தொடரும் இண்டிகோ விமானங்கள் ரத்து - விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை (நவம்பர் 3) இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் டஜன் கணக்கானவை ரத்து செய்யப்பட்டதாலும், தாமதமானதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் டஜன் கணக்கான விமானங்கள் தாமதத்தை எதிர்கொண்டன.
"சோர்வைக் கையாள்வதற்கும், விமானிகளுக்கான ஓய்வு நேரத்தை அதிகரிப்பதற்கும் ஜூலை 1, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைமுறைக்கு வந்த புதிய அரசாங்க விதிகளுக்குப் பிறகு, விமான நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. இது விமானப் பணியாளர்களை நிர்வகிப்பதை சிக்கலாக்கியுள்ளது," என்று விமானப் போக்குவரத்து துறை வட்டாரங்கள் மற்றும் இண்டிகோ விமானி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பல விமானங்கள் 12 மணிநேரம் வரை தாமதமானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்து, அதிகாரிகளை மேற்கோள் காட்டி, புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இரவு 8 மணி வரை, கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோவின் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 130க்கும் மேற்பட்ட விமானங்கள் மாலை வரை தாமதமான பின்னர் இயக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஹைதராபாத் விமான நிலையத்திலும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் குறித்த புகார்கள் பதிவாகியுள்ளன.
தனது எக்ஸ் பக்கத்தில் அவசர நிலை குறித்துத் தகவல் தெரிவித்த ஹைதராபாத் விமான நிலையம், "செயல்பாட்டுக் காரணங்களால் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாகவும், நேரம் மாற்றப்பட்டும் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.
விமான நிலையத்தில் உள்ள எங்கள் குழுக்கள், விமான நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து, பயணிகளுக்குச் சரியான நேரத்தில் தகவல்களையும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகின்றன," என்று குறிப்பிட்டது.

பட மூலாதாரம், Getty Images
பயணிகள் தெரிவித்த சிரமங்கள்
இந்தப் பிரச்னைகளால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாகப் பயணிகள் கூறுகின்றனர்.
பிபிசி ஹிந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவாஸ்தவா டிசம்பர் 2ஆம் தேதியன்று கொல்கத்தாவுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் விமான நிலையத்தில் நிலவும் நிலைமை குறித்து விவரித்தார்:
"டிசம்பர் 2 அன்று டெல்லி-கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் 6E223 மாலை 4:30 மணிக்குப் புறப்படவிருந்தது, ஆனால் பயணிகள் சரியான நேரத்திற்கு விமான நிலையத்தை அடைந்த பிறகுதான் தாமதம் குறித்து அவர்களுக்குத் தெரிய வந்தது.
பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு உள்ளே பார்த்தபோது, கவலையடைந்த பயணிகள் 'விமான அட்டவணைத் திரைக்கு' முன்பாகக் கூடியிருந்தனர். இண்டிகோவின் கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் தாமதம் ஆனதாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ காட்டப்பட்டது.
இண்டிகோவின் இரண்டாவது விமானத்திற்கான போர்டிங் கேட்களில், காத்திருப்போர் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பல கேட்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி, ஊழியர்களிடம் பதில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
நாங்கள் செல்லவிருந்த விமானத்தின் போர்டிங் கேட் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் மாற்றப்பட்டது, 'ஒரு மணிநேரம் மட்டுமே தாமதம்' என்று கூறப்பட்டது. இது இரவு 9 மணி வரை தொடர்ந்தது. ஐந்து மணிநேரம் காத்திருந்து, நான்கு போர்டிங் கேட்கள் மாற்றப்பட்ட பிறகுதான் விமானம் புறப்பட்டது.
இன்று, அதாவது டிசம்பர் 4 அன்றுகூட, திரும்பி வருவதற்கான விமானத்திற்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். காலை 9:50 மணிக்குப் புறப்பட வேண்டிய இண்டிகோ 6E 5077 விமானத்தின் பயணிகளுக்கு ஏற்கெனவே இரண்டு முறை விமானம் தாமதமாகும் என்று எச்சரிக்கை வந்துவிட்டது.
இதற்கிடையில், மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. உதாரணமாக, வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று மற்றொரு பெரிய விமான நிறுவனத்தின் கொல்கத்தாவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்திற்கான டிக்கெட் விலை ரூ.38,000 வரை உயர்ந்துள்ளது.
பொதுவாக அதே டிக்கெட்டை ரூ.5,500 – ரூ.7,500 வரை வாங்குவோருக்கு, இந்த விலை எட்டாக்கனி என்பது வெளிப்படையான ஒன்று."

பட மூலாதாரம், AFP via Getty Images
நாக்பூரில் இருந்து கொல்கத்தா செல்லும் பெண் பயணி ஒருவர் தான் காலை 6 மணிக்கே விமான நிலையத்தை அடைந்துவிட்டதாக தி டெலிகிராஃப் நாளிதழிடம் கூறியுள்ளார். அவரது விமானம் காலை 7:30 மணிக்குப் புறப்பட வேண்டியது, ஆனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அவரிடம் கூறப்பட்டது.
அந்தப் பெண்ணின் பயண முகவர், "விமான நிறுவனம் வியாழக்கிழமை பெங்களூர் வழியாகச் செல்லும் விமானத்தில் மீண்டும் டிக்கெட் பதிவு செய்தது, ஆனால் அதுவும் பின்னர் ரத்து செய்யப்பட்டது," என்று அந்த நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
இண்டிகோவின் ரூ. 5,000 கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகம், அதாவது ரூ.22,000 கொடுத்து அந்தப் பெண் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் டிக்கெட் வாங்க வேண்டியிருந்தது.
வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றுகொண்டிருந்த ஒரு தொழிலதிபர், காலை 11:55 மணிக்குப் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது என்றும், அதற்காக காலை 10 மணிக்கே விமான நிலையத்தை அடைந்துவிட்டதாகவும், ஆனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.
அவர் ரூ.25,000 கொடுத்து கார் மூலம் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
ஏற்கெனவே இருந்த பிரச்னை, டிஜிசிஏ என்ன கூறியது?
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ மாற்றுப் பயண வசதிகள் அல்லது பணத்தைத் திரும்ப வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் தாமதமானது குறித்த பிரச்னையைக் குறைக்க, நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், ஆய்வு செய்து வருவதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைக்கான காரணங்களை விளக்குமாறும், நிலைமையை மேம்படுத்த மாற்றுத் திட்டங்களை முன்வைக்கவும் விமான நிறுவனத்திடம் டிஜிசிஏ கூறியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் விமான நிறுவனத்தின் செயல்பாடு குறித்த புள்ளிவிவரங்களையும் டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.
அதில், விமானங்கள் சரியான நேரத்தில் இயங்குவதைப் பொறுத்தவரை இண்டிகோவின் செயல்பாடு நவம்பரில் 67.70% மற்றும் அக்டோபரில் 84.1% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், நவம்பரில் மொத்தமாக இண்டிகோ 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பட மூலாதாரம், AFP via Getty Images
இண்டிகோ கூறியது என்ன?
பெரிய அளவில் விமானங்கள் ரத்து செய்யப்படுவது, தாமதமாவது மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து இண்டிகோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"கடந்த இரண்டு நாட்களாக எங்கள் முழு நெட்வொர்க்கிலும் இண்டிகோவின் செயல்பாடு கணிசமாகக் குலைந்துள்ளதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம்," என்று இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
"சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலம் தொடர்பான கால அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமானப் போக்குவரத்து அமைப்பில் அதிகரித்து வரும் நெரிசல் மற்றும் புதிய பணியாளர் வரிசை விதிகள் (விமான கடமை நேர வரம்பு) போன்ற பல எதிர்பாராத செயல்பாட்டு சவால்களை எதிர்கொண்டுள்ளோம்."
"எங்கள் செயல்பாட்டில் இவ்வளவு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதுகூட சாத்தியமாகவில்லை. இந்த இடையூறைத் தடுக்கவும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், எங்கள் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அடுத்த 48 மணிநேரத்திற்கு நடைமுறையில் இருக்கும்."
"இது எங்கள் செயல்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும், எங்கள் நெட்வொர்க் முழுவதும் கால அட்டவணையை படிப்படியாக மீட்டெடுக்கவும் உதவும். வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைக்கவும், செயல்பாடுகளை விரைவில் சீராக்கவும் எங்கள் குழுக்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றன."
மேலும் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு உதவுவதாகவும், மாற்று ஏற்பாடுகளைச் செய்வது, கட்டணத்தைத் திரும்பத் தருவது ஆகிய தீர்வுகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
விமானிகள் அதிருப்தியில் இருப்பது ஏன்?
தி இந்து நாளிதழின் கூற்றுப்படி, அரசு புள்ளிவிவரங்கள் டிசம்பர் 2 அன்று இண்டிகோவின் 35% விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியதாகவும், டிசம்பர் 1 அன்று 49.5% விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியதாகவும் காட்டுகிறது.
"விமானிகளின் கடமைத் தரநிலைகள் நவம்பர் 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்ததில் இருந்து இந்த நெருக்கடி தொடங்கியது. விமான நிறுவனங்கள் அதற்கேற்பத் தங்களது பணியாளர் திட்டமிடலை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இதை ஓர் ஆண்டுக்கு ஒத்தி வைத்திருந்தது.
விமான நிறுவனங்கள் ஒருபுறம், இது செயல்படுத்தப்பட்டால் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தன. ஆனால் விமானிகளுக்கான அமைப்புகள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, ஏப்ரல் 2025இல் அதைச் செயல்படுத்துவதற்கான உத்தரவைப் பெற்றன," என்று தி இந்து எழுதியுள்ளது.

விமானிகள் எத்தனை மணிநேரம் வேலை செய்யலாம், எவ்வளவு ஓய்வெடுக்க வேண்டும் என்பது குறித்த புதிய விதிகள், விமானிகளின் சோர்வைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால், விமான நிறுவனம் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இந்த விதிகளை அங்கீகரிக்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 2025 உத்தரவின்படி, இது இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட இருந்தது. இதில் வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணிநேரத்தில் இருந்து 48 மணிநேரமாக அதிகரிப்பது உள்படப் பல விதிகள் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட்டன. அதே நேரம், இரவு நேரத்தில் விமானிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மீதமுள்ள விதிகள் நவம்பர் 1 முதல் செயல்படுத்தப்பட்டன.
"இந்த இறுதி விதிகள் செயல்படுத்தப்பட்ட பிறகுதான் விமான நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் போராடி வருகிறது," என்று தி இந்து நாளிதழ் கூறுகிறது
"தங்கள் விடுமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்று விமானிகளிடம் விமான நிறுவனம் கோரி வருகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் அதிருப்தி காரணமாக விமானிகள் ஒத்துழைக்கும் மனநிலையில் இல்லை.
டிஜிசிஏ தரநிலைகளின்கீழ் கூறப்படும் 13 மணிநேரத்திற்கும் மேலாகப் பணிபுரிவது, ரூ.7,000 கோடி லாபம் ஈட்டிய போதிலும் சம்பள உயர்வை வழங்காதது, விமானிகளின் கடமைகள் குறித்த புதிய விதிமுறைகளை விமான நிறுவனம் தனக்குச் சாதகமாகத் திரித்துக் கூறுவது தொடர்பான சமீபத்திய சர்ச்சை ஆகியவை விமானிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன," என தி இந்து குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












