You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் இந்து, முஸ்லிம் என்ற பெயர்களில் ஐஏஎஸ் அதிகாரி வாட்ஸ்ஆப் குழு தொடங்கியது ஏன்?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி செய்தியாளர்
கேரளாவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கேரள அதிகாரிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்திய ஆட்சிப் பணியின் அடிப்படை விதிகளை மீறியிருப்பதாக மற்ற அதிகாரிகள் கருதுகின்றனர்.
கேரள மாநில, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணன், வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என்.பிரசாந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான கோபாலகிருஷ்ணன், கடந்த மாதம் "இந்து அதிகாரிகள்" என்ற வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியிருந்தார். இப்படி ஒரு பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் குழுவை சில இளம் அதிகாரிகள் விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து மற்றொரு குழுவை கோபாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாட்ஸ் ஆப் குழுவிற்கு 'முஸ்லிம் குழு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற சில இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் பேசியபோது, இதுபோன்ற ஒரு சம்பவம் சிவில் சர்வீஸ் வரலாற்றில் 'இதுவரை நடந்ததில்லை' என்றனர்.
அரசு என்ன சொல்கிறது ?
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தகராறுகள் இதற்கு முன்பும் ஏற்பட்டுள்ளன. அது வழக்கம்தான்.
கடந்த 1990-91ஆம் ஆண்டில், கர்நாடகாவின் கூடுதல் தலைமைச் செயலருக்கும் அப்போதைய முதல்வரான எஸ்.பங்காரப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவத்தைப் போல, இதற்கு முன்பு நடந்ததில்லை என்று இந்த இரண்டு ஐஏஸ் அதிகாரிகளின் பணியிடைநீக்கம் குறித்து கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது.
“வகுப்புவாத அடிப்படையில், மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே குழுக்களையும் கூட்டணிகளையும் உருவாக்கும் முயற்சி இது. இந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் செயலால், மாநிலத்தில் உள்ள பிற ஐஏஎஸ் அதிகாரிகளின் உறவில் பிரிவினை ஏற்பட்டு, ஒற்றுமை குலையவும் வாய்ப்புள்ளது' என்று இச்சம்பவம் குறித்து கேரள அரசு கூறுகிறது.
வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என்.பிரசாந்தின் வழக்கைப் பொறுத்தவரை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்குக் காரணம் வேறு.
நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ. ஜெயதிலக் குறித்து சமூக ஊடகத்தில் 'இழிவான வார்த்தைகளை' பயன்படுத்தியதாக என்.பிரசாந்த் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
"இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடும் ஐஏஎஸ் அதிகாரிகளால் மாநில நிர்வாக இயந்திரம் களங்கப்படும். இதுபோன்ற கருத்துகள் இந்திய ஆட்சிப் பணியில் பிளவை உருவாக்கி, அதிகாரிகளிடம் முரண்பாட்டை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான செயல் என்று கருதும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
இந்திய ஆட்சிப் பணியில் முக்கியப் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற பெரும்பாலான அதிகாரிகள், கோபாலகிருஷ்ணனின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
"கோபாலகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அது மட்டும் போதாது. அவர் செய்த குற்றத்துக்காக மேல் முறையீடுகள் இன்றி அவரைப் பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது. இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கும் இந்திய ஆட்சிப் பணிக்கும் மிகவும் ஆபத்தானவை" என்று பிகார் அரசில் முதன்மைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி என்.எஸ்.மாதவன் பிபிசியிடம் கூறினார்.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் (Lal Bahadur Shastri National Academy of Administration) முசோரியில் உள்ளது. பயிற்சிக் காலத்தில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் முசோரி அகாடமியில் உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
"அதன் பிறகும் பிளவு ஏற்படுத்தும் மோசமான வேலைகளை அதிகாரிகள் செய்ய நினைப்பது மிகவும் ஆபத்தானது" என்று ஓய்வு பெற்ற அதிகாரியும் எழுத்தாளருமான என்.எஸ்.மாதவன் கூறினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இத்தகைய மோசமான நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற சஜன் பீட்டர் கூறினார்.
செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி புகார்
நவம்பர் 11 திங்கட்கிழமை இரவு, இந்த விவகாரம் குறித்து அரசாணை வெளிவந்தது. அதில் கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கோபாலகிருஷ்ணனின் மொபைல் ஹேக் செய்யப்பட்டதாகவும், அவரது அனுமதியின்றி ஒரு வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டு, பிறர் அக்குழுவில் சேர்க்கப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவருடைய செல்போனை சோதனைக்கு உட்படுத்தியபோது, செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது.
பிறகு அவருடைய செல்போனை காவல்துறை அதிகாரிகள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். தடயவியல் பரிசோதனைக்கு முன்பு சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியே பல முறை செல்போனை ரீசெட் செய்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், இந்த வாட்ஸ் ஆப் குழுவை ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் உருவாக்கியதை அரசு கண்டறிந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரிவினையை ஏற்படுத்தி, ஒற்றுமையை உடைப்பது இக்குழுவின் நோக்கமாக இருந்துள்ளது.
மறுபுறம், ஐஏஎஸ் என்.பிரசாந்த் வழக்கில், அவரது கருத்துகள் மிகவும் இழிவானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற கருத்துகள் மாநில நிர்வாக இயந்திரத்தின் மீதான நல்லெண்ணத்தைக் கெடுத்து, இந்திய ஆட்சிப் பணியில் களங்கம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது.
மேலும் இதுபோன்ற பிளவுவாதச் செயல்பாடு, அதிகாரிகளுக்கு இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும். இதனால் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படலாம்.
அது மட்டுமின்றி, "ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது, அவர் வகிக்கும் பதவிக்குப் பொருத்தமான செயல் அல்ல. கோபாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியின் 1968 (நடத்தை) விதிகளை மீறியுள்ளார்" என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இளம் அதிகாரி ஒருவர் இதற்கு எதிராகக் குரல் எழுப்பிய பிறகுதான் கோபாலகிருஷ்ணன் போலீசை அணுகியுள்ளார் என்றும் மாதவன் கூறினார்.
"அவர் இந்து வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியபோது, பல இளம் அதிகாரிகள் அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். பின்னர் அவர் ஒரு முஸ்லிம் குழுவைத் தொடங்கி தன்னை சரியானவராகக் காட்டிக்கொள்ள முயன்றுள்ளார். அதன் பிறகு அவருக்கு எதிராக மற்றோரு இளம் அதிகாரி ஒருவர் குரல் எழுப்பினார்" என்று அவர் கூறினார்.
“இன்றைய சூழலைப் பார்க்கும்போது, உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பார்கள் என்று இதுபோன்ற சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நினைத்துக் கொள்கிறார்கள்," என்று கூறும் மாதவன், இப்படிப்பட்ட செயல்களுக்கு அதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்கக்கூடும் என்று தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேவேளையில், “இந்தச் செயல்பாடுகளை இப்போதுள்ள இளம் தலைமுறை அதிகாரிகள் விமர்சிப்பதும் எதிர்ப்பதும் நம்பிக்கை அளிப்பதாகவும்” மாதவன் கூறினார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கூறுவது என்ன?
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் பங்கு என்ன என்பதை அறிய, கேரள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் பி.அசோக்கிடம் பேசியபோது, “அடிப்படையில், தனிநபர் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவிப்பதில்லை” என்று கூறுகிறார்.
மேலும், "கொள்கைரீதியாக, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் அரசுக்கும் இடையிலான விவகாரம் இது. நிலையான இயக்கச் செய்முறையின்படி (STANDARD OPERATING PROCEDURE), அந்த அதிகாரி எங்கள் சங்கத்திடம் இருந்து என்ன வகையான உதவிகளை எதிர்பார்க்கிறார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.
அதோடு, "நிச்சயமாக, அவருக்கு நாங்கள் உதவுவதற்கு முறையான வரம்புகள் உள்ளன. விசாரணையில் அவரது நடவடிக்கை முற்றிலும் தவறாக இருந்தால், அரசைச் சந்தித்து விசாரணை மனு அளிப்போம். அரசுதான் நமக்கு முதலாளி என்ற அடிப்படை எண்ணத்தில்தான் அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்" என்றார் பி.அசோக்.
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் ஒரு ஆய்வுக் குழு உள்ளதாகவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், ஆறு மாதங்களுக்கும் பிறகு இடைநீக்கங்களை அந்தக் குழு சரி பார்ப்பதாகவும் கூறுகிறார் பி.அசோக்.
அத்துடன், சஸ்பெண்ட் காலம் 12 மாதங்களுக்கு மேல் இருந்தால், அதற்கு இந்திய அரசின் ஒப்புதல் தேவை எனவும் கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் பி. அசோக் கூறுகிறார்.
மேலும் பேசிய அசோக் "ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதும் அரசாங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்தக் காலகட்டத்தில் அவருடைய சம்பளத்தில் 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும். அதனால் சஸ்பெண்ட் காலத்தையும் குறைக்க வேண்டும்."
அசோக் மேலும் கூறும்போது, "எந்தவொரு நபரும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும். மத அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்ட கூடாது.
அதிகார மட்டத்தில் தனக்கு மேல் இருப்பவர்களிடமும் கீழ் இருப்பவர்களிடமும் சமமான முறையில் நடந்து கொள்ளவும் சங்கத்தில் விதிமுறைகள் உள்ளன. அதிகாரிகள் பிற அதிகாரிகளை விமர்சிப்பதற்கும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன," என்று தெரிவித்தார்.
"யாருடைய தனிப்பட்ட குணங்களையும் தாக்கிப் பேசக்கூடாது. ஒருவருடன் தனிப்பட்ட உரையாடலில் பேசுவதற்கும் பொது வெளியில் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அதை அறிந்து செயல்பட வேண்டும். சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம்” என்று கேரள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் பி. அசோக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)