பாகிஸ்தான்: ராணுவம் - காவல்துறை இடையே என்ன மோதல்? போலீஸ் அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பது ஏன்?

    • எழுதியவர், துர்ஹாப் ஹஸ்கார்
    • பதவி, பிபிசி உருது, லாகூர்

“காவல் நிலையத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டோம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஆனால், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐஜி சாஹேப் தனது வீடியோ செய்தியில் காவல்துறைக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் தனது போலீஸ் படையின் பக்கம் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.”

“என்னோடு சேர்த்து இங்குள்ள யாருமே தங்கள் கடமையைச் செய்ய விரும்பவில்லை. இவ்வளவு அடியையும் அவமானத்தையும் பார்த்த பிறகு, பொது மக்களுக்குக்கூட போலீசாரை கண்டு பயம் வராது. எங்கள் தலைமை எங்களை ஏமாற்றிவிட்டது."

இவை பாகிஸ்தானில் ராணுவ அதிகாரிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் கூறிய விஷயங்கள்.

பஞ்சாபின் பஹவல்நகரில் உள்ள காவல்நிலையத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தி அங்குள்ள காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிறது. ஆனால், அந்த விவகாரம் இன்னும் பாகிஸ்தான் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் பிபிசியிடம் பேசினர். இந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, பஹவல்நகர் சம்பவம் காவல்துறையின் மன உறுதியைப் பெரிதும் பாதித்துள்ளது.

ரமலான் தினத்தன்று, இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் சீருடை அணிந்த ராணுவ அதிகாரிகள் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதைக் காண முடிந்தது.

இந்தச் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐ.எஸ்.பி.ஆர் (ISPR), பஞ்சாப் அரசு மற்றும் பஞ்சாப் காவல்துறை ஆகியவை இந்தச் சம்பவம் குறித்து 'வெளிப்படையான மற்றும் கூட்டு விசாரணை' வேண்டும் என வலியுறுத்தின.

சட்டத்தை மீறுபவர்கள் மற்றும் உரிமைகளைத் தவறாக பயன்படுத்துபவர்களை அடையாளம் காணும் வகையில் விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. இதற்காக கூட்டு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து, உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திங்கள்கிழமை லாகூரில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​“இது ஒரு பெரிய பிரச்னை இல்லை. சிலர் இந்த விஷயத்தைப் பெரிதாக்குகின்றனர்," என்றார்.

காவல்துறையினரின் மன உறுதி குறித்து அவர் கூறுகையில், ஒற்றைச் சம்பவம் அனைவரின் மன உறுதியையும் குறைக்காது எனவும் காவல்துறையினரின் மன உறுதி மேலும் உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

இதேபோன்ற சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளதாகவும் ஆனால் பாகிஸ்தானில் காணப்படுவது போன்ற எதிர்வினை அங்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக, பஞ்சாப் ஐஜி டாக்டர் உஸ்மான் அன்வாரை பிபிசி தொடர்பு கொண்டபோது, "சம்பவம் குறித்து விசாரிக்க கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற கேள்விகள் மற்றும் விஷயங்களில் நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை," என்றார்.

'ராணுவத்தை குற்றவாளி என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது?'

கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதிலும் பலர் இந்த விவகாரம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அச்சம் தெரிவித்தவர்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்களும் அடங்குவர். அந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பஹவல்நகர் போலீசார் கடமையைச் செய்யத் தயாராக இல்லை என்றும் பல போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “பஹவல்நகர் சம்பவம் காவல்துறையை பலவீனப்படுத்தியுள்ளது. ஐஜி சாஹேப்பின் வீடியோ செய்தியால் காவல்துறைக்கு மேலும் சேதம் ஏற்பட்டுள்ளது. ராணுவம் தனது சக்தியைக் காட்ட விரும்புகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், நாட்டின் பிற நிறுவனங்களை ராணுவம் மதிக்கக்கூடாது என்பது இதற்கு அர்த்தமல்ல. சட்டம் அனைவருக்கும் சமம்,” என்று கூறினார்.

அவர் கூறுகையில், “இந்த நிலையில், எனது ஜூனியர்களை உற்சாகமாக வேலை செய்யும்படி நான் எப்படிக் கேட்பது என்று சங்கடமாக உணர்கிறேன். இச்சம்பவத்திற்குப் பிறகு காவல்துறையில் அமைதியின்மை, கோபம், அவநம்பிக்கை போன்ற சூழல் நிலவுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழ்நிலைகளைப் புறக்கணிக்க உயர்மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என அவர் தெரிவித்தார்.

“எல்லாம் நன்றாக இருக்கிறது, காவல்துறையும் ராணுவமும் அண்ணன் - தம்பி போன்றவர்கள்' எனத் தொடர்ந்து கூறுவதால் மட்டுமே எல்லாம் சரியாகிவிடாது. ஐஜி சாஹேப் தனது காவல்துறை சார்பாக உறுதியாக நின்றிருக்க வேண்டும். அவர் இதைச் செய்திருந்தால், ஒட்டுமொத்த காவல்துறையும் அவருக்குப் பின்னால் நின்றிருக்கும்” என மற்றொரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து பஹவல்நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“எங்கள் நிலை என்னவென்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக ராணுவமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றினர். போலீசாரின் தேவை குறைந்தபோது, ​​ராணுவம் இந்த நாட்டில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எங்களுக்கு நினைவூட்டுகின்றனர்," என்று கூறினார்.

கூட்டுக்குழு விசாரணையில், போலீசார் தான் குற்றவாளிகள் எனக் கண்டறியப்படும் என்றும் அவர் கூறினார். “காவல்துறை ஐஜியாக இருந்தாலும், ராணுவத்தைக் குற்றவாளி என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக்கிறது?” எனவும் அவர் கேட்கிறார்.

டாக்டர் உஸ்மான் (ஐஜி) போலீஸ் படைக்காக நிறைய வேலை செய்துள்ளார், எனவே அவர் இப்படி ஒரு வழக்கில் அடிபணிவார் என்று எதிர்பார்க்கவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினரின் மன உறுதி அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் காவல்துறைத் தலைமை படையுடன் நின்றதுதான். என்ன கட்டளை கொடுக்கப்பட்டதோ அதை காவல்துறை நிறைவேற்றியது. இதற்குப் பிறகும், ஐஜி தனது காவல்துறை படையுடன் நிற்காமல் அவர்களை குற்றவாளி என்று கூறியது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.

'இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன'

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2020ஆம் ஆண்டில், ரேஞ்சர்ஸ் (துணை ராணுவம்) ஐஜி சிந்த்-ஐ கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டில், முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர் மரியம் நவாஸின் கணவர் கேப்டன் சஃப்தார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யுமாறு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐஜி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் பத்து நாட்கள் விடுமுறையில் செல்ல விண்ணப்பித்திருந்தனர்.

அரசியல் மற்றும் பொது அழுத்தத்தைத் தொடர்ந்து, அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா இந்த வழக்கில் தொடர்புடைய ரேஞ்சர்ஸ் அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடியும் வரை அந்த அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து முன்னாள் ஐஜி இஷான் கானி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

அவர் கூறுகையில், “இவர்களில் சிலர் முன்வருகிறார்கள். நான் ஐஜியாக இருந்தபோது, ஏஎஸ்ஐ-க்கும் ராணுவத்துக்கும் இடையே இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் ஏ.எஸ்.ஐ பக்கம் நின்றேன். எனக்கு இதனால் அழுத்தம் இருந்தது. ஆனால் நான் ராணுவத்தின் பேச்சைக் கேட்கவில்லை, சட்டத்தின்படி எஃப்ஐஆர் பதிவு செய்தேன்” என்றார்.

காவல்துறைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதுகுறித்து முன்னாள் ஐஜி இஷான் கானி பிபிசியிடம் கூறுகையில், “இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையின் மன உறுதி குறைகிறது என்பது உண்மைதான். நான் அகாடமியில் வெவ்வேறு நிலைகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு விரிவுரைகளை வழங்குகிறேன்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் தரப்பிலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதுடன், அச்சங்களும் எழுப்பப்படுகின்றன. காவல்துறை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது” என்றார்.

"இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, ​​அது காவல்துறை மீதான நம்பிக்கையை மோசமாகப் பாதிக்கிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களும் போலீசாரை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இது சட்ட அமலாக்கத்திற்கு சிக்கல்களை உருவாக்குகிறது" என்றார்.

“எந்தவொரு நிறுவனமும் அதன் அதிகார வரம்புக்கு அப்பால் எந்தவொரு வேலையைச் செய்யும்போதும் சிக்கல் எழுகிறது. இந்தச் சம்பவத்தில் காவல்துறை மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டால், ராணுவம் செய்ததும் சட்டப்படி தவறுதான்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)