புக் கல் உலகின் மிக உயர்ந்த தரம் வாய்ந்த சுண்ணாம்புக்கற்களில் ஒன்று. 1992இல் பிக்ஹா (0.62 ஏக்கர்) ஒன்றுக்கு 19,000 ரூபாய் மற்றும் 62,000 ரூபாய் என்ற விலையில் எங்கள் நிலத்தை விற்றோம்,” என்று தாட்லாகாட் பகுதியின் கியானா கிராமத்தில் வசிக்கும் பாரஸ் டாக்கூர் கூறினார்.

”இவ்வளவு குறைந்த விலையில் சுண்ணாம்புக் கல் கிடைத்ததன் காரணமாக, இங்கு இமாச்சலப் பிரதேசத்தில் குறைந்த உற்பத்திச் செலவே ஆகிறது,” என்றார் அவர்.

நிலங்களைக் கையகப்படுத்தும் போது ​​அவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. விவசாயம் செய்யக்கூடிய நிலம் பிக்ஹா ஒன்றுக்கு 62,000 ரூபாய் மற்றும் சாகுபடி செய்ய முடியாத நிலம் 19,000 ரூபாய் என்ற விலையில் கையகப்படுத்தப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, பாரஸ் டாக்கூர்

'நிலம் போனது, வேலை கிடைக்கவில்லை'

நிலம் கையகப்படுத்தும்போது வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் அது நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாட்லாகாட்டில் வசிக்கும் காந்தா ஷர்மா குடும்பத்தின் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. சிமெண்ட் தொழிற்சாலையில் தனது பிள்ளைகளுக்கு வேலை கிடைக்குமா என்று பலமுறை முயன்றதாகவும், ஆனால் வேலை இல்லை என்ற அதே பதில்தான் கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

"சில பிள்ளைகள் அதிக சுறுசுறுப்பாகவும், அதிகம் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் படிக்காத பிள்ளைகளுக்கு உணவு வேண்டாமா என்று அரசிடமும் தொழிற்சாலையிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவர்களின் படிப்பின் அடிப்படையில் அவர்களுக்கும் ஏதாவது வேலை கிடைக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, காந்தா ஷர்மா

தாட்லாகாட் சிமெண்ட் ஆலைக்கு கற்கள் வெட்டி எடுக்கப்படும் பகுதி ஐந்து பஞ்சாயத்துகளின் கீழ் வருகிறது என்கிறார் பராஸ் டாக்கூர்.

1992 முதல் இன்று வரை இந்த ஐந்து பஞ்சாயத்துகளில் இருந்து 7000 பிக்ஹா நிலம் கற்களை வெட்டி எடுப்பதற்காக மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுரங்கப் பகுதியில் உள்ள ஐந்து பஞ்சாயத்துகளில் இருந்து இதுவரை 72 குடும்பங்களுக்கு மட்டுமே நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தாட்லாகாட் சிமெண்ட் தொழிற்சாலையின் சுரங்கப் பகுதிக்காக தனது நிலம் மூன்று நான்கு முறை கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றுவரை தொழிற்சாலையில் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறார் உள்ளூர்வாசி ஜெய்தேவ் டாக்கூர்.

இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சிமெண்ட் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணி என்ன

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, ஜெய்தேவ் டாக்கூர்

அதானி குழுமத்திற்கும், டிரான்ஸ்போர்ட்டர்களுக்கும் இடையே நிலவும் முட்டுக்கட்டை காரணமாக இப்பகுதி மக்கள் மத்தியில் கோபமும் விரக்தியும் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

"ஓரிடத்தில் இவ்வளவு பெரிய ஆலையை அமைக்காமல் இருந்தால் நல்லது. ஆலை அமைத்தால் அதனுடன் மேலும் பல இணைகின்றன. சிறு கடைக்காரராக இருந்தாலும், தினக்கூலியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் ஓர் ஆலை அமைக்கும்போது நன்மைகளுடன் கூடவே நஷ்டங்களும் ஏற்படுகின்றன. ஆலையை மூடக்கூடாது. அது ஒருவகையிலான சர்வாதிகாரம்," என்று அப்பகுதியில் வசிக்கும் அனில்குமார் கூறினார்.

இந்த சிமெண்ட் ஆலைகள் அமைக்கப்பட்டால் தங்கள் குழந்தைகள் வேலை தேடி வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை என மக்கள் நம்பினர். இதை நினைத்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் விளை நிலங்களை சுரங்கப் பகுதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கொடுத்தனர். இன்று அவர்களில் பலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த அந்த முடிவை நினைத்து வருந்துகிறார்கள். ஆனால் அதே நேரம் இந்த ஆலைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையைத் தவிர அவர்களிடம் வேறு எதுவும் மீதமில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: